தம்பிதுரைக்குப் பின்னால் என்ன அஜெண்டா? மினி தொடர் – 12

அரசியல் சிறப்புக் கட்டுரை

அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர்-12

ஆரா

அதிமுகவில் என்னதான் நடக்கிறது என்ற நமது தொடருக்குப் பொங்கல் விடுமுறை விட்டாலும் விட்டோம். அதற்குள் தம்பிதுரை போன்ற அதிமுகவினர் ஓவர் டூட்டி பார்த்துவிட்டார்கள்.

சமீப நாட்களாகவே பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் எதிரான ரவுத்திரக் குரல்களை அதிமுகவில் அதிகம் கேட்க முடிகிறது. நாடாளுமன்றத்தில் முத்தலாக் பிரச்சினையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா அதிமுகவின் திட்டவட்டமான எதிர்ப்பை எடுத்து வைத்தார். பத்து சதவிகித பொருளாதார இட ஒதுக்கீட்டில் தம்பிதுரை பழைய அண்ணாதுரையாகவே மாறி நாடாளுமன்றத்தை உலுக்கி ராகுல் காந்தியை மீண்டும் கண்ணடிக்க வைத்துவிட்டார்.

என்னாச்சு அதிமுகவுக்கு?

2.O படத்தில் வருகிற மாதிரி அதிமுகவின், ‘சிப்’பை யாராவது மாற்றி விட்டார்களா? அடிமை ’சிப்’பை அகற்றிவிட்டு, உரிமைக் குரல் என்ற ‘சிப்’பை அதிமுகவுக்குள் பொருத்திவிட்டார்களா? என்னதான் நடக்கிறது அதிமுகவுக்குள்?

எங்கெங்கே பறந்தாலும் தேர்தல் நேரத்தில் அதிமுக தன் காலைத் தமிழ்நாட்டு மண்ணில்தான் பதிக்க வேண்டும். பொதுத் தேர்தலை சந்திக்கத் தேவையில்லாத இதுவரையிலான பொழுதுகளில் பாஜகவுக்கு பல்லக்குத் தூக்கி, காவடி தூக்கி, நேர்த்திக் கடன் செலுத்தியதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான உத்தி என்று இரண்டே வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள்.

ஆனால் இப்போது தேர்தலை எதிர்கொண்டாக வேண்டும். மக்களை சந்தித்தாக வேண்டும். மக்களிடம் ஏற்கனவே அதிமுக அரசுக்கான, ‘ஆட்சிக்கு எதிரான மனநிலை’ மக்களிடம் இருக்கிறது. இதோடு மத்திய அரசுக்கு எதிரான மக்கள் மனநிலையும் சேர்ந்தால் இரண்டு அதிருப்தியும் சேர்ந்து அது தங்கள் தலையிலேயே வந்து விழும் என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் அதிமுகவினர். அதனால்தான் தம்பிதுரை, ‘பாஜகவை தூக்கிச் சுமக்க நாங்கள் என்ன பாவம் செய்தவர்களா?’ என்று கேட்டிருக்கிறார்.

ஒருபக்கம் கட்டாயக் காதல் போல பாஜக அதிமுகவிடம் கூட்டணிக்காக கடும் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ‘மக்களுக்கு நன்மை செய்பவர்களோடு கூட்டணி’ என்று முதல்வர் அறிவித்துவிட்டார். மோடி சொல்லியே அணியை இணைத்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த ஓ.பன்னீர் செல்வம், ‘தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும்’ என்று மதில் மேல் பூனையாகக் கூறியிருக்கிறார். ஆனால் தம்பிதுரை போன்றவர்களோ பாஜகவை மிகக் கடுமையாகத் தாக்கி பாஜகவோடு கூட்டணி என்பது இருக்கவே கூடாது என்று திட்டமிட்டு வேலை செய்கிறார்கள்.

இதை தம்பிதுரை மட்டும் தனியாளாக நின்று செய்யவில்லை என்பதுதான் அதிமுகவின் எதார்த்தம். பாஜகவின் பருப்பு இந்தியா முழுதும் வெந்தாலும் தமிழ்நாட்டில் வேகாது என்பதே கள நிலவரம். இதை எடப்பாடி பழனிசாமி உணர்ந்தே இருக்கிறார். தேர்தலுக்குப் பின் அதிமுகவில் தனக்கு ஒரு பிடிமானம் வேண்டுமென்றால் தன்னால் ஜெயித்த சில பல எம்.பி.க்கள் வேண்டுமென்று அவர் கணக்குப் போடுகிறார். மொத்தமாக தோற்றால் அதிமுகவின் இணைப்புக்கும், தனது சறுக்கலுக்கும் அது வித்திடும் என்பதும் அவர் கணக்கு.

அதனால் அதிமுக ஆட்சி மன்றக் குழுவில் பேசப்பட்டதன் தொடர்ச்சியாகத்தான் தம்பிதுரை பாய்கிறார். ஆனால் தனக்கு எப்போதும் பாஜக, டெல்லி தயவு தேவை என்ற நிலையில் பன்னீர்செல்வம் பதுங்குகிறார்.

தம்பிதுரையின் இந்தப் பாய்ச்சலுக்கு டெல்லி வட்டாரத்தில் இன்னொரு பின்னணியைச் சொல்கிறார்கள்.

“தம்பிதுரை இனியும் அடுத்த மக்களவைத் தேர்தலில் நின்று எம்.பி. ஆக முடியுமா முடியாதா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார். பாஜகவின் சரிவை இந்திய அளவில் உணரத் தொடங்கிவிட்ட அவர் இதுவரை சசிகலாவைப் பற்றியோ, சசிகலா குடும்பத்தைப் பற்றியோ லட்சுமண ரேகை தாண்டிப் பேசியதில்லை. மேலும் சுப்பிரமணியன் சுவாமியை சிலபல முறை சந்தித்திருக்கிறார் தம்பிதுரை. எதிர்கால அதிமுக என்பது சசிகலாவின் கைக்கே செல்லும் என்று அவர்கள் இருவரும் விவாதித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே பாஜகவை கடுமையாக எதிர்த்து, ஒருவேளை அதிமுக இணைப்பு நடந்தால் அதில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள துண்டுபோடுகிறார்’ என்கிறார்கள் டெல்லி வாலாக்கள்.

அதிமுகவில் ஒவ்வொருவருக்கும் ஒரு அஜெண்டா இருக்கிறது. அதனால்தான் அதிமுகவால் இப்போது ஒரு அஜெண்டாவை செயல்படுத்த முடியவில்லை.

தம்பிதுரைக்குப் பின்னால் இத்தனை அஜெண்டாக்கள் இருக்கும் நிலையில், அந்த ’அச்சே தின்’ க்காகத்தான் காத்திருக்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

என்ன அச்சே தின்?

(பயணம் தொடரும்…)

முந்தைய பகுதிகள்What is happening in AIADMK - Mini Series 12

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 1]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 2]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 3]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 4]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 5]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 6]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 7]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 8]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 9]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 10]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 11]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *