ஸ்டாலினை முந்தும் மாவட்ட மன்னர்கள்! – மினி தொடர் – 17

அரசியல் சிறப்புக் கட்டுரை

திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 17

ஆரா

கலைஞரின் உருவச் சிலை அண்ணா அறிவாலயத்தில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. அறிவாலயத்தில் வாசலில் உள்ள வளாகம்தான் நிகழ்ச்சி நடக்குமிடம். இதனால் ஏராளமான பேரை உள்ளே அனுமதிக்க முடியாது.

அதுவும் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட எஸ்பிஜி பாதுகாப்பு பெற்றவர்கள் வருகை தருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சில நூறு பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்தனர். வாசலில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருந்தனர். உள்ளே விழா நடக்கும் அரங்கத்தைச் சுற்றி மறைப்புகள் வைக்கப்பட்டிருந்ததால் வெளியே நிற்கும் யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

கொஞ்ச நேரத்தில் சிலை திறக்கப்பட்ட நிலையில் அறிவாலய வாசலில் இருக்கும் தேனாம்பேட்டை சாலையின் மையத்தில் உள்ள செண்டர்மீடியன் எனப்படுகிற சாலையைப் பிரிக்கும் தடுப்பின் மீதேறி ஒருவர் எட்டிப் பார்த்தார்.

‘ஹே…. தலைவர் தலை தெரியுது” என்று அவர் சொன்னதுதான் தாமதம். வெளியே காத்துக் கிடந்த ஆயிரக்கணக்கான பேர் கலைஞருடைய சிலையின் தலையை மட்டும் வெளிச்சமாய் பார்க்கத் திரண்டனர்.

கலைஞர் இருக்கும்போது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும்போது அவரது தலையைப் பார்த்துவிட்டால் எப்படி தொலை தூரத்தில் இருக்கிற தொண்டனுக்குக்கூட ஒரு மின்சாரம் கடத்தப்படுமோ அதேபோல, அதற்குக் குறைவில்லாத, இன்னும் சொல்லப் போனால் அதைவிட கொஞ்சம் அதிகப்படியாகவே தலைவரின் சிலை முகத்தைப் பார்த்ததும் பரவசமானார்கள் தொண்டர்கள்.

மறைப்பையும் தாண்டி வெளியே கலைஞர் தலையை நீட்டி ச் சாலையில் திரண்ட தொண்டர்களைப் பார்த்துச் சிரித்தார். அப்படி ஒரு மின்சார அதிர்வு தொண்டர்களிடம் இருக்கிறது.

இப்படிப்பட்ட தொண்டர் பலம்தான் திமுகவின் உண்மையான பலம். ஆனால் இவர்களை மதிக்காமல் ஒரு கூட்டம் திமுகவில் வளர்ந்து ஒரு பெரும் இடத்தைப் பிடித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் பொதுக்கூட்டத்தில் கூடியிருந்த பல திமுக தொண்டர்களிடமும், திமுக நிர்வாகிகளிடமும் பேசினோம். திருவள்ளூர் மாவட்டம், காஞ்சி மாவட்டம், விழுப்புரம் மாவட்டம், திருவாரூர் மாவட்டம், மதுரை மாவட்டம், கடலூர் மாவட்டம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் என தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்களை கலைஞர் சிலை திறப்பு பொதுக்கூட்டத்தில் பார்க்க முடிந்தது.

அவர்களிடம் பேசும்போதுதான் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்நோக்கியிருக்கிற பெரும் சவால் ஒன்று நமக்கு வெளிப்பட்டது.

படித்து, பணியாற்றும் அந்த நபர் திமுகவின் எந்த பொறுப்பிலும் இல்லை. ஆனால் அப்பா காலத்திலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவுக்குத்தான் ஓட்டு போடுவதாக நம்மிடம் கூறினார்.

தர்மபுரியைச் சேர்ந்த அந்த இளம் தொண்டர் நம்மிடம், “என் உறவினர் கட்சியில் அடிமட்ட பொறுப்பில் இருக்கார். தினம் தினம் அவர் பாடும் பாடு சொல்லி மாளாது.

மேடையில ராகுல் காந்தி உக்காந்திருக்காரு. தளபதி உக்காந்திருக்காரு. இந்த ரெண்டு பேரும் இன்னிக்கி அவங்கவங்க கட்சியில எதிர்நோக்குறது ஒரே சவாலைதான். மக்கள் இவர்களை நம்புறாங்க. ஆனா கட்சிக்குள்ள இருக்குற மூத்தோர்களும் பழம் தின்னு கொட்டை போட்டவர்களும் பெரும் வேகத் தடையா இருக்காங்க. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்துல முதல்வர் பதவிய இளைஞர்கள்கிட்ட கொடுக்க நினைச்சாரு ராகுல். ஆனால் அவரால பல கட்டப் போராட்டத்துக்குப் பிறகு சச்சின் பைலட்டை துணை முதல்வராதான் ஆக்க முடிஞ்சது. தன் இஷ்டப்படி இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார்னா காங்கிரசிலுள்ள கிழ நரிகள் ராகுல் காந்திக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர் வேலை செய்வதற்கும் தயாரா இருக்காங்க. இதேதான் சார் திமுகவுல ஸ்டாலினுக்கும் நடக்குது” என்றார்.

“சொல்லுங்க” என்றேன் அவரை நோக்கிக் காது தீட்டி.

“ஸ்டாலினை கிட்டத்தட்ட மக்கள் ஏத்துக்கிட்டாங்க. ஆனால் கட்சிக்குள்ள நிலவுற பிரச்னையால ஒவ்வொரு மாவட்டத்துலயும் ஒன்றியத்துலையும் சீனியர்கள் ஏற்படுத்தி வச்சிருக்குற தடைக் கற்களை உடைச்சாதான் திமுகவுக்கு முழு வெற்றி கிடைக்கும். அதுக்கு கள ஆய்வுல தொண்டர்கள் கொடுத்த புகார்கள் மேல தளபதி நடவடிக்கை எடுக்கணும். தன் மேல புகார் கொடுத்த ஒன்றியச் செயலாளர்கள் மேல மாவட்டச் செயலாளர்கள் நடவடிக்கை எடுக்கறதுக்குள்ள தலைமை மாவட்டச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கணும்” என்கிறார்.

ஓ… அது வேறு நடக்கிறதா?

(பயணிப்போம்)

முந்தைய பகுதிகள்What is Happening in DMK Mini Series 17

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 1]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 2]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 3]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 4]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 5]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 6]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 7]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 8]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 9]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 10]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 11]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 12]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 13]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 14]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 15]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 16]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *