திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 11
– ஆரா
பொதுக்குழு, செயற்குழு, உயர்நிலை செயல் திட்டக்குழு இதுபோன்ற குழுக்கள் திமுகவில் அனைவருக்கும் தெரியும். ஆனால், ஓஎம்ஜி என்பது கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் ஒரு கண்.
ஆம்… ஸ்டாலினுடைய புரமோஷனுக்காக அமைக்கப்பட்ட இந்தக் குழுவுக்குப் பிறகுதான் சமூகதளங்களில் ஸ்டாலினின் செயல்பாடுகள் சுறுசுறுப்படைய ஆரம்பித்தன. அதுமட்டுமல்ல, திமுகவின் சகல மாவட்டங்களிலும் வளர்ச்சிக்கான மந்திரங்களையும் வழங்க வேண்டியதுதான் ஓஎம்ஜியின் பொறுப்பு.
ஓஎம்ஜி என்றால் என்ன? கழகத்தினரின் கண்ணுக்குத் தெரியாத கண். ஆனால், அந்தக் கண் சரியாகப் பார்க்கிறதா? தான் பார்த்த பிரச்சினைகளை சரியாகத் தீர்க்கிறதா?
ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நாம் 234 தொகுதிகளுக்கு ஒரு தொகுதியைப் பதமாகப் பார்ப்போமா? சும்மா சாதாரணத் தொகுதி அல்ல. திமுக தலைவர் ஸ்டாலின் இப்போது வென்று சட்டமன்றத்துக்குச் சென்றிருக்கக் கூடிய கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியையே பார்ப்போமே!
இன்னும் சொல்லப் போனால் மற்ற தொகுதிகளை எல்லாம்விட தலைவரின் கொளத்தூர் தொகுதி மட்டுமே ஓஎம்ஜியின் முழு கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது.
கொளத்தூர் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கையில் இருந்து, ஸ்டாலின் தொகுதி விசிட், மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல், பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்குதல், பெண்களுக்குத் தையல் மெஷின்கள் வழங்குதல், மருத்துவ முகாம் நடத்துதல், ரத்த தான முகாம்கள் நடத்துதல் என்று ஸ்டாலின் தொகுதியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஓஎம்ஜிதான் ஒருங்கிணைக்கிறது.
இதை மாடல் தொகுதியாக்கி, அதை மற்ற தொகுதிகளுக்கு முன்னுதாரணமாகக் காட்டவேண்டும் என்பதே ஸ்டாலின் உத்தரவு. கொளத்தூரில் இருந்து ஒரு குழந்தை அழுதால்கூட அது ஸ்டாலினுக்குச் சென்றுவிடும். அவர் நேரடியாக அந்தக் குழந்தையின் வீட்டுக்கே சென்று குறை கேட்பார். இப்படித்தான் ஓஎம்ஜி பற்றி குறிப்பு வாசிக்கிறார்கள் சிலர்.
சாக்கடை சரியில்லை என்று சொன்னால் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வந்து முனகினால் போதும். உடனே ஓஎம்ஜி டீம் அந்த வார்டின் மாநகராட்சி அதிகாரி யார் என்று உடனே தன் பட்டியலில் தேடி அவரது செல்போனுக்கு அழைத்து, விவரத்தைச் சொல்வார்கள். உடனடியாக சரிசெய்யப்படும்.
ஆக, திமுக தலைவர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியை முழுமையாகக் கையாண்டு வருவது ஓஎம்ஜிதான். இதெல்லாம் பொதுப் பணிகள்.
கட்சிப் பணிகள் என்று வந்துவிட்டால் இந்த ஓஎம்ஜி டீம் தலைவர் தொகுதியில் எப்படி வேலை செய்துகொண்டிருக்கிறது தெரியுமா?
கடந்த ஜூலை மாதம் ஸ்டாலின் தனது வீட்டில், தன் அருகே ஓஎம்ஜி சுனிலையும் தன் உதவியாளர் தினேஷையும் வைத்துக் கொண்டுதான் அந்தத் திட்டத்தைத் தீட்டினார்.
ஒவ்வொரு தொகுதியிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டிருப்பதை ஆய்வு செய்ய துடிப்பான ஒரு படையை அமைத்தார்.
“ஒரு பூத்ல ஆயிரம் ஓட்டு இருக்குன்னா, 60 பேருக்கு ஒரு பூத் கமிட்டி உறுப்பினர் போடணும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவங்களை போடக் கூடாது. அந்த பூத்ல இருக்குற எல்லா சாதிகளுக்கும் பூத் கமிட்டியில உரிய பிரதிநிதித்துவம் இருக்கணும். ஆயிரம் பேருக்கு 20 பேர் மெம்பர்னா அதுல பெண்கள் 5 பேர் கண்டிப்பா இருக்கணும். 60 பேருக்கு ஒரு பூத் கமிட்டி மெம்பர்னா, அந்த மெம்பர் அந்த 60 பேர் வசிக்கிற பகுதியில வசிக்கிறவரா இருக்கணும். 2ஆவது வார்டுக்கு 8ஆவது வார்டுலேர்ந்து கொண்டுவந்து போடக் கூடாது.
புறநகரில் மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், கிளைச் செயலாளர்களை வைத்து கூட்டம் போடுங்க. மாநகரில் மாவட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர், வட்டச் செயலாளர் கூட்டம் போடுங்க. ஏற்கனவே பல மாவட்டங்கள்ல பூத் கமிட்டி எடுத்து வெச்சிருப்பாங்க. நீங்க அந்தப் பட்டியலை வாங்கி அதுல இந்த நிபந்தனைகள் ஃபில் ஆகியிருக்கானு பாருங்க. இல்லேன்னா மாத்தச் சொல்லுங்க” என்பது தலைவரின் உத்தரவு.
மேலும், இதைக் காகிதத்தில் எழுதியெல்லாம் ஒப்படைக்கக் கூடாது. மைக்ரோ சாஃப்ட் எக்செல் ஷீட்டில்தான் கொடுக்க வேண்டும் என்று ஓஎம்ஜியின் டெக்னிகல் டீம் பரிந்துரையின்படி ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி 234 தொகுதிகளிலும் ஸ்டாலின் அமைத்த படை பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டங்களை நடத்தியது. அதை சென்னையில் இருந்து மேற்பார்வையிட்டு வருகிறது ஓஎம்ஜி.
ஸ்டாலின் அமைத்த டீமையே சில மாவட்டச் செயலாளர்கள் கதற விட்டிருக்கிறார்கள். ‘தம்பீ… அதென்ன எக்செல் ஷீட். நம்மூர்ல கிடைக்குமா, மெட்ராஸ்லதான் வாங்கணுமா?’ என்று கேட்டிருக்கிறார் ஒரு மாவட்டச் செயலாளர். இன்னும் சிலரோ ஸ்டாலின் உத்தரவு என்று சொல்லியும் பூத் கமிட்டிக்கு இப்ப என்ன அவசரம் என்று ஜாடை மாடையாகவெல்லாம் பேசியிருக்கிறார்கள்.
இந்த வரிசையில் தளபதி அமைத்த அந்த டீம் அவருடைய கொளத்தூர் தொகுதியிலும் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டதா என்று ஆய்வு நடத்தியது.
ஸ்டாலின் தொகுதிக்கு அண்மையில் அந்த பூத் கமிட்டி வந்துபோனதைப் பற்றி கொளத்தூர் உடன்பிறப்புகள் சிலர் நம்மிடம் கொட்டினார்கள்.
“பூத் கமிட்டியெல்லாம் போட்டாச்சானு செக் பண்றதுக்கொசரம் தலைமையில இருந்து டீம் வந்தாங்கண்ணா. ஆனா, இங்கதான் தலைமைலேர்ந்து ஏற்கனவே ஒரு டீம் இருக்கே.
வந்தவங்க பூத் கமிட்டி விவரத்தையெல்லாம் பகுதிக்கிட்ட கேட்டாங்க. கொளத்தூர் நாகராஜ், ஐசிஎஃப் முரளினு தளபதி தொகுதியோட ரெண்டு பகுதி செயலாளர்களும் பூத் கமிட்டி டீமை நல்லபடியா ரிசீவ் பண்ணாங்க. தளபதியோட எம்.எல்.ஏ. ஆபீஸ்லதான் ஆய்வுக் கூட்டம்.
அல்லாருக்கும் டெங்கு ஜுரம் பரவிக்கிட்டிருக்கேனு தளபதி ஆபீஸ்லயே நில வேம்பு கசாயம் கொடுத்திட்டிருந்தோம். அதனால, வந்த பூத் கமிட்டிக்கும் நிலவேம்பு கசாயம் கொடுத்தாங்க. அதுக்கு அடுத்து கொடுத்தாங்க பாரு… நிலவேம்பு கசாயமே தோத்துப் போயிடும்”
– அந்தத் தொண்டர்கள் வைத்த சஸ்பென்ஸை நாளை உடைப்போம்!
(பயணிப்போம்)
முந்தைய பகுதிகள்
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 1]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 2]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 3]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 4]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 5]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 6]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 7]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 8]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 9]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 10]