ராஜினாமா செய்த மத்திய அமைச்சர்…சர்ச்சையில் முடிந்த பாஜக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு..பீகாரில் என்ன நடக்கிறது?

Published On:

| By vivekanandhan

what is happening in bihar politics 2024

பீகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவை எட்டியிருக்கிறது. பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதிஷ் குமாரின் ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி, சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்.எல்) என்று ஒரு மெகா கூட்டணியை இந்தியா கூட்டணி உருவாக்கியிருந்தது. தேஜஸ்வி யாதவ் மற்றும் நிதிஷ் குமாரின் கூட்டணி ஆட்சி சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டு நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓ.பி.சி அரசியலைக் கையிலெடுத்த இந்தியா கூட்டணி

ஓ.பி.சி மக்களுக்கான முகமாக இந்தியா கூட்டணி தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், பாஜக கூட்டணியை ஓ.பி.சிக்கு எதிரான அணியாக முன்னிறுத்தவும் பீகாரின் இந்த சாதி வாரிக் கணக்கெடுப்பு இந்தியா கூட்டணிக்கு பெரிதும் உதவியது. திடீர் திருப்பமாக இந்தியா கூட்டணியை ஒருங்கிணைப்பதில் ஆரம்பத்திலிருந்து மிகுந்த ஆர்வம் காட்டிக்கொண்டிருந்த நிதிஷ் குமார் வெளியேறி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார்.

பீகாரில் சிறு சிறு கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைத்திருந்த பாஜக அணி நிதிஷ் குமாரின் வருகைக்குப் பிறகு பலம் வாய்ந்த அணியைப் போன்ற உருவத்தினைப் பெற்றது. உண்மையான ஓ.பி.சி முகம் நாங்கள் தான் என்று பாஜக இப்போது பேசி வருகிறது. இந்நிலையில் நேற்று (மார்ச் 18, 2024) பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிவடைந்திருக்கிறது.

எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள்?

பங்கீடு விவரங்கள் பின்வருமாறு:

பாஜக – 17 தொகுதிகள்,

ஐக்கிய ஜனதா தளம் – 16 தொகுதிகள்

லோக் ஜனசக்தி கட்சி – 5 தொகுதிகள்

ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா – 1 தொகுதி

ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி – 1 தொகுதி

ராஜினாமா செய்த பசுபதி பராஸ்

பீகார் அரசியலில் மற்றுமொரு முக்கிய திருப்பமாக பாஜக அரசில் மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில் அமைச்சராக இருந்த பசுபதி பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது கட்சியான ராஷ்டிரிய லோக் ஜன சக்தி கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

பசுபதி பராஸ் மறைந்த முன்னாள் அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரர் ஆவார். ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியின் பீகார் மாநில தலைவராகவும் இருந்தார் பசுபதி பராஸ். இவர் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானுடன் முரண்பட்ட பிறகு ராஷ்டிரிய லோக் ஜன சக்தி கட்சியைத் துவக்கினார்.

இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், பசுபதி பராஸ் எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவரை நாங்கள் வரவேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை பீகாரில் தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவடையாத நிலையில் பசுபதி பராஸ் இந்தியா கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாஜக பக்கம் சாய்ந்த பாமக… எடப்பாடி ரியாக்‌ஷன்!

ராஜ்யசபா சீட்டு எங்கே? கையெழுத்து போட மறுத்த ராமதாஸ்..தனி அறைக்கு அழைத்துச் சென்ற அண்ணாமலை

“இம்முறை 400க்கும் மேல்” : சேலத்தில் தமிழில் பேசிய மோடி

ஒரே மேடையில் இரு ஓபிசி தலைவர்கள் : பாஜக பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேச்சு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share