பிரிட்டன் -பிரச்சனை என்ன? 3 – முரளி சண்முகவேலன்

அரசியல் சிறப்புக் கட்டுரை

பிறந்த நாட்டைவிட்டு பிரிட்டன் வந்து வாழும் என்னைப் போன்றோருக்கு, தேச எல்லைகள் செயற்கையான பிரிவுகளே. மனிதகுல மேம்பாட்டுக்கு எல்லைகள் அப்புறப்படுத்த வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில், பிரிட்டனின் எல்லை மூடப்படுவதைவிட ஐரோப்பிய கண்டத்துடன் இணைக்கப்படுவதில், திறக்கப்படுவதில் முழுச் சம்மதமே. ஆனால், அதே எல்லைகள் ஐரோப்பியக் கண்டத்தை ‘பாதுகாக்கும்’ நோக்குடன், மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து வருகிற அகதிகளை புறக்கணிக்கும் கோட்டையாக மாறிவிடக்கூடாது. அவ்வாறு நிகழ வாய்ப்புகள் அதிகம்.

அகதிகளுக்கெதிரான குரல் ஐரோப்பாவில் ஒலிக்க ஆரம்பித்து வெகுநாட்களாகிவிட்டன. ஐரோப்பிய உறுப்பினர் நாடுகளில் நடைபெறும் தேர்தல்களில் வலதுசாரிகள் வெற்றிபெற்று வருகின்றனர். மக்கள் நல அரசு என்று பெயர்பெற்ற நாடான ஸ்வீடனில், தஞ்சம்புகும் சிரிய அகதிகள் 1000 சுவிஸ் ஃப்ராங்க்குகளுக்குமேல் உள்ள பணம் மற்றும் மதிப்புவாய்ந்த (நகைகள்) பொருட்களை அரசிடம் பராமரிப்புச் செலவுக்காக ஒப்படைத்திட வேண்டும் என அந்த நாடு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

ஆனாலும் எல்லைகளைக் கடந்து பிரச்னைகளுக்கிடையில் பல்வேறு நிற, இனக்குழுக்கள் ஒருவரையொருவர் நம்பி வாழமுடியும் என்பதற்கு ஐரோப்பிய யூனியன் நமது காலத்தில் ஒரு மகத்தான உதாரணம். இந்த உதாரணம், உலகின் மற்ற பகுதிகளையும் காலப்போக்கில் ஊக்குவிக்கும் என்று நம்பவே என் மனம் விரும்புகிறது.

வோர்சாவில் நான் உரையாடிய பல போலந்து மற்றும் கிழக்கு ஐரோப்பிய நண்பர்களுக்கு (இவற்றில் சிலர் முழுநேர அரசியல்வாதிகள்), ஐரோப்பிய யூனியனின் தலைமைப்பீடமான பிரஸ்ஸல்ஸின்மீது நம்பிக்கை இல்லை. அதன்மீதுள்ள சந்தேகம் சோவியத் கால அதிகார அனுபவத்தின் தொடர்ச்சியாக இருக்கிறது.

ஐரோப்பிய யூனியன் – பாராளுமன்றம், கவுன்சில், கமிஷன் என நிர்வாக வசதிக்காக மூன்று பிரிவுகளாக இயங்கிவருகிறது. உறுப்பினர் நாடுகளின் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிற ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முக்கியப் பணி: கமிஷனால் பரிந்துரைக்கப்படும் சட்டங்களும், வர்த்தக, அரசியல் ஒப்பந்தங்களையும், பட்ஜெட்டுகளையும் (உறுப்பினர் நாடுகளுக்கு வருடாந்திர நிதி ஒதுக்கீடு) ஏற்பது அல்லது மாற்றத்துக்காக பரிந்துரைப்பதே ஆகும்.

ஐரோப்பிய கவுன்சில் என்பது உறுப்பினர் நாடுகளின் மந்திரிகள் சபை. இது, ஐரோப்பிய அரசியல் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள்குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டது. உறுப்பினர் நாடுகள் யூனியனுக்குச் செலுத்தும் சந்தா தொகை இங்குதான் முடிவு செய்யப்படும்.

பாராளுமன்றத்துக்கு சட்டங்களை எழுதித் தருவது, முழுப் பணத்தையும் நிதிப்பங்கீடு செய்யும் திட்டவரைவு, ஏற்கப்பட்ட சட்டங்களையும், வர்த்தக ஒப்பந்தங்களையும் அமலுக்குக் கொண்டுவருவது முழுவதும் கமிஷனின் வேலையாகும். ஐரோப்பிய நீதிமன்றம் இதற்கு துணைநிற்கும். ஐரோப்பிய கமிஷன் முழுக்கமுழுக்க அதிகாரிகளால் நடத்தப்படக்கூடியது.

என்னுடன் உரையாடிய சில வோர்சா நண்பர்கள், இவற்றை சோவியத் ஸ்டைல் நிர்வாகம் என்று கூறுகின்றனர். இவர்களைப் பொருத்தவரையில் பிரஸ்ஸல்ஸ் தலைமையகம், ஐரோப்பாவின் மஸ்கோவ். “இங்கே உள்ள ஐரோப்பிய கமிஷன் அதிகாரவர்க்கத்தால் ஆளப்படுகிறது. இந்த அதிகாரவர்க்கம் உருவாக்கும் சட்டங்களும் விதிகளும் ஐரோப்பிய மற்றும் உறுப்பினர் நாட்டிலுள்ள நீதிமன்றங்களாலும் நிறைவேற்றப்படுகிறது.”

குறிப்பிட்ட சில துறைகளில் (உதாரணமாக மனித உரிமை, கூட்டு வர்த்தக ஒப்பந்தங்கள், தொலைத்தொடர்பு, அறிவுசார் சொத்துரிமை) ஐரோப்பிய யூனியனின் நீதிமன்றங்களின் தீர்ப்பே இறுதியானது. இவை, உறுப்பினர் நாடுகளுடைய உயர்நீதிமன்றங்களின் தீர்ப்பையும் கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை கொண்டிருப்பது முக்கிய விவாதமாகியிருக்கிறது.

What is Britain's problem? 3 - Murali Shanmugavelan

நாட்டின் எல்லைக்கு வெளியேயுள்ள அதிகார வரம்புகள் உறுப்பினர் நாடுகளின் இறையாண்மைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மன்றத்துக்கும் எதிரானது என்ற வாதத்தை பிரிட்டனில் உள்ள ‘வெளியே கூட்டணி’ முன்வைக்கிறது. அதிகாரவர்க்கத்துக்கு கட்டுப்பட்டு ஆளப்படும் எந்த அரசியல் மாகாணமும் மக்களுக்காக இயங்காது என்று பிரஸ்ஸல்ஸ்-அதிருப்தியாளர்கள் வாதிடுகின்றனர். இது, சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பாவில் பொம்மை அரசின்மூலம் ஆண்டு வந்ததை ஞாபகப்படுத்துவதாக பிரஸ்ஸல்ஸ்-அதிருப்தியாளர்கள் கருதுகிறார்கள்.

அதேசமயத்தில், அதிகாரவர்க்கத்தால் நிர்வகிக்கப்படும் ஐரோப்பியன் கவுன்சில், மனித உரிமை குறித்து முற்போக்கான சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது என்பது ‘உள்ளே கூட்டணி’யினரின் வாதம். இதில் உண்மை இல்லாமல் இல்லை. இப்படிப்பட்ட சட்டங்கள் எழுதப்படுவதற்கும், நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் காரணம் கமிஷனின் அதிகாரவர்க்கம் அரசியல் வலைக்கு வெளியே இருப்பதுதான் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. உதாரணமாக, அமெரிக்காவின் சமீபத்திய அந்தரங்க சுதந்திர மீறல் விளைவாக அமெரிக்க இணைய நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்க முன்வந்தது, சந்தைக்கு எதிரான ஏகபோக வர்த்தகங்களின் அளவை தொடர்ந்து கட்டுப்படுத்திவருவது, மனித உரிமைக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது போன்ற உதாரணங்களை ‘உள்ளே கூட்டணி’யினர் சுட்டிக்காட்டுகின்றனர். இப்படிப்பட்ட முற்போக்கான சட்டதிட்டங்களை உறுப்பினர் நாடுகள் தாங்களாக நிறைவேற்றியிருக்காது என்பது உள்ளே கூட்டணியினரின் வாதம்.

தொடர்ந்து பேசுவோம்…

கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்

What is Britain's problem? 3 - Murali Shanmugavelan

[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.

[முரளி சண்முகவேலன் முழுமையான கட்டுரைக்கு]

https://minnambalam.com/political-news/special-column-murali-shanmugavelan/

முர் அலி 1 – முரளி சண்முகவேலன்

உள்ளே வெளியே 2 – முரளி சண்முகவேலன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *