திமுகவை இயக்கும் மூன்றெழுத்து! – மினி தொடர் – 10

அரசியல் சிறப்புக் கட்டுரை

திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 10

– ஆரா

இடங்கை, வலங்கை போராட்டங்களைத் தாண்டி, எங்கிருந்தோ வந்த இன்னொரு கைதான் திமுகவை இப்போது தீர்மானித்துக்கொண்டிருக்கிறது.

அண்ணா மூன்றெழுத்து, தமிழ் மூன்றெழுத்து, கடமை மூன்றெழுத்து, கட்சி மூன்றெழுத்து, வெற்றி மூன்றெழுத்து என்றெல்லாம் அடுக்குமொழிகளில் பேசிக் கூட்டத்தை முடுக்கிவிடும் பேச்சாளர்கள் நிறைந்தது திமுக.

ஆனால், இன்றைக்கு அறிவாலயத்தின் அருகே இருக்கும் டீக்கடையில் நம்மோடு தேநீர் அருந்திகொண்டே திமுகவின் ஒரு மாவட்டச் செயலாளர் கூறிய வாசகம் அந்த அடுக்குமொழிகளை எல்லாம் மிஞ்சக்கூடிய அர்த்தங்களைப் பெற்றிருக்கிறது.

ஆம்… ‘ஓஎம்ஜி மூன்றெழுத்து’ என்கிறார் அந்த மாவட்டச் செயலாளர் எந்தச் சலனமும் இல்லாமல்.

2013, 14களில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மோடி. அப்போது பாஜகவுக்கு மிஞ்சிப் போனால் பத்து மாநிலங்களைத் தவிர வேறெங்கும் கட்சிக் கட்டமைப்பு இல்லை. அதனால் என்ன செய்வது என்று யோசித்து, குஜராத் மாடல் என்ற ஒரு முழக்கத்தைச் சமூக தளங்களில் முன்வைத்து அதை ஒரேயடியாக பூதாகரப்படுத்தியது. மோடி என்ற மாயை எல்லா இடத்திலும் பேச வைக்கப்பட்டது. அந்த மாயையின் காரணமாகவே தேர்தல் முடிவு மாறியது.

இதன் பிறகு திமுகவில் ஸ்டாலினுக்கு வேண்டிய தனிப்பட்ட நண்பர்கள் சிலர்தான் இதுபோன்ற புரமோஷன் உத்திகளைக் கையிலெடுக்கலாம் என்று இதை திமுகவுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். கட்டமைப்பு இல்லாத மோடிக்கே இது உதவும் என்றால், கட்டமைப்பு பலமும் தொண்டர்கள் பலமும் அதிகம் பெற்ற ஸ்டாலினுக்குப் பல மடங்குப் பலன் கிடைக்கும் என்று கணக்குப் போட்டார்கள். அதுதான் ஓஎம்ஜி என்ற நிறுவனம் திமுகவுக்குள் நுழைந்த கதை.

முக்கியமான பிரச்சினைகள், கொள்கை முடிவுகள் பற்றி கலைஞரிடம் செய்தியாளர்கள் கேட்டால் ஒரு மையமான புன்னகையோடு, “இதுபற்றி கட்சியின் செயற்குழு கூடி முடிவெடுக்கும்” என்று செய்தியாளர்களைப் பார்ப்பார். செயற்குழு, பொதுக்குழு எல்லாம் கலைஞர்தான் என்று செய்தியாளர்களுக்கும் தெரியும், அது கலைஞருக்கும் புரியும். ஆனபோதும் மற்றவர்களுடனான விவாதத்துக்குப் பிறகே முடிவெடுப்பார்.

ஆனால், இப்போது கட்சியின் முக்கிய செயல் திட்டங்கள் ஓஎம்ஜியிடமிருந்துதான் வருகின்றன. கட்சிக்காக உழைத்து உழைத்து ஓடாய் போனவனின் ஆலோசனைகளைவிட ஓஎம்ஜியின் ஆலோசனைகளே அதிகம் செயல்படுத்தப்படுகின்றன என்பதுதான் பல நிர்வாகிகளின் மைண்ட் வாய்ஸ்.

ஓஎம்ஜியின் பணிகள் முதலில் தொடங்கியது ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில்தான். கொளத்தூரை ஸ்டாலின் தேர்ந்தெடுத்ததிலும் ஓர் அர்த்தம் இருக்கிறது.

அரசு ஊழியர்கள் குறிப்பாக தலைமைச் செயலக ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கத்தினர் அதிகமாக இருக்கும் தொகுதி கொளத்தூர். அரசு ஊழியர்களை நம்பித்தான் ஸ்டாலின் அங்கே சென்றார் என்றும் சொல்லப்படுவதுண்டு.

What is Happening in DMK Mini Series 10

இந்த கொளத்தூர் தொகுதியில் மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாணவர்களைச் சந்திப்பது, இளைஞர்களைச் சந்திப்பது, பெண்களைச் சந்திப்பது என்று ஸ்டாலின் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார். இதற்கெல்லாம் இப்போது திட்டமிடுவது செயல்படுத்துவது ஓஎம்ஜிதான். இன்னும் சொல்லப் போனால் ஸ்டாலின் தொகுதியில் இருக்கும் திமுகவின் பகுதிச் செயலாளர்களைவிட அதிக செல்வாக்கு பெற்றிருப்பது ஓஎம்ஜி சுனிலும் தினேஷும்தான் என்கிறார்கள் திமுகவில்.

“தமிழ்நாட்டில் எம்ஜிஆர், கலைஞர் எல்லாம் எந்த ஓஎம்ஜி பின்னாலும் செல்லவில்லை. ஆனால், ஸ்டாலினுக்கு வேண்டிய சிலர் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். 2015ஆம் ஆண்டுவாக்கில் அவர் வெளியிட்ட கோபப்படுங்கள் என்ற வீடியோ, முடியட்டும் விடியட்டும் என்ற வாசகம், நமக்கு நாமே பயணம். வெள்ளை வேட்டி சட்டையில் இருந்த ஸ்டாலினை டிஷர்ட், ஜீன்ஸ் என உருமாற்றியது என ஓஎம்ஜியின் செயலாக்கங்கள் எல்லாம் புறத்திலேயே இருக்கின்றன,

ஒன்றியச் செயலாளர் என்ன நினைக்கிறார், பகுதிச் செயலாளர் என்ன நினைக்கிறார், தொண்டர் என்ன நினைக்கிறார் என்பது பற்றியெல்லாம் ஓஎம்ஜிக்குக் கவலை இல்லை. அவர்கள் பாட்டுக்கு ஒரு திட்டத்தை செயல்படுத்துவார்கள். அதன் கார்ப்பரேட்மயமான செயல்பாடுகளுக்குள் கழகம் இன்று சிக்கியிருக்கிறது” என்கிறார் ஒரு வடமாவட்ட இளைஞரணியைச் சேர்ந்தவர்.

களத்தில் வெற்றி பெற கலைஞரின் சூத்திரங்களே சிறந்த வழிகாட்டி. அப்படிப்பட்ட கலைஞரே வியந்து போற்றக் கூடிய கள வீரர்கள் கழகத்தில் நிறைய பேர் இருக்கின்றனர். ஒரு தொகுதியைக் கொடுத்துவிட்டால் அதன் தோற்றத்தை முற்றிலுமாக அலசி ஆராய்ந்து யாரை நிறுத்தினால் வெற்றி பெறலாம்,என்ன பிரச்சினைகளை மையப்படுத்தினால் வெற்றி பெறலாம் என்று முடிவு செய்து சொல்லி அடிக்கக்கூடிய கில்லிகள் கழகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் கிடைக்காத செல்வாக்கு இன்று ஓஎம்ஜிக்குக் கிடைக்கிறது.

கள ஆய்வுத் திட்டம் ஓஎம்ஜியின் அவுட்புட்தான். ஆனால், கள ஆய்வு நடத்தப்பட்டு அதில் பல நிர்வாகிகள் கட்சியின் நிலையைப் பகிரங்கமாகச் சொல்லியும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையே ஓஎம்ஜி என்கிறார்கள் பல நிர்வாகிகள்.

இவர்கள் இரண்டாவதாகச் சொன்ன ஓஎம்ஜிக்கு பொருள் ‘ஓ மை காட்’!

(பயணிப்போம்)

முந்தைய பகுதிகள்

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 1]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 2]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 3]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 4]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 5]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 6]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 7]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 8]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 9]

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *