திமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் – 14
ஆரா
ஸ்டாலின் தனி விமானத்தில் வந்துபோகிற அளவுக்கு அந்தத் திருமணம் முக்கியத்துவமானது. நாமக்கல் மாவட்டம் வெண்ணாந்தூரைச் சேர்ந்த மகேஷ் என்ற அந்த இளைஞரின் திருமணம் அவரது பாரம்பரிய முறைப்படி ராசிபுரம் அருகே கோயிலில் நடைபெற்றது. இத்திருமணத்துக்கு தாலி எடுத்து நடத்திக் கொடுத்தவர் திமுகவின் முதன்மைப் பெண்மணி ’ஃபர்ஸ்ட் லேடி’ என்று இப்போது அழைக்கப்படத் தொடங்கியிருக்கும் துர்கா ஸ்டாலின்.
திருமணம் முடிந்ததும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஸ்டாலின் வந்தார். சென்னையில் இருந்து சேலத்திற்கு தனி விமானம் மூலம் சென்றவர், அங்கிருந்து சேலம்-நாமக்கல் ரோடு அருகே உள்ள ராசி மஹால் திருமண மண்டபத்தில் நடந்த தினேஷ் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று வாழ்த்திவிட்டுப் புறப்பட்டார்.
அவரோடு தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் ஆஜர். துரைமுருகன், ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி இவர்களோடு பொன்முடி என்று பல திமுக முக்கியஸ்தர்கள் இந்தத் திருமண விழாவிலே கலந்துகொண்டனர்.
திமுகவினரே இந்தத் திருமணத்துக்கு ஸ்டாலின் வந்து சென்ற முறையைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
ஸ்டாலினுக்காக அவரது மருமகன் சபரீசனால் உருவாக்கப்பட்ட ஓஎம்ஜியில் ஆரம்ப காலத்தில் துடிப்பாகச் செயல்பட்டவர் தினேஷ். இந்தத் துடிப்பின் காரணமாக ஸ்டாலினின் தனிப்பட்ட உதவியாளராகவே சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஸ்டாலின் பக்கத்தில் தினேஷ் இருந்தால் ஸ்டாலினின் குடும்பமே கூட இருக்கிற மாதிரி. அந்த அளவுக்கு துர்கா ஸ்டாலின், சபரீசன் ஆகியோரின் நம்பிக்கைக்கு உரியவராகிவிட்டார் தினேஷ்.
ஆரம்பத்தில் ஓஎம்ஜி என்பதன் அடையாளமாக இருந்த சுனில், தினேஷ் ஆகியோர் இப்போது தனித்தனி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பணியில் சென்னையைச் சேர்ந்த ஒரு திமுக எம்.எல்.ஏ.வின் மகனும் முழு அளவில் ஈடுபட்டிருந்தார். டிஜிட்டல் புரமோஷன் என்ற வகையில் அவர்கள் ஸ்டாலினுக்கு சில பல உயர்த்தல் வேலைகளை செய்துகொண்டிருந்தனர்.
ஆனால் திமுகவில் ஐடி விங் என்றோர் அணி மதுரை பிடிஆர். தியாகராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட பிறகு ஓஎம்ஜியின் பல்வேறு பணிகள் குறைந்துபோயின. இப்போது திமுக தலைமைக் கழகத்தில் சொல்வது என்னவென்றால், ஓஎம்ஜி மெல்ல மெல்ல திமுக ஐடி விங்கோடு கரைக்கப்பட்டு வருகிறது என்பதுதான்.
இந்த லிங்க்கை வைத்து நம் விசாரணையில் ப்ரவுஸ் செய்து பார்த்தால் மேலும் பல விண்டோக்கள் விரிகின்றன.
“தலைவர் ஸ்டாலினுக்காக உருவாக்கப்பட்ட ஓஎம்ஜி முழுக்க முழுக்க அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. கட்சிக்கும் அதற்கும் தொடர்பில்லை. ஸ்டாலினின் மருமகன் சபரீசன்தான் இதை முழுக்க முழுக்க ஒருங்கிணைத்தார்.
இதே நேரம் திமுகவில் அண்மையில் துடிப்பாக தொடங்கப்பட்டிருக்கும் ஐடி விங் – ஓஎம்ஜி இடையே என்ன விதத்தில் வேறுபாடு என்ற விவாதம் எழுந்தது. ஸ்டாலினின் பர்சனலாலிட்டி மேம்பாட்டுப் பணிகளில் தொடர்ந்து ஓஎம்ஜி ஈடுபடும். திமுக ஐடி விங் கட்சி ரீதியான பணிகளைச் செய்யும் என்று பேசப்பட்டது.
ஆனால் இப்போது கிடைக்கும் தகவல் என்னவென்றால் ஓஎம்ஜி என்ற அமைப்பு மெல்ல மெல்ல ஐடி விங்குடன் இணைக்கப்பட்டது. தான் தனியாகச் செய்த பணிகளை இனி ஐடி விங்கோடு சேர்ந்து ஓஎம்ஜி செய்யும் என்பதுதான். இந்த ஒருங்கிணைப்பு சபரீசன் மூலமாகவே நடைபெறுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐடி விங் என்று ஆரம்பித்த சபரீசனின் கரங்கள் இப்போது அதைத் தாண்டி இளைஞரணியிலும் ஊடுருவியிருக்கின்றன. திமுகவின் கிச்சன் கேபினட் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர்களைத் தாண்டி தனது முடிவுகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதற்காகத்தான் ஓஎம்ஜி கட்சியின் ஐடி விங்கோடு கரைக்கப்பட்டது” என்கிறார்கள் மேற்கு மாவட்ட திமுக முன்னணியினர் சிலர்.
ஆனால் கிராமிய பாஷையில் பேசும் ஒரு திமுக மாவட்டச் செயலாளரோ, “ஓஎம்ஜி சித்தூர்ல ஒரு ஆபீஸ் தெறந்துட்டாங்களாம். சித்தூர்ல இருந்து சில வேலைகளைச் செய்யுறாங்களாமாம்” என்றார் புதிய தகவலை.
ரீசன் இல்லாமல் எதையும் செய்ய மாட்டாரே சபரீசன்!
(பயணிப்போம்)
முந்தைய பகுதிகள்
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 1]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 2]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 3]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 4]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 5]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 6]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 7]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 8]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 9]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 10]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 11]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 12]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 13]