ஓ.ராஜா பதவியேற்பு: ஓ.பன்னீருக்கு மெசேஜ்! மினி தொடர் – 5

அரசியல் சிறப்புக் கட்டுரை

அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 5

ஆரா

ஓ.பன்னீர் குடும்பத்தினரின் தோட்டத்தில் உள்ள கிணறுகளால் சுற்று வட்டார குடிநீர் பாதிக்கப்படுகிறது என்று கிராம மக்கள் புகார் முதல் போராட்டம் வரை நடத்தினார்களே… அதே கைலாசப்பட்டிதான்.

தேனி – பெரியகுளம் இடையே ஏராளமான தோட்டங்கள் ஓ.பன்னீர் வட்டாரத்தினருக்கு இருக்கிறது என்பது அங்கே கிராமங்கள் முதல் நகரம் வரை அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட கைலாசப்பட்டி தோட்டத்துக்குக் கடந்த வாரம் அதாவது ஓ.ராஜா நீக்கப்பட்ட 19 ஆம் தேதிக்கும், அவர் சேர்க்கப்பட்ட 24 ஆம் தேதிக்கும் இடையே ஒரு நாளில் ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது.

இதுபற்றி தேனி வட்டாரத்தில் விசாரித்தோம்.

“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைத்தால் ஓவர் போனில் ஓ.பன்னீரிடம் ஓப்பனாக எதையும் பேசிவிட முடியும். அல்லது இருவரும் நேரிலேயே சந்திக்கவும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. பின் எதற்கு எடப்பாடி தனியாக ஒரு குழுவை தேனிக்கு அனுப்ப வேண்டும் என்பது நியாயமான கேள்விதான்.

ஆனால் இருவரும் உட்கார்ந்து ஒருமுறையோ இருமுறையோ பேசினால் தீரக் கூடிய பிரச்சினை அல்ல இது. அதனால் தான் பல்வேறு கட்டங்களாக நடக்கக் கூடிய, ‘நெகோஷியேஷன்’களில் தோட்ட வீட்டில் நடப்பதும் ஒன்று.

தேனி மாவட்டத்தில் ஏற்கனவே கலெக்ட்ராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி, கொங்கு மண்டலத்தில் எடப்பாடிக்கு வேண்டப்பட்ட சில அதிமுக பழைய மனிதர்கள் உள்ளிட்டோர்தான் கைலாசப்பட்டி தோட்டத்துக்கு சென்றனர்.

அங்கே பன்னீர் தரப்போடு பேசப்பட்ட டீல்….அதேநேரம் டெல்லியில் இருந்து வந்த அழுத்தம் இவற்றால்தான் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டார். ராஜாவிடம் இருக்கும் மணல் ரீதியான வர்த்தக விஷயங்கள், கட்சியின் நிதி விஷயங்கள் கூட அப்போது பேசப்பட்டதாக தெரிகிறது” என்கிறார்கள் தேனி அதிமுக வட்டாரத்தில்.

What is happening in AIADMK - Mini Series 5

24 ஆம் தேதி ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட நிலையில் 26 ஆம் தேதி மதுரையில் ஆவின் சேர்மனாக பதவியேற்றுக் கொண்டார். அந்தப் பதவியேற்பு விழாவுக்கு யார் யார் சென்றார்கள் என்பதைப் பொறுத்தே பன்னீருக்கும், எடப்பாடிக்குமான கெமிஸ்ட்ரி எப்படி இருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

ஆவின் தேர்தலில் வெற்றிபெற்றபோது செய்த அலப்பறையும், ஆரவாரமும் தலைவர் பதவியேற்றபோது ராஜாவிடம் தென்படவில்லை. மேலும், தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டபோது அமைச்சர் செல்லூர் ராஜூ சென்று வாழ்த்தினார். முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா சென்று வாழ்த்தினார். ஆனால் ராஜா நீக்கப்பட்டு பின் சேர்க்கப்பட்டு நடத்தப்பட்ட ஆவின் தலைவர் பதவியேற்பு விழாவில் ஆவின் வட்டாரம் தவிர அதிமுக வட்டாரம் அதிக அளவு தலைகாட்ட வில்லை.

செல்லூர் ராஜூ கடைசி நேரத்தில் வாழ்த்தினார். ஆனால் பதவியேற்பின் போது அவர் இல்லை. தென் மாவட்டத்தைச் சேர்ந்த, முன்னாள் முதல்வர், இப்போதைய துணை முதல்வரின் தம்பி பதவியேற்கிறார். இதற்கு ஆவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வந்திருக்க வேண்டாமோ? வரவில்லையே?

திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் வேட்பாளர் ஆக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் முத்துராமலிங்கம் உள்ளிட்ட கட்சிக்காரர்கள் சிலரே ஓ.ராஜா பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்தனர். மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் ராஜன்செல்லப்பா, மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளான், தெற்குத் தொகுதி எம்எல்ஏ சரவணன் ஆகியோரை குறிப்பிடும்படியான தலைகள். இவ்வளவு ஏன்… தன் தம்பி பதவியேற்பு விழாவுக்கு, அவரைப் போராடி கழகத்தில் இணைத்த ஓ.பன்னீர் செல்வமே வரவில்லையே?

இதில் இருந்தே ராஜா கட்சியில் மீண்டும் இணைக்கப்பட்டதில் முதல்வர் எடப்பாடிக்கு விருப்பம் இல்லை என்பது பசும்பால் போல தெளிவாகத் தெரிகிறது.

முதல்வரின் வாய்மொழிக்கு இணங்கதான் அமைச்சர்கள் அந்த விழாவில் தலைகாட்டவில்லை என்கிறார்கள் மதுரை அதிமுகவினர். இந்த ஈகோ டென்ஷனில்தான் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் நிகழ்வில் பங்கேற்கவில்லை.

What is happening in AIADMK - Mini Series 5

“ஆக, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி வரை போராடி சில காரியங்களை சாதித்து வந்தாலும், இங்கே அவருக்கு தொடர்ந்து செக் வைப்பதில் தீவிரமாக இருக்கிறது எடப்பாடி தரப்பு. முதல்வரின் மனசாட்சிகளாக இருக்கும் வேலுமணியும், தங்கமணியும் உள்ளாட்சி நிதி கேட்கிறேன் என்று டெல்லி போனார்கள்.

ஆனால் அவர்கள் முதலில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்தித்தார்கள். உள்ளாட்சி நிதி பற்றி பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் என்ன கேட்க முடியும்? தமிழக விவகாரங்களை கவனிக்க முன்பு வெங்கையா நாயுடு இருந்தார். அவர் துணைக் குடியரசுத் தலைவர் ஆகிவிட்டதால் இப்போதைய அதிமுகவின் பாஜக ‘மேலிடப் பொறுப்பாளராக’ இருக்கும் நிர்மலா சீதாராமனிடம் சென்று இரண்டு அமைச்சர்களும் பேசியிருக்கிறார்கள். அதில் ஓ.பன்னீர் விவகாரம்தான் முதலிடம் பிடித்திருக்கிறது. அதன் பின் அருண் ஜேட்லியை சந்தித்துதான் நிதி விவகாரம் பேசியிருக்கிறார்கள். இது கூட எங்களுக்குத் தெரியாதா?எங்களுக்கு என்ன டெல்லியில் ஆட்களா இல்லை?” என்று சிரிக்கிறார்கள் தர்மயுத்த காலத்தில் இருந்து ஓ.பன்னீருடன் இருப்பவர்கள்.

டெல்லி தெய்வத்துக்குதான் எத்தனை எத்தனை பூசாரிகள்?

(திங்கள் கிழமை பயணிப்போம்…)

முந்தைய பகுதிகள்

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 1]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 2]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 3]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 4]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *