அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் 2

அரசியல் சிறப்புக் கட்டுரை

ஆரா

போன வாரம் ஓ.பன்னீரின் தம்பி ராஜாவை நீக்கினார்கள், இந்த வாரம் சேர்த்துக் கொண்டார்கள். போன வாரம் நீக்கியதும், ‘பன்னீர் தம்பியவே நீக்கிட்டாங்க. இனி அவ்ளோதான் சோலிய முடிச்சிட்டாய்ங்க’ என்ற குரல் தேனியில் கேட்டது.

இந்த வாரம் ராஜா கட்சியில் இணைக்கப்பட்டதும், ‘பாத்தீங்களா… பன்னீரு சும்மாவா?’ என்ற குரலும் அதே தேனியில்தான் கேட்கிறது.

ஆனால், இந்த இரு தேனி குரல்களையும் தாண்டி, ‘‘தன் தம்பியவே தம்பிய பன்னீர் நீக்குவாப்லயா? ஆனால், அவர் கையெழுத்தோட நீக்கினாங்க. இப்ப மறுபடியும் சேர்த்துட்டாங்க. பன்னீர் தம்பிய நீக்கினா என்ன ரியாக்‌ஷன்ஸ் வரும்னு ஒரு டெஸ்ட் பண்ணிப் பார்த்திருக்காங்க. தேனியில ஓர் இலை கூட அசையல. சேர்த்துட்டாங்க. எல்லா அதிகாரமும் எடப்பாடி கையிலதான் இருக்குனு பன்னீருக்குப் புரிய வைக்குறதுக்கானதான் ஒரு டெக்னிக்தான் இது” என்ற இன்னொரு குரல் சென்னையில் இருந்து கேட்கிறது.

கடந்த ஐந்து நாட்களில் அதிமுகவில் இருந்து வெளிவந்திருக்கும் மெசேஜ் இதுதான். ஒருங்கிணைப்பாளர் பெரிதா, இணை ஒருங்கிணைப்பாளர் பெரிதா என்றால் ஒருங்கிணைப்பாளர்தான் பெரிது. அந்த வகையில் பார்த்தால் ஓ.பன்னீர்செல்வம்தான் கட்சியின் அதிகாரத்தைக் கை கொண்டவராக இருக்க வேண்டும்.

ஆனால், அதிமுகவின் எதார்த்தம் அது இல்லை. இந்தச் சித்திரம் திடீரென இன்று வரையப்பட்டது அல்ல.

2017 பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை ஆறு மாத காலங்கள் தர்ம யுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், அதன்பின் அணிகளை இணைத்ததில் இருந்தே அவரது செல்வாக்கு கட்சியிலும் பொது வெளியிலும் சரியத் தொடங்கியது என்பதே உண்மை.

பன்னீரோடு சேர்ந்து தர்ம யுத்தம் நடத்திய ஒரு தலைமைக்கழக நிர்வாகி நம்மிடம் மனம் திறந்தார்.

“அணிகள் இணைப்பே பாஜகவால்தான் நடந்தது, மோடியால்தான் நடந்ததுனு பன்னீரே வெளிப்படையாகச் சொன்ன பிறகுதான், எப்படிப்பட்ட கட்சி இப்படி எடுப்பார் கைப்பிள்ளை ஆகிடுச்சேனு வெறுப்பாயிடுச்சு சார். அணிகளை இணைக்கிறதுல பன்னீருக்கும் இஷ்டமில்லை. எடப்பாடிக்கும் இஷ்டமில்லை. ஆனா, டெல்லியோட நிர்பந்தம்தான் இதுக்குப் பின்னாடி இருந்துச்சுங்றதைத் தவிர வேற ஒண்ணுமே இல்லை. உடைஞ்ச கண்ணாடியை தண்ணியத் தடவி ஒட்ட வைக்க முடியுமா? அப்படித்தான் இருக்கு நிலைமை.

தினகரன் அணி பிரிஞ்சு 18 எம்.எல்.ஏ.க்களோடு இருந்தப்ப, இனியும் எடப்பாடியும் பன்னீரும் தனி அணியா இருக்கக் கூடாதுனு டெல்லி நினைச்சது. அதுக்காக அப்ப ஆட்சிப் பொறுப்புல இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தையும் வெச்சிப் பேசி, இரட்டை இலை சின்னத்தை பன்னீர் அணியில் இருக்கும் மதுசூதனனுக்கு வழங்க வைச்சு, ஒரு வழியா ஆகாத பொண்டாட்டியோட கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க.

அப்போ பாஜகவோட அழுத்தத்துக்கு ஆட்பட்டு பன்னீர் சேர்ந்ததில் இருந்தே அவரோட கிராப் சரிய ஆரம்பிச்சிடுச்சு. அதோட அடுத்தடுத்த கட்டம்தான் இன்னிக்கு பன்னீர் தம்பியான ராஜாவையே நீக்கியதும் பின்னாடி சேர்த்ததும்” என்கிறார் அவர்.

அணிகள் இணைப்பால் முழு பலன் அடையப்போவது முதல்வர் எடப்பாடி பழனிசாமிதானே தவிர வேறு யாரும் அல்ல என்பதை இணைப்புக்கு முன்னரே பன்னீர் அணியினர் பன்னீரிடம் எடுத்துச் சொன்னார்கள். ஆனால், அதை பன்னீர் கேட்கவில்லை.

What is happening in AIADMK - Mini Series 2

தமிழ்நாட்டில் தனது தலையாட்டும் ஆட்சிக்குப் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் பாஜக ஏற்பாட்டில் இரு அணிகளும் ஒட்டப்பட்டது.

ஆனால் 2017, 18ஆம் ஆண்டுகளுக்கான ‘வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சிறந்த அரசியல்வாதி’ என்ற விருதுக்குத் தகுதியான முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதை தனக்கு மிகச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். அணியை இணைய வைத்ததில் இருந்து இப்போது வரை ஓ.பன்னீருக்கான அதிகாரம் கட்சியில் என்ன, ஆட்சியில் என்ன என்று விசாரித்தால் எடப்பாடியின், ‘அதி தீவிர அரசியல்’ புரியும்.

பன்னீரை இணைத்துக் கொண்டேன் என்று டெல்லிக்கு புன்னகை முகம் காட்டிக் கொண்டார். ஆனால், இணைப்பில் இருந்தே ஓ.பன்னீரின் மாநில, மாவட்ட, சமூக என ஒவ்வொரு லெவல் அரசியல் கதவுகளையும் அடைத்துக்கொண்டே வந்திருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுகவை துல்லியமாய் கவனிக்கும் அரசியல் நோக்கர்கள்.

“2017 ஆகஸ்டுக்கு முன்னரே பன்னீர் அணி தனியாகச் செயல்பட்டால் அவரது செல்வாக்கு எப்படி இருக்கும், ஆட்சியோடு இணைத்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்று முதல்வர் எடப்பாடியால் ரகசிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தனியாக இருந்தால் பன்னீர் மிகப்பெரும் சக்தியாக குறிப்பாகத் தென் மாவட்டங்களில் இன்னும் சொல்லப் போனால் அவர் சார்ந்த சமூகத்திலும்கூட பெரும் பிரவாகம் எடுப்பார். ஆனால், ஆட்சியில் சேர்ந்தால் அவரது இமேஜ் டோட்டல் காலி என்று ஆய்ந்து சொன்னது அந்த அறிக்கை. அதன் பின்னரே ஓ.பன்னீரை இணைத்துக்கொள்ள சம்மதித்தார் முதல்வர்” என்கிறார்கள் அவர்கள்.

பன்னீர் விளையாடிய பரமபத விளையாட்டில் அணிகள் இணைப்பு என்பது ஏணியல்ல.

(பயணிப்போம்)

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 1]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *