திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 15
ஆரா
ரீசன் இல்லாமல் எதையும் செய்ய மாட்டாரே சபரீசன்?
இப்படி ஒரு கேள்விக்குறியோடு மினி தொடரின் நேற்றைய கட்டுரையை முடித்திருந்தது பற்றி திமுகவினர் சிலர் அலைபேசியில் தொடர்புகொண்டு என்ன ரீசன் என்றனர். இந்தக் கட்டுரையின் உள்ளீட்டைத்தான் ஒற்றை வரியில் கொடுத்திருந்தோம், பொறுத்திருந்து படியுங்கள் என்று பதிலளித்தேன்.
போலச் செய்தல் அதாவது இமிடேட் செய்தல் என்பது ஒருவகையான கலை. சில விஷயங்கள் நமக்குத் தெரிந்தோ, நமக்குத் தெரியாமலோ போலச் செய்தல் வகையாகவே பார்க்கப்படும். அதாவது இன்று நாம் பக்காவாகத் திட்டமிட்டுச் செய்யும் ஒரு செயல், நமது முன்னோர்களால் செய்யப்பட்டது போலவே இருக்கும். அதற்காக இரண்டையும் ஒப்பிட முடியாது, ஒப்பிடக் கூடாது. ஆனால் ஒருவகையில் உற்று நோக்கினால் இரண்டு செயல்பாடுகளுக்கும் இடையே ஏதோ ஓர் ஆழமான ஒற்றுமை இழை இருக்கும்.
1967 சட்டமன்றத் தேர்தலில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் வரலாற்றைப் புரட்டிப் போட்டு தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. இந்தியா முழுதும் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த வரலாற்றைப் படைத்த அண்ணா 1967 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடவில்லை. மாறாக அப்போது அவர் தென்சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் வென்று எம்பியாக இருந்தார். திமுக ஆட்சி அமைத்ததும் அண்ணா மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனார்.
அண்ணா நின்று வென்ற தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு 1967இல் இடைத்தேர்தல் வந்தபோது கலைஞர் சமயோசிதமாக தன் அக்கா மகனும் அப்போது முரசொலி ஆசிரியராக இருந்தவருமான தனது மாப்பிள்ளை முரசொலி மாறனை அந்த இடத்தில் நிற்க வைத்து ஜெயிக்க வைத்தார்.
அப்போது முதற்கொண்டு மக்களவை, மாநிலங்களவை, மக்களவை என்று முரசொலி மாறனைத் தனது டெல்லியின் பிரதிநிதியாக தொடர்ந்து வளர்த்து வார்த்தெடுத்தார் கலைஞர். அப்போது திமுகவின் சார்பாக நாடாளுமன்றத்தில் கோலோச்சிய இரா செழியன், ராசாராம், நாஞ்சில் மனோகரன் ஆகியோருக்கு இடையில் முரசொலி மாறன் டெல்லியில் திமுகவின் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார். கலைஞரின் மனசாட்சி என்றும், திமுகவின் மூளை என்றும் அவர் வர்ணிக்கப்பட்டார்.
கலைஞர் அன்று தன் மருமகனை, அரசியல் ஆளுமை பொருந்திய முரசொலி மாறனை டெல்லிக்கு அனுப்பினார், அன்றைய தேசிய அரசியல், மாநில அரசியல் இரண்டுக்குமான பாலமாக முரசொலி மாறனைப் பயன்படுத்தினார். மாறன் எமெர்ஜென்சியில் புடம் போடப்பட்டார். கலைஞர் கொண்டுவந்தார் என்பதைத் தாண்டி தன்னைத் தானே பல வகைகளில் செம்மைப்படுத்திக்கொண்டார்.
இதைக் கண்களில் நீர் கோர்க்க நினைவுகூர்ந்த, எழுபது வயதாகும் சீனியர் திமுக இலக்கிய அணிப் பிரமுகர் ஒருவர், “கலைஞரும்தான் இந்த இயக்கத்துக்காக ஒரு மாப்பிள்ளையைக் கொண்டுவந்தார். திராவிட இயக்க வரலாறு, மாநில சுயாட்சி பற்றிய புரிதல் கொண்ட ஒரு மாப்பிள்ளையைக் கொண்டு வந்தார். ஆனால் இன்று ஸ்டாலின் ஒரு மாப்பிள்ளையைக் கொண்டுவருகிறாரே? சபரீசன் கட்சிக்காக, இயக்கத்துக்காக என்ன செய்துகொண்டிருந்தார், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்றே தெரியாத நிலையில்தான் தன் மாப்பிள்ளையைக் கொண்டுவருகிறார் ஸ்டாலின் ” என்று சொன்னபோதுதான் முரசொலி மாறனையும், சபரீசனையும் அவர்கள் போலச் செய்தல் என்ற ஒரு பிம்பத்துக்குள் கொண்டுவருகிறார்கள் என்று புரிந்தது.
நீங்கள் உடனே கலைஞர் – முரசொலி மாறன் என்றும் ஸ்டாலின் – சபரீசன் என்றும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. கலைஞருக்கு உறவு முரசொலி மாறன், ஸ்டாலினுக்கு உறவு சபரீசன். இங்கே உறவு என்ற ஒற்றை விஷயத்தைத் தவிர இருவரையும் ஒப்பிடுவது என்ற வார்த்தையே வரலாற்றுப் பிழை. இருவரும் ஒப்பிடுவதற்கான ஆளுமைகள் அல்லர்.
கலைஞர் தன் மாப்பிள்ளையைத் தன்னோடு வார்த்தார். அதன் மூலம் கட்சிக்கும், நாட்டுக்கும் நன்மை சேர்த்தார். இப்போது ஸ்டாலின் தன் மாப்பிள்ளையைக் கொண்டுவந்து யாருக்கு நன்மை சேர்க்கிறார் என்ற கேள்விதான் வரலாறு தெரிந்த திமுகவினரிடையே தொக்கி நிற்கிறது.
கடந்த வாரம் திமுக தலைவராக சாணக்யபுரியான டெல்லிக்கு முதல் அரசியல் பயணம் மேற்கொண்டார் ஸ்டாலின். முக்கியமான தலைவர்கள் தாங்கள் யாரை முன்னிறுத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். குறிப்பால்தான் உணர்த்துவார்கள்.
இதுவரை ஓஎம்ஜி, திமுக ஐடி விங் என ஸ்டாலினைச் சுற்றிய ஒரு சிறு வட்டத்துக்குள் நிழலாக உலவிக்கொண்டிருந்த சபரீசன் டெல்லியில் தன் மாமா ஸ்டாலினோடு உலவுகிறார். திமுகவுக்காக டெல்லியில் பழம் தின்று கொட்டை போட்ட டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா, கனிமொழி போன்றோரோடு சோனியாவுடனான சந்திப்பில் போட்டோ ஃப்ரேமில் சபரீசனும் இடம்பிடித்தார். இதுவரை கிச்சன் கேபினட்போல உள்ளுக்குள்ளேயே உலவிக்கொண்டிருந்த மருமகனுக்கு டெல்லியில் அரங்கேற்றம் செய்து வைத்துவிட்டார் ஸ்டாலின். அந்த ஒரு புகைப்படம் திமுகவுக்குள் இப்போது இரண்டாம் கட்டத் தலைவர்களிடையே விவாதத்தை ஏற்படுத்திவருகிறது.
“அண்மைக் காலமாக டெல்லியில் வீடு எடுத்து தங்கிவிட்டார் சபரீசன். இனி தன் மாமனாருக்கான டெல்லி வேலைகளை அவர்தான் பார்க்கப் போகிறார். அவருக்கு முக்கியமான பாஜக, காங்கிரஸ் புள்ளிகளை எல்லாம் தெரியும்” என்றெல்லாம் திமுகவுக்குள்ளேயே குரல்கள் உருவாகி ஒலிக்கின்றன.
சோனியாவுக்கும் ராகுலுக்கும் இடையே சபரீசன் நின்ற ஒரு புகைப்படம் திமுகவின் அடுத்த சில ஆண்டுகளின் வரலாற்றை எழுதப் போகிறது என்கிறார்கள் சிலர். அது என்ன மாதிரியான வரலாறாக இருக்கப்போகிறது என்று கேட்கிறார்கள் சிலர்.
(பயணிப்போம்)
முந்தைய பகுதிகள்
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 1]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 2]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 3]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 4]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 5]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 6]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 7]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 8]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 9]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 10]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 11]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 12]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 13]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 14]