சபரீசனின் சதுரங்க வேட்டை! – மினி தொடர் – 16

அரசியல் சிறப்புக் கட்டுரை

திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 16

ஆரா

சபரீசனைப் பற்றி இன்று நேற்றல்ல; சில வருடங்களாகவே திமுகவில் பேச்சுகள் நடக்கின்றன. திமுக செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் தனது புதுமைகளைத் தன் மாமனாரின் அரசியல் வாழ்வுக்குச் செலவிட முடிவு செய்து அதன்படியே செயல்படுத்த ஆரம்பித்தார் என்கிறார்கள் சபரீசன் தரப்பினர்.

அவர் மாவட்ட, லோக்கல் அரசியல் பண்ணுவதற்காக வரவில்லை. அது அவர் நோக்கமும் இல்லை. ஆனால், அவருக்கு என்று இப்போது திமுகவில் ஓர் அடிப்படை டீம் இருக்கிறது. ஐடி விங் தலைவர் பிடிஆர்.தியாராஜன் எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி என்று தனக்கு வேண்டப்பட்டவர்களை மையப்படுத்திச் சில விஷயங்களைச் செய்துவருகிறார் சபரீசன்.

தீபாவளிக்குப் பிறகான சில வாரங்களில் டெல்லி சென்ற சபரீசன் அங்கே பத்து நாட்களுக்கு மேல் தங்கியிருக்கிறார் என்ற ஒரு தகவல் திமுகவின் உயர் வட்டாரங்களில் அப்போது விவாதிக்கப்பட்டது. அது ஏன் என்பதற்கும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.

“சபரீசன் டெல்லியில் காங்கிரஸ், பாஜக என்று தரப்பினருடனும் டச்சில் இருக்கிறார். வழக்கமான அரசியல்வாதிகள் நடத்தும் பேச்சுவார்த்தைகள் இப்போதைய அரசியல் உலகில் எடுபடுவதில்லை. தொழில் தொடங்குவதற்கான லாபி போல, பார்ட்னர்களின் பேச்சுவார்த்தை போல அரசியல் மாறி வெகு காலம் ஆகிவிட்டது.

கொள்கை முழக்க அரசியலைத் தாண்டி, பிசினஸ் கார்ப்பரேட் அரசியல்தான் இப்போது ட்ரெண்டிங். அதைத்தான் கையிலெடுத்திருக்கிறார் சபரீசன். திமுகவின் அடிப்படைக் கொள்கைகளில் மாற்றம் கிடையாது. ஆனால், அணுகுமுறைகளில் மாற்றம் வேண்டும் என்ற இளைய தலைமுறையின் பிரதிநிதியாக இருக்கிறார் சபரீசன். அதனால்தான் அவர் ஸ்டாலினுடைய அரசியல் வளையத்தில் அசைக்க முடியாத சக்தி ஆகிவிட்டார்.

ஸ்டாலின் தொடங்கத் திட்டமிட்டிருக்கும் புதிய டிவிக்கான அச்சாரப் பணிகளுக்காகத்தான் அவர் டெல்லி சென்றார்” என்று இளைஞரணிப் பிரமுகர்கள் நம்மிடம் கூறுகிறார்கள்.

ஆம்… டெல்லி அரசியல் என்பது எப்போதுமே தனி அரசியல். இப்போது மேலும் மாறிவிட்டது. அங்கே ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதால் இப்போது எதையும் சாதித்துவிட முடியாது. நாடாளுமன்றம் செல்லும் எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் ஜந்தர் மந்தரில் ஒரு காலத்தில் இருந்தன. மதியம் சாப்பிட, ஓய்வெடுக்க அங்குதான் வருவார்கள் எம்.பி.க்கள். அதனால் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்திப் போராடுபவர்கள் ஜந்தர் மந்தரில் போராடுவார்கள். அப்படிப் போராடும்போது எம்.பி.க்களின் பார்வையில் படும். அதை நாடாளுமன்றத்தில் எழுப்புவார்கள் என்பதால்தான் ஜந்தர் மந்தரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் நடத்தப்படும்.

ஆனால், இப்போது டெல்லி ஜந்தர் மந்தர் அரசியலை எல்லாம் கடந்துவிட்டது. யாரை யார் மூலம் பார்க்க வேண்டுமோ அவரைப் பார்த்துக் கோரிக்கை வைத்தால், அது நடந்துவிடும் என்பதுதான் டெல்லியின் நவீன அரசியல் வடிவம். அதாவது போராட்டங்களால் சாதிக்க முடியாதவற்றை ‘பிசினஸ் மீட்டிங்’ குகளால் சாதித்து விடலாம் என்று ஆகிவிட்டது. இது மாண்பு அரசியலுக்குப் பின்னடைவு என்று ஒருபக்கம் கருதப்பட்டாலும், மாடர்ன் அரசியல் இப்படித்தான் இருக்கிறது.

அது மட்டுமல்ல, ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்’ என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவரே, ‘லாபி அரசியல்’என்றால் என்ன என்பதை விளக்கிவிட்டார். அந்த லாபி அரசியல் பொறுப்பைத்தான் சபரீசனிடம் விட்டிருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலயத்தின் அலுவலர்கள் சிலரே.

What is Happening in DMK Mini Series 16

சமீபத்திய ஸ்டாலினின் டெல்லி பயணத்தில் அரசியல் தலைவர்களின் அப்பாயின்ட்மெண்ட்களை எல்லாம் ஃபிக்ஸ் செய்தவர் கனிமொழி என்கிறார்கள். ஆனால், ஒரு புகைப்படத்தில் சபரீசனை இடம்பெற வைத்து, கட்சியில் சபரீசனுக்கு என்ன இடம் என்ற விவாதத்தை ஏற்படுத்திவிட்டார் ஸ்டாலின்.

அப்படியென்றால் இதுவரை டெல்லியில் திமுக சார்பாகக் கோலோச்சி வந்த கனிமொழியின் செல்வாக்கு டெல்லியில் சரிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உற்று நோக்கி ஊன்றிக் கவனித்த வரையில், டெல்லியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முனைகிறார் ஸ்டாலின் என்பது தெரிகிறது.

ஏற்கெனவே 2007 முதல் 2013, பின் 2013 முதல் 2019 என இருமுறை ராஜ்யசபா எம்.பி.யாக திமுக சார்பில் அனுப்பப்பட்டார் கனிமொழி. அவரது ராஜ்ய சபா பதவிக் காலம் 2019 ஜூலையோடு முடிகிறது. மீண்டும் ராஜ்யசபாவுக்கு கனிமொழியை அனுப்பாமல் அவரது இடத்துக்கு சபரீசனை ஸ்டாலின் அனுப்பலாம் என்ற பேச்சு திமுகவின் தலைமை நிர்வாகிகளிடத்தில் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. அதன் மூலம் சபரீசனின் அந்த அணுகுமுறை மாற்ற அரசியலைக் கூர்மைப்படுத்தலாம் என்று ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார்.

இந்த அலைபாய்தலை அவதானித்துத்தான் ராஜ்யசபையை விட்டு மக்களவைக்குச் செல்ல முடிவெடுத்து தூத்துக்குடி தொகுதியைத் தனக்காக தயார் படுத்திக்கொண்டிருக்கிறார் கனிமொழி என்றும் தென்மாவட்ட திமுகவுக்குள் திடீர் பேச்சுகள் நடக்கின்றன.

What is Happening in DMK Mini Series 16

சபரீசனுக்காக நடத்தப்படும் அல்லது சபரீசனே நடத்தும் இந்தச் சதுரங்க வேட்டையில் ஏற்கெனவே டெல்லியில் கோலோச்சிய சில திமுக பழங்கள் என்ன நிலை எடுக்கும் என்பதும் எதிர்பார்ப்புக்கு உரியதே!

(பயணிப்போம்)

முந்தைய பகுதிகள்

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 1]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 2]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 3]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 4]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 5]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 6]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 7]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 8]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 9]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 10]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 11]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 12]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 13]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 14]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 15]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *