மொபைல் டேட்டா ஆன் செய்ததும் ஃபேஸ்புக் ஆன்லைனில் இருந்தது. ‘டெல்லி பயணம் முடித்துவிட்டு ஸ்டாலின் ஆகஸ்டு 17 இரவே சென்னை திரும்பிவிட்டார். எப்படி இருந்ததாம் அவரது மூன்றாவது டெல்லி பயணம்?” என்ற கேள்வியை கேட்டது,
அதற்கான பதிலை வாட்ஸ் அப் டைப் செய்யத் தொடங்கியது. “ஆகஸ்டு 16 ஆம் தேதி இரவு டெல்லி புறப்பட்டுச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்டு 17 காலை துணை குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவர் சந்திப்புகள்,
அண்ணா அறிவாலய விசிட், பிரதமர் சந்திப்பு அதில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வந்ததற்கான நன்றி, தமிழகத்துக்கான கோரிக்கைகள் வலியுறுத்தல், உடனடியாக சென்னை திரும்பல் என்று மிக டைட் ஆன மிக சுருக்கமான டெல்லி பயணத்தையே இம்முறை மேற்கொண்டார்.
டெல்லி புறப்படும் முன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் மணி விழாவில் பேசிய ஸ்டாலின், ‘எனக்கு இரண்டு பொறுப்புகள் இருக்கிறது.
ஒன்று திமுக தலைவர், இன்னொன்று தமிழக முதல்வர். நான் என்ன மோடிக்கு காவடி தூக்கவா டெல்லிக்கு போறேன்? நான் கலைஞர் புள்ள. உரிமைகளை கேக்கதான் டெல்லி போறேன்’ என்று சற்று கோபமாகவே கூறினார்.
அந்த மேடையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதும், அதற்கு முன் திருமாவளவன் கொடுத்த சில பேட்டிகளும்தான் முதல்வரை இந்த வார்த்தைகளை கூறும் அளவுக்கு கோபமாக்கியிருந்தன.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்து முதல் முறையாக முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதலே அவருக்கு இருக்கும் அரசியல் நெருக்கடிகளோடு நிர்வாக நெருக்கடிகளும் அதிகம்.
அதனால்தான் ஸ்டாலினால் பல தேர்தல் வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில்தான் அதிமுகவும் பாஜகவும் யார் எதிர்க்கட்சி என்ற போட்டியில் திமுகவுக்கு எதிராக பல்வேறு காய் நகர்த்தல்களை செய்தனர்.
திமுகவும் கடுமையாக பாஜகவை எதிர்த்தது. கட்சி ரீதியாக மட்டுமல்லாமல் ஆட்சி ரீதியாகவும் எதிர்ப்பு தொடர்ந்தது. ஒன்றிய அரசு என்ற வார்த்தைப் பிரயோகத்தில் தொடங்கி திராவிட மாடல் அரசு என்பது வரை பாஜகவையும் மத்திய அரசையும் எரிச்சல் படுத்தின.
அவ்வப்போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்லும் புள்ளி விவரங்கள் ஒன்றிய அரசுக்கு கடும் குடைச்சலைக் கொடுத்தன. இந்த நிலையில் கடந்த மே மாதம் பிரதமரோடு மேடையேறிய முதல்வர் பேசிய பேச்சு, பாஜகவினரை கடுமையாக கோபப்படுத்தியது.
அந்த விழா முடிந்ததும்தான் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலினுடைய உரை இந்தி மொழி பெயர்ப்பு அளிக்கப்பட்டது. பிரதமரும் ஸ்டாலின் உரையைப் பார்த்து கோபம் அடைந்தார்.
இதற்கிடையே மாநில அரசு தொடர்பான திட்டமிடுதல்கள், நிதி நிர்வாக சிக்கல்கள் பற்றி முதல்வர் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தார். அப்போதுதான். ‘தமிழ்நாட்டில் இதே நிதி நிலைமை தொடர்ந்தால் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதே ஒரு பெரிய டாஸ்க் ஆக மாறிவிடும்.
பல்வேறு துறைகளில் பல்வேறு திட்டங்களில் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி வந்து சேரவில்லை. இதில் நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்’ என்று தொடர்ந்து முதல்வருக்கு ரிப்போர்ட்டுகள் வந்துகொண்டிருந்தன.
இந்த நிலையில்தான் டெல்லியில் இருந்து முக்கியமான நபர் மூலமாக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு தகவல் அனுப்பப்பட்டது. கலைஞர் காலத்தில் ஜூனியர் அதிகாரியாக இருந்து அவரின் அன்பையும் பெற்ற அந்த அதிகாரி இப்போது மத்திய அரசில் முக்கியமான இடத்தில் இருக்கிறார்.
அவர் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு தகவல் தரப்பட்டது. ‘மோடியும் அமித் ஷாவும் பல மாநில அரசுகளைப் பார்த்திருக்கிறார்கள் இந்தியாவிலேயே நிர்வாக ரீதியாக சிறந்த மாநிலங்களாக தமிழ்நாடும், கேரளாவும் இருப்பதை பிரதமர் மோடியே தனக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளார்.
திமுகவாக இருந்து பாஜகவை எதிர்ப்பது சரி. அது தேர்தல் மோதல். தமிழ்நாடு என்னும் மாநிலத்தின் முதல்வராக இருந்து இந்திய பிரதமர் மோடியை எதிர்ப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது? ஏன் அரசு ரீதியாகவும் நம்மை எதிர்க்கிறார்கள் என்ற எண்ணம் மோடியிடமும் அமித் ஷாவிடமும் இருக்கிறது.
எனவே மத்திய அரசோடு மோதல் போக்கை கைவிடுங்கள். அவரை தேர்தல் களத்தில் மோடியாக விமர்சனம் செய்யுங்கள். நிர்வாகக் களத்தில் பிரதமர் என்ற வகையில் அணுகுங்கள். அதுதான் தமிழ்நாட்டுக்கும் நல்லது’ என்று அந்த சீனியர் மோஸ்ட் அதிகாரி முதல்வருக்கு சில குறிப்புகளை அனுப்பியுள்ளார்.
இதையும் ஸ்டாலின் ஆராய்ந்தார். அதன் பிறகுதான் மத்திய அரசோடு கடுமையான போக்கைக் குறைத்துக் கொண்டு உரிமையைப் பெறுவது, அதன் மூலம் தமிழக நிதியாதாரத்தை நிலை நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக பிரதமரை அழைக்க டெல்லி செல்ல திட்டமிட்டார். ஆனால் உடல் நலம் சரி இல்லாததால் தமிழக அரசு சார்பில் குழுவினரை அனுப்பி வைத்தார்.
இந்த போட்டி துவக்க விழாவுக்காக தமிழகம் வந்த மோடிக்கான வரவேற்பில் ஒரு சிறு குறையும் இல்லாதவாறு பார்த்துக் கொண்டார். மோடியை எதிர்த்து போராட்டம் நடத்திய தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸாரை கூட வீட்டுக் காவலில் வைத்தார்.
இந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் அழகிரி தமிழக காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்த போக்கைத்தான் விடுதலை சிறுத்தைகளும், திராவிடர் கழகமும் பாஜகவோடு இணக்கமாகி விடுவாரா என்ற சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்களின் பார்வையும் கருத்துகளும் முதல்வரின் கவனத்துக்கு சென்றுகொண்டுதான் இருந்தன.
இந்தப் பின்னணியில்தான் முதல்வர் டெல்லி செல்வதற்கு முன்பு திருமாவளவனின் மணி விழாவில், ‘எனக்கு இரண்டு பொறுப்புகள் இருக்கின்றன. திமுக கட்சித் தலைவர், தமிழக முதல்வர்’ என்று வீரமணிக்கும் திருமாவளவனுக்கும் நினைவுபடுத்தியிருக்கிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
இதைப் படித்த மெசஞ்சர், “முதல்வரின் இந்த போக்கு நியாயமாகவே படுகிறது. இன்னொரு பக்கம் தமிழ்நாட்டு அமைச்சர்களை அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.
செந்தில்பாலாஜி, ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற அமைச்சர்கள் அமலாக்கத்துறை விசாரணையில் இருக்கிறார்கள். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ, ‘அமலாக்கத்துறை கொஞ்சம் பிசியா இருக்கறமாதிரி தெரியுது.
அவங்க தமிழ்நாட்டுக்கு வருவாங்க பொறுங்க’ என்றெல்லாம் ஓப்பனாக பேசியிருக்கிறார். அண்ணாமலை என்ன அமலாக்கத்துறை இயக்குனரா என்று செந்தில்பாலாஜியும் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் அரசு என்ற ரீதியில் நாம் எவ்வளவுதான் இணக்கமாக போனாலும் திமுக அரசை களங்கப்படுத்திட மத்திய அரசின் அமலாக்கத்துறை தமிழக அமைச்சர்களை குறிவைத்து செயல்பட்டு வருவது பற்றி முதல்வரிடம் சில சீனியர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கு முதல்வர் என்ன சொன்னார் தெரியுமா? ‘அமலாக்கத்துறை வராத அளவுக்கு அமைச்சர்களின் செயல்பாடு இருக்க வேண்டும்.
அதை அவர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார் முதல்வர்” என்ற மெசேஜை செண்ட் செய்துவிட்டு ஆஃப் லைன் போனது.
பிரதமரை சந்திப்பது ஏன்?: மு.க.ஸ்டாலின்