அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 8
ஆரா
விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்த தனது தர்மயுத்த தோழரான ராஜ்யசபா எம்.பி. லட்சுமணனை அப்பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்துக்கு சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை நியமிக்கும் ஆணையில் கழக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்து போட்டவர் ஓ.பன்னீர்செல்வம்.
புதிதாக மாசெ ஆக நியமிக்கப்பட்டவர்கள் எல்லாம் ஓ.பன்னீரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதுகுறித்த படங்களை ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அதையொட்டி பல்வேறு கருத்துகளை அவரது ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தனர். 26ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அந்த நியமனங்களை அடுத்து நாள் அன்றே அல்லது மறுநாளில் பலர் ஓ.பன்னீர்செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்தனர்.
மனுக்கள் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஓ.பன்னீரின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி இதை ஒட்டி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். மற்ற மாவட்டச் செயலாளர்களும் இருவரையும் சந்தித்து வாழ்த்துப் பெற்ற படம் வெளியானது. ஆனால், விழுப்புரம் வடக்கு மாசெவான சி.வி.சண்முகம் புதிய கட்சிப் பொறுப்பு கிடைத்த பிறகு ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சென்று சந்தித்ததாகத் தெரியவில்லை. ஆனால், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 26ஆம் தேதி அதாவது அறிவிப்பு வந்த அன்றே சந்தித்தார். அந்தப் புகைப்படம் முதல்வரின் ஃபேஸ்புக்கிலேயே வெளிவந்தது.
நிற்க… கழகத்தின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் 28ஆம் தேதி அதிகாலை 4.43 மணிக்கு அவரது ஆதரவாளர் ராகேஷ் ஷர்மா பாரதி என்பவர் கமெண்ட்டில் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். மிகவும் முக்கியமான கேள்வி இது.
‘ஏன் சி.வி. சண்முகம் மட்டும் தங்களைப் பார்க்க வரவில்லை?’ என்ற கேள்விதான் அது.
தனக்காக தர்மயுத்தம் நடத்திய லட்சுமணனின் பதவியைப் பறித்து அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கொடுக்க சம்மதித்திருக்கிறார் ஓ.பன்னீர். ஆனால், பதவி பெற்றவர்களில் சி.வி.சண்முகம் மட்டும் ஏன் ஓ.பன்னீரைச் சந்திக்கவில்லை? கழக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர் ஓ.பி.எஸ்ஸைத்தானே முதலில் சந்தித்திருக்க வேண்டும்? இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடியை சந்தித்தவர் ஏன், ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்ஸைச் சந்திக்கவில்லை என்று அதிமுக வட்டாரத்தில் கேள்விகள் நீண்டன.
இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கும் முன்னரே 31ஆம் தேதி அதிரடியாக சி.வி.சண்முகம் ஒரு புதிய பிரச்சினையைக் கிளப்பினார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றும், அதுகுறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்கும் அதேநேரம் சிறப்பு போலீஸ் அதிகாரிகள் குழு விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டார் சி.வி.சண்முகம். இதுமட்டுமல்ல, ‘சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் பின்னணி பற்றி விசாரணை நடத்த வேண்டும். கஸ்டடி எடுத்து விசாரிக்க வேண்டும்’ என்றெல்லாம் வெடிகளைக் கொளுத்திக்கொண்டே இருந்தார் சி.வி. சண்முகம். முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் மீதும் போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என்றார். இப்படிப் பேட்டி கொடுத்த சி.வி.சண்முகம் அதிரடியாக டெல்லி கிளம்பிப் போய் உடனடியாக மத்திய சட்ட அமைச்சரையும் சந்தித்துள்ளார். மேகதாட்டு பிரச்சினைக்காகச் சந்தித்தார் என்று சொல்லப்பட்டாலும் ஜெ,.மரணத்துக்கு சிபிஐ விசாரணையை நாடாளுமன்றத் தேர்தலுக்குள் நடத்தியாக வேண்டும் என்பதற்காகவே மத்திய சட்ட அமைச்சரை டெல்லி சென்று மாநில சட்ட அமைச்சர் சந்தித்தார் என்கிறார்கள் அதிமுகவில்.
சி.வி.சண்முகத்துக்குப் பதில் அளித்த தமிழக அமைச்சரவையின் அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளர், அமைச்சர் ஜெயக்குமார், “அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்து நல்ல விஷயம்தான். அதை நான் வரவேற்கிறேன். அந்தக் கருத்தில் விசாரணைக்கு உட்பட்டு நடத்த வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார். விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்பது தனி. மாநில அமைப்பு இதை நடத்தலாம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஜெயின் கமிஷன் அமைக்கப்பட்டதால் சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் இல்லையே. அதன்படி பார்த்தால் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்தில் தவறு இல்லை. இதுதொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யும்” என்று தெரிவிக்கிறார்.
அதேநேரம் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் முதல்வரைச் சந்திக்கிறார். சுகாதாரத் துறையின் அமைச்சரான விஜயபாஸ்கர், இதுபற்றி கருத்து கூற மறுக்கிறார்.
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது அவருக்கு அடுத்த நிலையில் இருந்த அப்போது முதல்வரின் கோப்புகளை கூட கவனித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் முக்கியமான கருத்தை சொன்னார். “அது சி.வி.சண்முகத்தின் சொந்தக் கருத்து” என்று.
ஆனால் முதல்வர் இதுபற்றி எந்தக் கருத்தும் இதுவரை சொல்லவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதிமுகவில் கிடைக்கும் விடை இதுதான்.
“சி.வி.சண்முகத்தின் அதிரடி பேட்டி என்பது ஓ.பன்னீர்செல்வத்தை டார்கெட்டாக வைத்துத்தான் தரப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா அப்போலோவில் இருந்த காலத்தில் அவர்தான் அமைச்சரவையைக் கவனித்து வந்தார். ஜெயலலிதா இலாகா இல்லாத முதலமைச்சராகவும், அவரது பொறுப்புகளைக் கையாளும் அமைச்சராக ஓ.பன்னீரும் அறிவிக்கப்பட்டனர். ஆனால் ஓ.பன்னீர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர் ஆவதற்கு ஏனோ தயக்கம் காட்டி வருகிறார்.
டிசம்பர் 20ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிக பணிகள் இருப்பதாகச் சொல்லி அப்போது பன்னீர் ஆஜர் ஆகவில்லை. அடுத்து ஜனவரி 8ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் சி.வி.சண்முகம் போலீஸ் விசாரணை, கஸ்டடி விசாரணை என்று அதிகாரிகளைக் குறிவைத்து அதிரடி கிளப்பினார். இந்த அதிகாரிகளுக்குப் பின்னால் இருப்பது அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய முதல்வர் இலாகாவைக் கவனித்த ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தான் என்பது அதிமுகவில் அனைவருக்கும் தெரியும். ஆக இது ஓ.பன்னீருக்கான டார்கெட்தான்” என்கிறார்கள்.
(பயணம் தொடரும்…)
முந்தைய பகுதிகள்
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 1]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 2]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 3]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 4]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 5]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 6]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 7]