அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் 4
ஆரா
ஓ.பன்னீர் துணை முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து தர்மயுத்தம் நடத்திய அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மூலமாக ஏதேனும் ஆதாயம் அடைந்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தால், உதட்டையே பிதுக்குகிறது அந்த டீம்.
ஓ.ராஜாவிடம் இருந்து அனைத்து மாவட்ட ஏடிகளும் கையெழுத்திட்ட டிரிப் ஷீட் கிடைப்பதை எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்த மூன்று மாதங்களில் தடுத்து நிறுத்தினார். அது மட்டுமல்ல, ‘பன்னீர் அணியைத் தங்களோடு இணைக்கும் நோக்கில்தான், ஆட்சியை எதிர்த்து வாக்களித்தபோதுகூட தேனி மாவட்ட டிரிப் ஷீட் உரிமையை அவர் பன்னீர் தரப்பிடமே விட்டு வைத்திருந்தார்’ என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில்.
பன்னீரைப் படிப்படியாகப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற வகையில் தமிழக முதல்வர் மேற்கொண்ட அடுத்த அதிரடி நடவடிக்கை பற்றி தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் நெடுநாட்களாக விவாதம் நடந்தது. தேனி மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்கள், சத்துணவுப் பணியாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நூற்றுக்கணக்கில் காலியாக இருந்தன. இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்தே இவை காலியாக இருந்த நிலையில் அவற்றை நியமிக்குமாறு பல்வேறு நிலைகளில் கோரிக்கைகள், போராட்டங்கள் நடந்தன.
2017 ஜூன் மாதமே, ‘நேர்காணல் முடிந்து ஒன்பது மாதங்கள் ஆகியும் சத்துணவுப் பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை” என்ற குரல் வெளிவந்தது. இது செய்தித்தாள்களிலும் செய்தியாக வெளிவந்தது.
இன்றைய அரசியல் பற்றி அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். சத்துணவு அமைப்பாளர் பணி என்பது முழுக்க முழுக்க ஆளுங்கட்சியினரின் ஒப்புதலுடனே முடிவு செய்யப்படும், அதை அப்படியே கலெக்டர் வெளியிடுவதுதான் இயல்பு என்பது. மாவட்ட அளவு நிர்வாகிகள், ஒன்றிய அளவு நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டிய கட்சிக்காரர்கள், கட்சிக்கார்கள் வீட்டுப் பெண்கள் உள்ளிட்டோருக்கு இந்தப் பணிகளை வாங்கித் தருவார்கள். இதற்காகப் பலரும் பலரிடம் பண வசூல் நடத்துவதுகூட தமிழ்நாட்டில் பரவலாக இன்று அறியப்பட்ட செய்திதான்.
இதெல்லாம்தான் ஓர் அரசியல்வாதிக்கு மாவட்ட அளவில் கட்சிக்காரர்களிடம் செல்வாக்கைத் தக்கவைக்கும் விஷயங்கள். குறிப்பாகப் பெண்களிடம் செல்வாக்கு பெறும் விஷயங்கள்.
“அண்ணந்தான் எனக்கு சத்துணவு வேலை போட்டுக் கொடுத்தாரு. இன்னிக்கு நான் நல்லா இருக்கேன்” என்று அவர்கள் இதை காலாகாலத்துக்குச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஒலிபெருக்கி பிரச்சாரம் இல்லாமல் பெண்களின் இந்த வாய்மொழிப் பிரச்சாரமே குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்குப் பெரும்பலனைக் கொடுக்கும்.
இதே சத்துணவுப் பணியாளர்கள் நியமனம் அண்மையில் தேனியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தரேதான் முறைப்படி நியமனங்களைச் செய்தார்.
அதன் பின் நடந்தவற்றை தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர் நம்மிடம் சொன்னார்கள்.
“இது துணை முதல்வர் மாவட்டம். ஓபிஎஸ் அண்ணன்கிட்ட சத்துணவு வேலைக்காக ஏகப்பட்ட பேரு ரெகமண்டுக்கு கேட்டாங்க. எவ்வளவு பேருக்குத்தான் அவர் வாங்கிக் கொடுப்பார். ஆனா, எங்களுக்கு ஒரு நம்பிக்கை. நம்ம மாவட்டத்துல நம்ம அண்ணனைத் தாண்டி என்ன நடந்துடும்னு. சமீபத்துல கலெக்டர் ஆபீஸ்ல 60 பணிக்கு மேல போட்டாங்க. ஆனா பாருங்க ஓபிஎஸ் தரப்பு சைடுலேந்து சொன்ன பல பேருக்கு வேலை போடவே இல்லை.
கம்பம் ஜக்கையன் எம்.எல்.ஏ.வா இருக்காரே. தினகரன் அணிக்குப் போயிட்டு கடைசி நேரத்துல திரும்பி எடப்பாடி அணிக்கு வந்தாரே அவர்தான். அவரோட தொகுதியில அவர் பல பேருக்கு சிபாரிசு பண்ணிருந்தாரு. ஆனா, கிடைக்கல. உடனே அவர் கலெக்டர் ஆபீஸ், சிஎம் ஆபீஸ் வரைக்கும் போனைப் போட்டு அலப்பறை பண்ணி, தன்னோட தொகுதியில தான் சிபாரிசு இல்லாம போட்ட நியமனங்களை நிறுத்தி வைக்கணும்னு கேட்டாரு. கலெக்டர் ஆபீஸ்லயும் நிறுத்தி வெச்சாங்க. சிஎம் செல்லுலேர்ந்து சொல்லியிருந்தாதான் இதெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கு. ஆனால், ஓபிஎஸ் தரப்புல கொடுத்த ரெகமண்டுல பெரும்பாலும் ஏத்துக்கப்படல.
அப்படின்னா என்ன நடக்குது? ஜக்கையனுக்கு இருக்கிற மதிப்பு மாவட்டத்துல துணை முதல்வர், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு இல்லையானு ஒரு பேச்சு கட்சிக்காரங்க மத்தியில உண்டாகிடிச்சு. இப்படி ஒரு பேச்சை ஏன் உண்டாக்கணும்? இப்படி ஒரு பேச்சை தேனி மாவட்டத்துல உண்டாக்கணும்தான் திட்டமே! அது நடந்துடுச்சு. சத்துணவு அமைப்பாளர்கள் பணி நியமனத்தில்கூட தலையிட முடியாத அளவுக்குத்தான் இருக்கிறாரா துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்? டெல்லி வரை செல்வாக்கு பெற்றிருக்கும் பன்னீருக்கு தேனியில் இதுதான் நிலையா?” என்கிறார்கள் அவர்கள்.
இப்படி ஒவ்வொரு கட்டமாகப் பன்னீர் பலவீனப்படுத்தப் பட்ட பிறகுதான், ஓ.ராஜா நீக்கம் நடந்தது. ஓ.ராஜா நீக்கம் நடந்த 19ஆம் தேதிக்கும், அவர் மீண்டும் சேர்க்கப்பட்ட 24ஆம் தேதிக்கும் இடையே தேனி – பெரியகுளம் இடையே இருக்கும் கைலாசப்பட்டி பகுதியில் இருக்கும் ஒரு தோட்ட வீட்டில் அதிமுகவின் இரு அதிகார மையங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடந்தது.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என டெல்லி வரை பன்னீர் தன் தொடர்புகளை துரிதப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான் கைலாசப்பட்டியில் அந்த சமரசப் பேச்சுவார்த்தையும் தொடங்கியிருந்தது.
கைலாசப்பட்டியில் நடந்தது என்ன?
(பயணிப்போம்)
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 1]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 2]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 3]