ஓ.பன்னீரின் பொருளாளர் பதவிக்கு ஆபத்தா? மினி தொடர் – 9

அரசியல் சிறப்புக் கட்டுரை

அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 9

ஆரா

அதிமுகவின் கட்சி அலுவலகத்தில் சந்தித்துக் கொள்ளும்போதும் சரி, பொது நிகழ்வுகளிலும் சரி முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் பார்க்கும்போது, ‘எனக்கும் உனக்கும்தான் பொருத்தம், இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்’ என்பதற்கு இலக்கணமாய் அவ்வளவு இணக்கமாய் இருக்கிறார்கள்.

‘அண்ணே…’ என்று வாய் நிறைய கூப்பிடுகிறார் முதல்வர். சொல்லுங்க என்று மென்மையாய் பதிலளிக்கிறார் துணை முதல்வர். பக்கத்தில் நின்று பார்க்கும்போது அட இவர்களுக்கு இடையிலா பனிப்போர் நடக்கிறது என்று சொல்லத் தோன்றும்.

ஆனால், அதிகாரம் என்ற கண்ணுக்குத் தெரியாத அந்த பொருள்தான் இந்த இருவருக்கும் இடையே ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆட்சி அதிகாரம் என்பது தனக்கு துணை முதல்வர் என்ற அடிப்படையில் வரையறைக்கு உட்பட்டதுதான் என்பதை ஓ.பன்னீர்செல்வம் உணர்ந்திருக்கிறார். ஆனால் ஆட்சி ஐந்து ஆண்டுகளில் முடியக் கூடியது, அதுவும் இந்த ஆட்சிக்கு இன்னும் இயற்கை ஆயுளே இரண்டு வருடங்கள்தான். அதற்குள் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சம்பவிக்கலாம் என்ற நிலையில், ஆட்சியை விட கட்சியே முக்கியம் என்ற எண்ணத்தில் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

அதனால்தான் கட்சியைக் கைப்பற்றும் நோக்கில் சில காய்களை நகர்த்த ஆரம்பித்தார். அதில் ஒன்றுதான் ஒருவருக்கு ஒருபதவி மட்டும் போதும் என்று கடந்த மாதம் அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார். ஒருத்தருக்கு ஒரு பதவி என்பது பன்னீரின் அடிப்படை மந்திரம். இது முதல்வர் எடப்பாடியை குறி வைத்து ஏவப்படும் மந்திரம் என்பதால்தான்… பதிலுக்கு ஓ.பன்னீரிடம் இருக்கும் பொருளாளர் பதவியைக் குறிவைத்து எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் தலைமைக் கழக வட்டாரத்தில்.

எடப்பாடி பழனிசாமியிடம் இப்போது தலைமை நிலைய செயலாளர், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் இருக்கின்றன. இதில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி இப்போது அதாவது அண்மையில்தான் உருவாக்கப்பட்டது. அதுவும் ஓ.பன்னீர் செல்வத்தின் அணி சேர்ந்த பிறகுதான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயர்களே உருவாக்கப்பட்டன.

இந்த பதவி நியமனங்களுக்கு எதிராக வழக்குகள் தேர்தல் ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் இருக்கின்றன. ஆனால் அதற்கு முன்னர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட தலைமை நிலையச் செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகளில் எடப்பாடி பழனிசாமியும், பொருளாளர் என்ற பதவியில் ஓ.பன்னீரும் இருந்தனr.

பன்னீர் செல்வம் மெரினாவில் தியானம் செய்த பின்னர் பொருளாளர் பதவியில் இருந்து சசிகலாவால் நீக்கப்பட்டார். ஆனால் அணிகள் இணைந்த பின் அம்மா கொடுத்த பதவிகள் அவரவர்க்கே என்ற ஒப்பந்தப்படி இணைந்தவர்கள் பழைய பதவிகளைப் பெற்றனர். அந்த வகையில்தான் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கட்சியின் பொருளாளர் ஆனார்.

சமீபத்தில் ஜெயலலிதா நியமித்த பதவிகளைக் கூட கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அப்படித்தான் ஓ.பன்னீரின் தீவிர ஆதரவாளராக இருந்த விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் லட்சுமணனை ஜெயலிதாவால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அண்மையில் தூக்கினார் எடப்பாடி பழனிசாமி. அதில் ஓ.பன்னீரின் கையெழுத்தும் இருந்தது.

ஆக ஜெயலலிதா கொடுத்த பதவியைப் பறிப்பதில்லை என்ற கொள்கை முடிவு மெல்ல மெல்ல காலாவதியாகி வருகிறது. ஜெயலலிதா நியமித்த பதவியில் இருந்த ஓ,.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் நியமிக்கப்படுகிறார். அந்த நியமன உத்தரவில் ஓ,பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி என இருவரின் கையெழுத்தும் இருக்கிறது. அப்படியென்றால் லட்சுமணனை நீக்கியது எடப்பாடி பழனிசாமிதான். அதற்கு இணங்கியவர்தான் பன்னீர்செல்வம் என்றாகிறது.

கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் விஜயகுமார் எம்.பி. ஏற்கனவே நீக்கப்பட்டார். ஆக ஜெயலலிதா நியமித்த பதவிகளில் இருப்பவர்களை நீக்கமாட்டோம் என்பதெல்லாம் அல்ல… எங்களுக்குப் பிடிக்காதவர்கள் என்றால், எங்களுக்கு உடன்படாதவர்கள் என்றால் அவர்கள் வகிக்கும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவார்கள்.

அந்த வகையில் ஓ.பன்னீர் செல்வத்தை பொருளாளர் பதவியில் இருந்து அவ்வளவு எளிதில் எடப்பாடி பழனிசாமியால் நீக்கிவிட முடியாதுதான். ஆனால், ஒருவருக்கு ஒரு பதவி என்ற வகையில் இப்போது இருக்கும் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருக்க விரும்புறாரா, அல்லது அம்மா கொடுத்த பொருளாளர் பதவியில் இருக்க விரும்புகிறாரா பன்னீர்செல்வம்? இந்த கேள்வி இப்போது எடப்பாடியின் ‘ கோர் டீம்’ எனப்படும் மையக் குழுவில் எதிரொலித்து வருகிறது.

அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து ஓ,பன்னீர் செல்வம் விடுவிக்கப்படுகிறார் என்று அறிவிப்பு வந்து அதில் ஓ.பன்னீரே கையெழுத்து போட்டால் நன்றாகவா இருக்கும்? இதெல்லாம் நடக்காது என்று பன்னீர் ஆதரவாளர்களே தற்போது உறுதியாக சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

ஆனால் நடப்பது என்னவோ… ஓ.,பன்னீரின் விரலை எடுத்தே அவர் கண்களைக் குத்துவது போன்று, ‘ஒருவருக்கு ஒரு பதவி என்ற அவரது வேண்டுகோளை அவருக்கே பயன்படுத்தக் கோருவதுதான்!

(பயணம் தொடரும்…)

முந்தைய பகுதிகள்What is happening in AIADMK - Mini Series 9

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 1]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 2]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 3]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 4]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 5]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 6]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 7]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 8]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *