திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர்-13
– ஆரா
திமுக தலைவர் ஸ்டாலினுடைய கொளத்தூர் தொகுதியில் ஓஎம்ஜி சார்பில் பூத் கமிட்டிகள் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்த்தோம். இதைப் படித்துவிட்டு,”நல்ல வேளை மத்த மாவட்டங்களுக்கும் ஓஎம்ஜிய அனுப்பலை” என்று வாய்விட்டு பல உடன்பிறப்புகள் நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள்.
திமுகவின் தலைமைக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், மாவட்டச் செயலாளர்கள் பலர் என ஒரு சுற்று சுற்றி வந்து ஒரே ஒரு கேள்வியைதான் கேட்டோம்.
“அண்ணே ஓஎம்ஜின்னா என்ன” என்பதே அக்கேள்வி.
உண்மையிலும் உண்மையான பதில்களை உங்களுக்குத் தருகிறோம்.
“அது ஒரு ஐடி கம்பெனின்னே… தளபதியை ஃபுல் ஃபோகஸ் பண்றதுக்காக என்னன்னமோ பண்றாங்க” – இது ஒரு பதில்
“சுனில், தினேஷ்னு ரெண்டு பேர் இருக்காங்க. தளபதிஎந்தப் பக்கம் திரும்பணும்னு கூட அவங்கதான் சொல்றதா கேள்வி. இந்த ரெண்டு பேரையும் கொண்டுவந்தது தளபதியோட மாப்ளை சபரீசன் தான்”
-இப்படி ஒரு பதில்.
“ஸ்டாலின் செயல் தலைவரா இருந்தப்ப நமக்குநாமே பயணம் நடத்தி பெரியார், அண்ணா படத்தையெல்லாம் ஓரங்கட்டினாங்களே… அந்த டீமையா கேக்குறீங்க?”
-இப்படிக் கேட்டவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கரை வேட்டி.
“தலைமைக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இடையிலான தூரம் அதிகமாயிடுச்சு. அந்த கேப்லதான் ஓஎம்ஜி எல்லாம் ஆடிக்கிட்டிருக்கு”
-இப்படிச் சொன்னது மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது திமுக தொண்டர்.
இப்படியாக ஓஎம்ஜி யை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆளாளுக்கு ஒரு கோணத்தில் பார்க்கிறார்கள். புழுதி படிந்த கட்சிக்காரனுக்கும் ஓஎம்ஜிக்கும் தொடர்பில்லை. ஒவ்வொரு ஊருக்கும் கொடியேற்று விழா நடத்த வேண்டும் என்பதும் அதை சாக்காக வைத்து கழகத்தின் தொண்டர் முகத்தை தலைவரும், தலைவர் முகத்தைத் தொண்டனும் பார்க்க வேண்டும் என்பதுதான் கழகத்தினரின் விருப்பம்.
ஆனால், வாட்ஸ் அப்பில் வீடியோ, ஃபேஸ்புக்கில் லைவ் என தலைவரை ஏதோ ஒரு டீம் லீடர் போல ஆகிவிட்டதுதான் ஓஎம்ஜி என்கிறார்கள் பலரும்.
தொண்டர்களும், நிர்வாகிகளும் ஓஎம்ஜியை இப்படிப் பார்க்க தலைவர் அதை எப்படிப் பார்க்கிறார்?
ஓஎம்ஜி என்பது அவருக்கு இளைஞரணி மாதிரி, முரசொலி டிரஸ்ட் மாதிரி மிகவும் முக்கியமான ஓர் அங்கம். மோடியின் ப்ரமோஷன் டீமில் இருந்த தினேஷ் இந்த டீமுக்குக் கொண்டுவரப்பட்டார். ஓஎம்ஜி என்றாலே திமுகவில் சுனில், தினேஷ் ஆகியோர்தான் நினைவுக்கு வருவார்கள்.
ஸ்டாலினுடன் காரில் வரும் முக்கிய திமுக தலைவர்கள் கூட அவரது ஆழ்வார் பேட்டை வீட்டு வாசல் வரைக்கும்தான் செல்ல முடியும். ஆனால் சுனில் ஸ்டாலின் அறை வரை செல்லும் உரிமை படைத்தவர். ஸ்டாலின் எடுக்கும் சில முக்கிய முடிவுகளின்போது சுனிலும் உடன் இருக்கிறார் என்கிறார்கள் திமுகவில் தலைமைக் கழக நிர்வாகிகள்.
அடுத்து தினேஷ்….
ஸ்டாலினுடைய வலதுகரமாக இருக்கிறார். தனக்கு வரும் வாட்ஸ் அப் புகார்களை எல்லாம் தினேஷுக்குதான் ஸ்டாலின் ஃபார்வர்டு செய்கிறார். அவர்தான் அவற்றை விசாரித்து மீண்டும் அதன் உண்மைத் தன்மை பற்றியும் உடனடி நடவடிக்கை பற்றியும் ஸ்டாலினுக்குப் பரிந்துரை செய்கிறார்.
ஸ்டாலிக்கு இந்த தினேஷ் எவ்வளவு முக்கியமானவர் என்பதற்கு இன்னொரு சம்பவத்தை சென்னை செய்தியாளர்கள் சொல்கிறார்கள்.
“கடந்த 2017 பிப்ரவரி மாதம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி மர்மங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டாக்டர்களை வைத்து ஒரு பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்தார். ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட பல டாக்டர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு கலைஞர் டிவி, முரசொலி நிருபர்கள் எல்லாம் சென்றாலும் ஸ்டாலினுக்காக இந்த தினேஷும் பத்திரிகையாளராகவே சென்றார். மருத்துவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டார். அதுமட்டுமல்ல சில நிருபர்களிடம் குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்கச் சொன்னார். பின் ஸ்டாலினிடம் இதுபற்றிய முழுமையான ரிப்போர்ட்டை அளித்தார்” என்கிறார்கள்.
இப்போது புரிகிறதா ஸ்டாலினுக்கு எந்த அளவுக்கு தினேஷ் முக்கியமானவர் என்று!
அதனால்தான் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி ராசிபுரத்தில் நடந்த தினேஷின் திருமணத்துக்கு தனி விமானத்தில் வந்து வாழ்த்திவிட்டுப் போனார் ஸ்டாலின்.
தினேஷை தனிப்பட்ட முறையில் நாமும் வாழ்த்துவோம். ஆனால் ஓஎம்ஜியை கட்சியினர் வாழ்த்துகிறார்களா?
(பயணிப்போம்)
முந்தைய பகுதிகள்
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 1]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 2]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 3]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 4]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 5]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 6]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 7]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 8]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 9]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 10]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 11]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 12]