எது கறுப்பு நாள்? முதல்வர் ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

Published On:

| By Jegadeesh

What is Black Day?

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மாநில அரசுகளை 90 முறை டிஸ்மிஸ் செய்தார்களே, அவைதான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள் என்று அண்ணாமலை இன்று (ஆகஸ்ட் 9) கூறியுள்ளார்.

”தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நாள் மக்களாட்சியின் கறுப்பு நாள்” என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஆகஸ்ட் 8)  விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மாநில அரசுகளை, அரசியலமைப்பு சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி 90 முறை டிஸ்மிஸ் செய்தார்களே, அவைதான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“தலைநகர் டெல்லியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த நடைமுறைக்கு மாறாக டெல்லி சேவைகள் மசோதா எவ்வாறு வேறுபட்டு இருக்கிறது என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

நமது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  இதை நேற்று பாராளுமன்றத்திலும் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மாநில அரசுகளை, அரசியலமைப்பு சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி 90 முறை டிஸ்மிஸ் செய்தார்களே, அவைதான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள்”என்று கூறியுள்ளார்.

மேலும், “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி  மட்டும் 50 முறை மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தாரே அவைதான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள்.

1975ஆம் ஆண்டு, நாட்டில் எமர்ஜென்சி அறிவித்து ஜனநாயகத்தைப் படு குழியில் தள்ளிய இந்திரா காந்திக்கு, 1980ல் `நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என உங்களது தந்தை தமிழகத்தில் சிவப்புக் கம்பளம் விரித்தாரே அதுதான் ஜனநாயகத்தின் கறுப்பு நாள்.

டெல்லி ஒரு யூனியன் பிரதேசம், இது வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது என்பதை மாநில உரிமைகளுடன் குழப்பிக் கொள்ளும் தமிழக முதல்வருக்கு யாராவது எடுத்து சொல்ல வேண்டும்.

மத்திய பாஜக அரசு கொண்டுவரும் மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு, தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆதரவு தெரிவிப்பதை,

பல ஆண்டுகளாக தமிழக மக்களின் உரிமைகளை அடகு வைத்து, காங்கிரஸ் கட்சியின் உற்ற அடிமையாக இருக்கும் கொத்தடிமைக் கூட்டமான திமுக விமர்சிப்பது வெட்கக்கேடானது.” என்று சாடியுள்ளார் அண்ணாமலை.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“மணிப்பூரில் பாரத மாதா கொல்லப்பட்டாள்” – நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய ராகுல்

இனி கேரளா அல்ல கேரளம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share