அதிமுக பொதுக்குழு எப்போது? மினி தொடர் – 11

அரசியல் சிறப்புக் கட்டுரை

அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர்- 11

ஆரா

அதிமுக பொதுக்குழு நடக்குமா? அது அதிமுக பொதுக்குழுவாக நடக்குமா? தேர்தல் கூட்டணியை விட இந்த இரண்டு கேள்விகள்தான் இப்போது அதிமுக நிர்வாகிகளிடையே முக்கியமானதொரு விவாதமாக முன்னிற்கிறது. அதிமுக அம்மா , அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்று தங்கள் மேடையின் நெற்றியில் எழுதி ஒட்டிக் கொண்டு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நடத்திய பொதுக்குழு நீதிமன்ற வழக்கில் இருக்கிறது. ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் சசிகலா தொடுத்த வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு என்பது ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது கூட்டியதுதான் கடைசியாகக் கூட்டியது. அதற்குப் பின் அதிமுக பொதுக்குழு என்ற பெயரில் இதுவரை கூட்டம் நடக்கவில்லை. இனி எப்போது அதிமுக பொதுக்குழு நடக்கும் என்பதுதான் கட்சி நிர்வாகிகளின் கேள்வி. இப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்க முடியுமா? பொதுக்குழுவை கூட்டுவதற்கான ஆயத்த நிலையில் கட்சி இருக்கிறதா? அடுக்கடுக்காக கேள்விகள் இருக்கின்றன.

அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு சட்ட ரீதியாக தடை கிடையாது. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிமுகவில் புதிய ஒருங்கிணைப்பாளர்கள் நியமனத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடுத்தபோது, ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஒரு உரிமையியல் வழக்கு இருக்கிறது. எனவே இதுபற்றி இப்போது விசாரிக்க முடியாது. கட்சியில் இப்போது உருவாக்கப்படும் பதவிகள் பற்றியெல்லாம் தேர்தல் ஆணையம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க முடியாது என்று கூறிவிட்டது. ஆக தேர்தல் ஆணையம் உடனடி முடிவு எடுக்க விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இந்தப் பின்னணியில் அதிமுக பொதுக்குழு கூட்ட தடை ஏதும் இல்லை. ஆனால், ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பொதுக் குழுவில் தங்களை நிரூபித்துக் காட்டுவதற்காக தனித்தனியாக பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார்கள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் தெரிந்தே இதை செய்துகொண்டிருக்கிறார்கள்.

சட்ட ரீதியாக தடை இப்போது இல்லை என்றாலும், கட்சி அளவில் மிகப்பெரிய தடைகள் இருக்கின்றன. கட்சியில் பல பொறுப்புகள் இன்னும் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. பல மாவட்டங்களில் அதிமுகவில் இருந்து அமமுகவுக்குப் போன கிளைச் செயலாளர்கள், பிரதிநிதிகள், ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய பிரதிநிதிகள், மாவட்ட அளவிலான, மாநில அளவிலான துணை, இணை நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கான பொறுப்புகள் அதிமுகவில் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதோடு பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிகளில் இருக்கும் வெற்றிடங்களையும் நிரப்ப வேண்டும்.

ஜெயலலிதா மரணத்தை அடுத்து தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டதோ இல்லையோ அதிமுக என்ற கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை நிரப்புவதற்குத்தான் இப்போது ஓ.பன்னீர் தரப்புக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டு வருகிறது. மாவட்ட அளவிலான நிர்வாகிகளை நியமிக்கும்போது இது வெளியே தெரிகிறது. ஒன்றிய, கிளை அளவிலான நிர்வாகிகள் நியமனம் நடந்தால் அப்போதும் வெளியே தெரியலாம். பொதுக்குழு உறுப்பினர்களை நியமிப்பதிலும், பல்வேறு மட்டங்களில் உள்ள நிர்வாக காலியிடங்களை நிரப்புவதிலும் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களை அனாயாசமாக நியமித்து வருகிறார். அதாவது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என்று அறியப்பட்டவர்களைக் கூட அவரது கையெழுத்தின் மூலமே நீக்கிவிட்டு அந்த இடங்களுக்கு வேறு நபர்களை நியமித்து வருகிறார்.

ஒருவேளை பொதுக்குழு நடந்தால் கே.பி.முனுசாமி போன்றவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். ஓ.பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து தர்மயுத்தம் நடத்தும்போது எந்தப் பதவியும் இல்லாமலேயே அவர் உரிமைக் குரலை ஓங்கி ஒலித்தவர். இப்போது துணை ஒருங்கிணைப்பாளராக வேறு இருக்கிறார். அதனால் பொதுக்குழுவில் துணை முதல்வர் தரப்புக்கும், முதல்வர் தரப்புக்கும் இடையேயான மோதல் வெடிக்குமோ என்றுதான் அதை தேர்தலுக்குப் பிறகு நடத்திக் கொள்ளலாம் என்று தள்ளிவைக்கும் முயற்சியும் நடக்கிறது. அதிமுக பொதுக்குழு எப்போது அறிவிக்கப்பட்டாலும் அந்தக் காட்சிகளைக் காண தினகரன் மட்டுமல்ல அதிமுகவுக்குள்ளேயே பல பேர் எதிர்பார்ப்பும் ஆர்வமுமாய் காத்திருக்கிறார்கள்.

(பயணம் தொடரும்…)

முந்தைய பகுதிகள்What is happening in AIADMK - Mini Series 10

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 1]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 2]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 3]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 4]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 5]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 6]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 7]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 8]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 9]

[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 10]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *