திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 18
ஆரா
திமுக தலைவர் களஆய்வில் புகார் பெட்டிகள் வைத்தார். அதில் யாரைப் பற்றி வேண்டுமானாலும் புகார் எழுதிப் போடலாம் என்றார். திமுக வரலாற்றில் முதன்முறையாக என்று சன் டிவிக்காரர் தொனியில் இதைக் கொண்டாடினார்கள் உடன்பிறப்புகள்.
ஆனால், களஆய்வெல்லாம் காலாவதியாகிவிட்டதா என்பதுதான் திமுக கீழ் நிலை நிர்வாகிகளின் அடிப்படைக் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலில்தான் கட்டமைப்புக்குப் பெயர் பெற்ற திமுகவின் பலம் இருக்கிறது என்பதே உண்மை.
கப்பலில் வேலை கிடைக்கப் போகிறது என்று செந்தில் கொடுத்த உத்தரவாதத்தை நம்பி, தன் வீட்டு முதலாளியான நம்பியாரையும் ஸ்ரீ வித்யாவையும் கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுப்பார் கவுண்டமணி. ஆனால், கொஞ்ச நேரத்தில் காட்சி மாறிவிடும். ‘ஏண்ணே அவசரப்பட்டு வேலையை விட்டீங்க?’ என்று செந்தில் ஜகா வாங்க, மீண்டும் தான் வேலை பார்த்த வீட்டுக்கே வந்து மதிப்பும் இல்லாமல் சம்பளமும் குறைவாய் வாங்கி வேலை பார்ப்பார் கவுண்டமணி.
உண்மையை சொல்லப்போனால் அந்த கவுண்டமணியின் மன நிலையில்தான் இருக்கிறார்கள் களஆய்வில் தத்தமது மாவட்டச் செயலாளர்கள் மீது புகார் சொன்ன ஒன்றியச் செயலாளர்கள், மாவட்டக் கழக துணை நிர்வாகிகள் உள்ளிட்ட கீழ் நிலை நிர்வாகிகள்.
‘என் மேலயே புகார் இருந்தாலும் தைரியமாக சொல்லலாம்’ என்று அறிவித்தார் அப்போதைய செயல் தலைவர். 2018 பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை களஆய்வு நடந்தது. அதில் மாவட்டச் செயலாளர்களை வைத்துக்கொண்டே ஸ்டாலின் கொடுத்த தைரியத்தில் பல உண்மைகளை உடைத்தார்கள் ஒன்றியச் செயலாளர்கள்.
செயல் தலைவரின் வேகத்தைப் பார்த்து, ‘சரி நாம அவ்ளதான், நம்மை மாவட்டச் செயலாளர் பதவியிலேர்ந்து தலைமை தூக்கப் போகுது’ என்று பதற்றமான மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மீது புகார் சொன்ன ஒன்றியச் செயலாளர்களிடம் முதலில் சரண்டர் ஆக ஆரம்பித்தனர். சமாதானம் பேச ஆரம்பித்தனர்.
களஆய்வு முடிந்த கொஞ்ச நாட்களில் தலைமை அனுப்பிய குழு திடீர் திடீர் என்று மாவட்டங்களுக்கு விசிட் அடித்து புகார் பெட்டியில் புகார் போட்டவர்களை நேரில் சென்று விசாரித்து, அந்தப் புகார்கள் உண்மையா என்று கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் விசாரித்தது. தலைமைக்கு அறிக்கையும் கொடுத்தது.
இதையெல்லாம் பார்த்து திமுக மாவட்டச் செயலாளர்கள் உண்மையிலேயே பயந்தனர். ‘தளபதியின் பாய்ச்சல் இப்படியே போனால் இன்னும் ஆறு மாசத்தில் கட்சியில் புது ரத்தம்தான் ஓடும். பரம்பரை சொத்து போல இருந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் பிடியிலேர்ந்து விடுபட்டுடும்’ என்று பல இளைய நிர்வாகிகள் நம்பிக்கையாய் காத்திருந்தனர்.
ஆனால், இந்த டிசம்பர் முடிந்து ஜனவரி முடிந்தால் களஆய்வின் முதலாம் ஆண்டு நிறைவு விழா வந்துவிடும். முழுதாய் பத்து மாதங்கள் ஆகிய பின்னரும் களஆய்வின் மீது முழுமையான நடவடிக்கை இல்லை.
இதனால் திமுகவுக்குள் டிரண்ட் மாறிவிட்டது.
செயல் தலைவர் ஸ்டாலின் தலைவராகிவிட்டார். அப்போதில் இருந்தே களஆய்வின் மீதான பிடியைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தினார்.
“நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாதங்கள்தான் இருக்கு. இப்ப போயி மாவட்டச் செயலாளர்கள் மேல கை வச்சா நல்லா இருக்காதுங்க. எப்படியும் பொதுத் தேர்தல் முடிஞ்சு, உட்கட்சித் தேர்தல் நடத்துவோம். அப்ப பாத்துக்கலாம்” என்று ஸ்டாலினுக்குக் கடந்த சில மாதங்களாகவே ஒரு யோசனை சொல்லப்பட்டு வருகிறது. இந்த யோசனையைச் சொல்கிறவர்கள் யார் என்பது முக்கியமான விஷயம்.
யாரெல்லாம் நடவடிக்கைக்கு உள்ளாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறதோ அவர்கள்தான் ஸ்டாலினிடம் இந்த யோசனையைச் சொல்கிறார்கள். அதாவது, ‘எங்க மேல நடவடிக்கை எடுத்தீங்கன்னா, அது தேர்தல்ல எதிரொலிக்கும்’ என்று நேரடியாகச் சொல்வதைக் கொஞ்சம் பொட்டு வைத்து பூ வைத்து மென்மையாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இதன் பின்னர்தான் திமுகவின் டிரண்ட் மாறியது. அதாவது தளபதி நம் மீது நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்று பயந்த மாசெக்கள் எல்லாம், ‘இப்போதைக்கு தளபதி நம்ம மேல கை வைக்க மாட்டாரு’ என்ற உத்தரவாதத்தைப் பெற்றுவிட்டார்கள். அதனால், தாங்கள் ஆரம்பத்தில் எந்தெந்த ஒன்றியச் செயலாளர்களிடம் சமாதானம் பேசினார்களோ, அவர்களிடம் இப்போது சவால் விட ஆரம்பித்துவிட்டார்கள்.
அதோடு நிற்கவில்லை. தங்கள் மீது புகார் சொல்லிய ஒன்றியச் செயலாளர்களை அடுத்த உட்கட்சித் தேர்தலில் நசுக்கிவிட்டு, தங்களுக்குத் தோதான ஒன்றியங்களைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இது கட்சிக்கு அடுத்த கட்ட ஆபத்து.
வடமாவட்டம் ஒன்றில் பெரும்பான்மையான ஒன்றியச் செயலாளர்கள் தங்கள் மாவட்டச் செயலாளர் மீது கடுமையான புகார்களை அடுக்கினார்கள்.
“என்னைக் கூப்பிட்டு எதிர்க்கட்சிக்கு வேலை பார்க்கச் சொன்னாருங்க. நம்ம வேட்பாளரைத் தோற்கடிக்கச் சொன்னாருங்க. அதுக்காக அதிமுக காரங்கிட்ட காசு வாங்கச் சொன்னாருங்க” என்று அன்றைய செயல் தலைவர், இன்றைய தலைவர் முன்னிலையில் பொங்கி வெடித்தனர் பல ஒன்றியச் செயலாளர்கள்.
அதைக் கேட்டு அதிர்ந்த ஸ்டாலின், “இதுவரைக்கும் ஆய்வு செஞ்ச மாவட்டங்கள்லயே ரொம்ப மோசமான மாவட்டம் நீங்கதான்” என்று வெளிப்படையாகக் கூறினார்.
“அந்த மோசமான ‘மாவட்டம்’ தான் இன்று தலைவரின் பெரும்பாலான பயணங்களில் பக்கத்திலேயே அமர்ந்து அவரோடு பாசமாகப் பயணிக்கிறார். நாங்கள் எந்தத் திசையில் பயணிக்க?” விழிகள் நீர் மல்கக் கேட்கிறார் அந்த ஒன்றியச் செயலாளர்.
(பயணிப்போம்)
முந்தைய பகுதிகள்
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 1]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 2]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 3]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 4]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 5]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 6]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 7]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 8]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 9]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 10]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 11]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 12]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 13]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 14]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 15]