திமுகவில் என்னதான் நடக்கிறது? – மினி தொடர் – 1

அரசியல் சிறப்புக் கட்டுரை

ஆரா

பழுத்த திமுகக்காரர், பொதுப்பணித் துறையில் கில்லாடி, சட்டமன்றத்தில் சுவாரஸ்ய வீரர், மேடைப் பேச்சுகளில் கலகலப்பு மின்சாரம் பாய்ச்சுபவர். இப்படி பல முகங்களைப் பெற்ற முன்னாள் அமைச்சரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் கடந்த சில நாட்களாக இன்னொரு அடைமொழிக்கும் உரித்தானவர் ஆகியிருக்கிறார். அது, ‘திமுக கூட்டணியின் வில்லன்’!

எப்போதுமே தந்தி டிவி நெறியாளரான ரங்கராஜ் பாண்டே பேட்டி காண்பவரிடம், ‘உங்களின் நல்ல நோக்கங்கள் நிறைவேற என் வாழ்த்துகள்’ என்று சொல்லித்தான் பேட்டியை முடிப்பார். அதேபோலத்தான் கடந்த சனிக்கிழமை துரைமுருகனையும் பேட்டி எடுத்தார். அந்தப் பேட்டியின் மூலமாக யார் நோக்கம் நிறைவேறியிருக்கிறது என்றுதான் இப்போது திமுகவுக்குள் பலத்த கேள்வி.

தார்மீக பலவீனம்

‘திமுக கூட்டணியே இன்னும் அமைக்கவில்லை. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் எங்கள் நண்பர்கள். அவர்கள் இப்போது எங்கள் கூட்டணியில் இல்லை. தொடர்ந்து ஆதரிப்பவர்கள் சீட்டு போதவில்லைனு முறுக்கிக்கிணும் போகலாம். கடைசி வரை எதிர்ப்பவர்கள் தேர்தலின்போது கூட்டுச் சேரலாம்’ என்று துரைமுருகன் சொன்ன வார்த்தைகள் திமுகவின் மெகா கூட்டணியைத் தார்மீக ரீதியாகப் பலவீனமாக்கியிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

What is Happening in DMK Mini Series 1

துரைமுருகன் தேர்ந்த மொழிப்புலமை கொண்டவர். ஆற்காட்டுத் தமிழில் அவர் வெளிப்படுத்தும் வார்த்தைகள் ஒவ்வொன்றும்,அவ்வளவு அழகானவை. அவர் இவ்வளவு ராவாகப் பேசியிருக்க வேண்டாம், கொஞ்சம் மிதமாகச் சொல்லியிருக்கலாம் என்ற விமர்சனம் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்குள் எதிரொலிக்கிறது.

துரைமுருகன் கொடுத்த அந்தப் பேட்டி திமுக தலைவரான ஸ்டாலினிடம் அனுமதி பெற்று கொடுக்கப்பட்டதா? அப்படி ஒருவேளை அனுமதி கொடுத்திருந்தால் கூட்டணி பற்றி தான் பேச நினைப்பதை துரைமுருகன் மூலம் பேச வைத்திருக்கிறாரா ஸ்டாலின்? அதனால்தான் இவ்வளவு தூரம் இறங்கியடித்திருக்கிறாரா துரைமுருகன்?

இந்தக் கேள்விகளுக்கு விடையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் மதிமுக, சிறுத்தைகளின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள்.

ஊடகங்கள் மீது ஸ்டாலின் கோபம்

கூட்டணிக் குழப்பத்துக்கு விடைதேடி திருமாவளவன் நேற்று முன்தினம் ஸ்டாலினை சந்தித்தார்.

What is Happening in DMK Mini Series 1

அந்தச் சந்திப்புக்குப் பிறகு திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். நேற்று அறிவாலயத்தில் வைகோ ஸ்டாலினைச் சந்தித்தார். இந்தச் சந்திப்புகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. நேற்று வைகோ அறிவாலயத்தில் செய்தியாளர்களை 20 நிமிடங்கள் சந்தித்துவிட்டுப் பேசிய பிறகு ஸ்டாலின் தனியாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

‘திமுக மேகதாது பிரச்சினைக்காகக் கூட்டியிருக்கும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், மமக ஆகிய கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்கிறார்கள்’ என்று அப்போது கூறினார் ஸ்டாலின்.

அதன் பிறகும் திமுக கூட்டணியில் மதிமுக இருக்கிறதா என்ற துடுக்குக் கேள்விக்கு, “எங்கள் கூட்டணி மீது அக்கறை எடுத்துக் கொண்டு விளம்பரம் தேடித் தரும் ஊடகத்தினருக்கு மிக்க நன்றி” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஸ்டாலின்.

சென்ற சனிக்கிழமை துரைமுருகன் அளித்த பேட்டியில் இருந்து நேற்று புதன்கிழமை மாலை ஸ்டாலின் அளித்த பேட்டி வரை திமுக கூட்டணியின் மேக மூட்டங்கள் கொஞ்சம் தெளிவாகியிருக்கின்றன. ஆனால், திமுகவுக்குள், திமுக என்ற கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களுக்குத் தெளிவு கிடைக்கவில்லை.

What is Happening in DMK Mini Series 1

சொந்தக் கருத்தா? கட்சியின் கருத்தா?

கூட்டணி பற்றி துரைமுருகன் கூறியது அவரது சொந்தக் கருத்தா, கட்சியின் கருத்தா என்பது பற்றி இதுவரை திமுக விளக்கம் அளிக்கவில்லை. ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போதும் ஊடகங்களின் மீதுதான் கோபப்பட்டாரே தவிர, ஊடகத்திடம் பேசிய துரைமுருகன் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

கடந்த மாதம் கலைஞர் சிலை திறப்பது தொடர்பாக டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது தொடர்பாக அவர் மீது ஜெயலலிதா பாணியில் அதிரடியாக நடவடிக்கை எடுத்து செய்தித் தொடர்புச் செயலாளர் பதவியைப் பறித்தார் ஸ்டாலின். அவரையும் துரைமுருகனையும் ஒப்பிட முடியாது. ஆனால் கட்சிக்கு, கூட்டணிக்கு எதிரான கருத்துகளைத்தானே துரைமுருகன் சொல்லியிருக்கிறார். அதற்குக் கண்டனம் வேண்டாம் ஒரு விளக்கமாவது தலைமைக் கழகத்தில் இருந்து தரப்படக் கூடாதா என்பதும் திமுக கூட்டணி தொடர வேண்டுமென்று விரும்புபவர்களின் கருத்தாக இருக்கிறது.

துருப்புச் சீட்டா துரைமுருகன்?

ஆனால், இன்னும் சில நிர்வாகிகளோ, “துரைமுருகன் என்ற துருப்புச் சீட்டை வைத்து தளபதி கேம் ஆடுகிறார். எப்போதுமே வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு என்று பேசுவதில் துரைமுருகன் கில்லாடி. பல கட்சிகளின் தேர்தல் பேச்சுவார்த்தைகளின்போது துரைமுருகன்தான் இருப்பார். அப்போது தேர்தல் களத்தின் எதார்த்தங்களை உணர்ந்து சில விஷயங்களைக் கறாராகப் பேசுவார் துரைமுருகன். அது திமுகவுக்கு கடைசியில் நன்மையையே பெற்றுத் தரும்.

இப்போதைய நிலையில் திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல; அதற்கு முன் வரப்போகும் 20 தொகுதி இடைத் தேர்தலிலும் சீட்டு கேட்கின்றன. அவர்களை அடக்கி வைப்பதற்கு துரைமுருகன் மூலம் இப்படிச் சில கறார் விளையாட்டுகளை நடத்தியிருக்கிறார் தலைவர் ஸ்டாலின்’’ என்கிறார்கள்.

ஆக, ஸ்டாலினும் துரைமுருகனும் சொல்லிவைத்து ஆடிய விளையாட்டு என்று சிலரும், ஸ்டாலினுக்குச் சொல்லாமலே துரைமுருகன் ஆடிய விளையாட்டு என்றும் இரு கருத்துகள் திமுகவில் இருக்கின்றன. இந்த இரு கருத்துகளும் திமுகவுக்குள்ளேயே இருக்கும் இரு தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றன.

இதில் எது நிஜம்?

(பயணிப்போம்)

அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 1

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *