அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 13
ஆரா
அதிமுகவினர் காத்திருக்கும் அந்த அச்சே தின் எது?
அச்சே தின் என்றால் 2014 ஆம் ஆண்டு பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தில் முதன்மையாக முழங்கிய ஓர் இந்தி வார்த்தை. அதாவது நாட்டுக்கு நல்ல நாள் பிறக்க, பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று மூலைமுடுக்கெல்லாம் பிரசாரம் செய்தனர்.
இப்போது அதிமுக தனக்கு ’அச்சே தின்’ ஆக கருதும் அந்த நாள் எதுவென்றால், தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கும் நாள்தான். அப்படி தேர்தல் நாள் அறிவிக்கப்படும் பட்சத்தில் அன்று முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகிவிடும். அதாவது மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றாகிவிடும். இப்போது மத்திய அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு வந்து போகலாமே தவிர, அவர்களால் உறுதியான, ஆவேசமான நடவடிக்கைகள் எதுவும் எடுத்துவிட முடியாது. இதுவரை நடத்திய ரெய்டுகள் போல் இனியும் நடத்த முடியாது.
எனவே தேர்தல் அறிவிக்கும் நாள் வரை காத்திருந்துவிட்டு அப்புறம் பாஜகவோடு கூட்டணி இல்லை என்பதை அறிவிக்க வேண்டும் என்பதே அதிமுகவில் பல முக்கிய தலைகளின் நிலைப்பாடு.
தம்பிதுரை தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக கருத்து வெளியிட்டு வருவதன் பின்னால் பல அதிமுகவினருக்கும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது. பலர் தம்பிதுரைக்கு போன் போட்டு, ‘அண்ணே நான் சொல்ல நினைச்சதை நீங்க சொல்லீட்டீங்க. மத்திய அரசுன்ற அதிகாரம் மட்டும் இல்லேன்னா தமிழ்நாட்ல எல்லாம் பிஜேபிய யாருன்னா மதிக்கப் போறா? நீங்க நடத்துங்கண்ணே’ என்ற ரீதியில் கேபி.முனுசாமி, அன்வர் ராஜா உள்ளிட்ட பலரும் போன் போட்டு பாராட்டுகிறார்கள்.
தம்பிதுரைக்கு போன் போட்டு பாராட்டாமலேயே பலரும் பாஜகவுடன் கூட்டணி வைத்துவிடக் கூடாது என்ற வேண்டுதலில் இருக்கிறார்கள்., காரணம் அதிமுகவின் கட்சி நலன் என்பதைத் தாண்டி அவர்களின் சுயநலனும் அதில் கலந்திருக்கிறது.
ஒருவேளை பாஜகவோடு கூட்டணி வைத்தால், அதிமுகவிடம் பாஜக கேட்கும் தொகுதிப் பட்டியலில் கோயமுத்தூர், திருப்பூர், மதுரை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்சென்னை, வேலூர் உள்ளிட்ட தொகுதிகள் இருக்கின்றன. குறிப்பாக சென்னையில் தென்சென்னை அல்லது மத்திய சென்னையை பாஜக கேட்கும்.
தென்சென்னையில் மீண்டும் தன் மகன் ஜெயவர்தனை போட்டியிட வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் ஜெயக்குமாரும் உள்ளூர பாஜக அணியை விரும்பவில்லை.
கோவையில் தனி ராஜாங்கமே நடத்திவரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை நாடாளுமன்றத் தொகுதிக்காக தனது நட்பு வட்டத்தில் இருந்து சிலரை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார். அவர் வீணாக கோவையை பாஜகவிடம் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
கன்னியாகுமரி தொகுதியைப் பொறுத்தவரை இனி ஒருமுறை இங்கே அதிமுகவை தவிர வேறு எந்தக் கட்சியும் ஜெயிக்க முடியாது என்று இப்போதைய எம்.பி.யும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனை வைத்துக்கொண்டே ஒரு மேடையில் பேசினார் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியான அதிமுகவின் தளவாய் சுந்தரம். அவர் அதிமுக சார்பாக கன்னியாகுமரி தொகுதியைக் குறிவைத்திருக்கிறார்.
இப்படி அதிமுகவில் ஒவ்வொருத்தரும் தங்கள் தொகுதியை பாஜகவிடம் காவு கொடுத்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையோடு தனித்தனியாக திட்டம் போட்டு வருகிறார்கள். இதையெல்லாம் தாண்டி இன்னொரு அச்சமும் அவர்களுக்கு இருக்கிறது.
ஒருவேளை பாஜகவோடு கூட்டணி வைத்துவிட்டால் தினகரனுக்கு அதுவே மிகப்பெரிய பிரசார பலமாகிவிடும். ’‘லேடியா மோடியா என்று போன தேர்தலில் கேட்டார் அம்மா. இந்த தேர்தலில் அம்மாவின் கொள்கைக்கு மாறாக மோடியிடம் லேடியை சரணடைய வைத்துவிட்டனர். அம்மா ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் அந்த அணி ஜெயிக்கக் கூடாது” என்று பிரசாரம் செய்வாரே தினகரன்…
இத்தனைக் கவலைகள் அதிமுகவை தின்னத் தகுதியுடையவையாக இருக்கின்றன. இதையெல்லாம் கடந்து பாஜகவுடன் கூட்டணி வைக்கவேண்டுமா என்பதுதான் இன்று ஒவ்வொரு நிர்வாகிக்குள்ளும் ஓங்கி ஒலிக்கும் குரல்!
(பயணம் தொடரும்…)
முந்தைய பகுதிகள்
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 1]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 2]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 3]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 4]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 5]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 6]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 7]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 8]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 9]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 10]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 11]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 12]