கட்சியும் நானே… ஆட்சியும் நானே… – சொல்லாமல் சொல்லும் எடப்பாடி! மினி தொடர் – 6

அரசியல் சிறப்புக் கட்டுரை

அதிமுகவில் என்ன நடக்கிறது? மினி தொடர் 6

ஆரா

டெல்லி தெய்வத்துக்கு யார் பூசாரியாக இருப்பது என்ற போட்டி அதிமுகவில் இன்று நேற்றல்ல… ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோதில் இருந்தே தொடங்கிவிட்டது.

கட்சி விழாவானாலும், சரி மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவானாலும் சரி, அதிமுகவின் தலைமைக் கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளானாலும் சரி. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இறுதியாக உரையாற்றும் வாய்ப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கிடைத்தது. நாம் செய்திகளில் ஏற்கெனவே குறிப்பிட்டது மாதிரி, இது வெறும் மைக் சம்பந்தமான பிரச்சினை அல்ல. கட்சி சம்பந்தமான பிரச்சினை.

ஜெயலலிதா இருக்கும்போது அவருக்குப் பிறகு கட்சி நிகழ்ச்சியில் பேசுபவர் நன்றி உரை சொல்பவராகத்தான் இருப்பார். அதுவும், ஜெயலலிதா பேசுவதற்கு முன்பே நன்றி உரையைப் பேசிவிடுவார். கருணாநிதி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும் அப்படித்தான்.

ஆனால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அதிகாரப் பதங்கள் அதிமுகவில் ஏற்படுத்தப்பட்ட பிறகு யார் பெரியவர் என்ற கேள்வியும் ஆட்டோமேட்டிக்காக ஆரம்பித்துவிட்டது. தர்மயுத்தம் நடந்தபோது, ‘பெரியவர்’ என்று அழைக்கப்பட்டார் ஓ.பன்னீர். ஆனால், அணிகள் இணைவுக்குப் பின், ‘பெரியவருக்கும் மேலான பெரியண்ணன்’ ஆக முதல்வர் எடப்பாடி தன்னைக் காட்டிக்கொள்ள முனைந்திருக்கிறார் என்பதே இந்த நிகழ்ச்சிகள் தீட்டும் சித்திரம்.

அந்த வகையில்தான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பேசியபிறகு தான் பேசி வந்தார் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி. இது பன்னீர் ஆதரவாளர்களிடையே நெடுநாட்களாகப் புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது.

“கட்சி நம்மகிட்ட இருக்குங்குறதுக்கு அடையாளமாகத்தான் ஒருங்கிணைப்பாளர் பதவி உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கு. அவரு ஆட்சிக்கு மட்டும்தான். ஆட்சி எத்தனை வருஷம் இருக்கும் என்கிறது யாருக்கும் தெரியாது. ஆனா, கட்சி இருக்கும். அம்மா சொன்னபடி இன்னும் நூறாண்டு இருக்கும். எடப்பாடி இப்ப ஆட்சியில இருக்கறதோட இந்த ஆட்சிக்குப் பிறகு கட்சியை கைப்பற்றவும்தான் திட்டம் போடறாரு” என்று பன்னீரிடம் பக்கம் பக்கமாக பேசினார்கள் அவரது ஆதரவாளர்கள்.

அப்போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் முக்கியமானவை.

“முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பதால் மட்டுமேதான் அவர் மதிக்கப்படுகிறார். அதுவும் குறிப்பாக சிற்சில அமைச்சர்கள்தான் அவர் பேச்சைக் கேட்கிறார்கள். மற்ற அமைச்சர்கள் எல்லாம் தாங்கள் அமைச்சர் பதவியில் இருக்கும் வரை வாய் திறக்க மாட்டார்கள்.அவர்கள் வாய் திறக்கவில்லை என்பதற்காக எடப்பாடியை ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. இந்த உண்மையைத் தெரிந்துகொண்டதால்தான் ஆட்சி போன பிறகும் தன் பிடி இருக்க வேண்டும் என்பதற்காகவே கட்சியை தன் கட்டுக்குள் கொண்டு வர முழு முயற்சி எடுத்து வருகிறார் எடப்பாடி. அதை நாம் தடுக்க வேண்டும். இரட்டை இலை சின்னம் நமக்குத்தான், நமது அவைத் தலைவர் மதுசூதனனுக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது.

What is happening in AIADMK - Mini Series 6

ஆனால், மீடியாக்கள் உட்பட எல்லாருமே ஏதோ பன்னீர் போய் எடப்பாடியோடு சேர்ந்தார் என்கிறார்கள். எடப்பாடிதான் பன்னீர் அணியோடு சேர்ந்திருக்கிறார். இந்த விஷயத்தை நாம் கட்சியினரிடமும் மக்களிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். ஆட்சிக்கு வேண்டுமானால் துணை முதல்வர் ஆக இருக்கலாம்.

ஆனால் கட்சியின் முதல்வர் பன்னீர்தான் என்பதை பட்டவர்த்தமான நிறுவ வேண்டும்” என்பதுதான் பன்னீர் ஆதரவாளர்களின் முழு விவாதம்,

இந்த விவாதங்களின் விளைவாகவே சமீப கால அதிமுக நிகழ்ச்சிகளில் இறுதியாகப் பேசி வருகிறார் ஓ.பன்னீர். அதன் மூலம் கட்சியில் நானே இறுதி முடிவெடுக்கக் கூடியவன் என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தினார்.

அணிகள் இணைந்தாலும் அங்கே (ஓ.பன்னீர் அணி) என்ன நடக்கிறது என்பதை தினந்தோறும் ‘அறிந்து’கொள்ளும் முதல்வர் எடப்பாடி இதை அறியாமலா இருப்பார்? அதனால்தான், “ஆட்சி மட்டுமல்ல…கட்சியும் நானே” என்று சிவாஜி கணேசனின், ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ எனப் பாடாத குறையாக ஓ.ராஜா விவகாரத்தில் அவரை நீக்க உத்தரவிட்டார். ஆட்சியில் எப்படி பன்னீர் துணை முதல்வரோ, கட்சியிலும் அதேபோல அவர் துணைதான் என்பதை எடப்பாடி சொன்னாமல் சொன்னதுதான் ஓ.ராஜாவின் நீக்கமும் சேர்க்கையும்.

கட்சி – ஆட்சி என்ற இரு பேரதிகாரங்களை மையமாக வைத்து பன்னீர் – எடப்பாடி இடையே கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. வெளியே பார்க்க இது குழந்தைகள் விளையாடும் சீசா பலகை போல தெரிந்தாலும், உள்ளே மிகவும் சீரியசாக போய்க் கொண்டிருக்கிறது. நெருங்கிக் கொண்டிருக்கும் தேர்தல்களில் வேட்பாளர் தேர்வின் போது இது வெடிக்கும்.

(பயணம் தொடரும்)

முந்தைய பகுதிகள்

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 1]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 2]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 3]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 4]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 5]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *