டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி-சி‌.வி. சண்முகம்… இடையில் என்ன நடக்கிறது?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளர் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகத்தின் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்கள் இருவர் அதிமுகவில் இணைந்த புகைப்படம்  இன்ஸ்டாவில் வந்து விழுந்தது‌.

இதைத்தொடர்ந்து வாட்ஸப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.

“அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் எம் .பி. யுமான சி.வி. சண்முகத்திற்கும் இடையில் தொடர் மனக்கசப்பு நிலவி வருவதாக தொடர்ந்து அதிமுகவுக்குள் ஒரு பேச்சு உண்டு.

இதற்கு வலு சேர்க்கும் வகையில் டிசம்பர் 24 ஆம் தேதி எம்ஜிஆர் நினைவு தினத்தன்று அதிமுகவின் அத்தனை மாவட்ட செயலாளர்களும் எடப்பாடியோடு மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் எம்ஜிஆர் நினைவிடத்தில் கூடிவிட்ட நிலையில் சி.வி. சண்முகம் மட்டும் வரவில்லை.

இதுகுறித்து எடப்பாடி அருகில் இருந்தவர்கள் சி.வி. சண்முகத்திடம் ஃபோன் போட்டு விசாரிக்க டிராபிக்கில் மாட்டிக்கிட்டேன் இதோ வந்துட்டேன் என்று கூறியிருக்கிறார்.

எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தும் போது உடன் இல்லாத சண்முகம் சில நிமிடங்கள் கழித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த பின்னணியில் எடப்பாடிக்கும் சிவி சண்முகத்துக்கும் இடையே ஒரு மோதல் ட்ராக் தொடர்ந்து உள்ளூர ஓடிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் அதிமுகவினர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று எடப்பாடியிடம் வலியுறுத்தியவர்களில் சண்முகமும் ஒருவர். ஆனால் அதிமுக பாஜக கூட்டணி அமைக்கப்பட்டு தேர்தலில் தோல்வியை தழுவியது.

தேர்தல் முடிவுக்கு பிறகு கடந்த 2021 ஜூலை மாதம் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சிவி சண்முகம், ’பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால்தான் நாம் கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினோம்’ என பேசி சலசலப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு அப்போதைய பாஜக மாநில பொதுச் செயலாளர் கே டி ராகவன், ’உங்களால் தான் தோற்றோம் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு’ என்று பதில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு ஆரம்பம் முதலே பாஜக கூட்டணியை விரும்பாத அதிமுக நிர்வாகிகளில் சிவி சண்முகம் முக்கியமானவர். இந்த பின்னணியில் தான் சில நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் விரைவில் திமுக பாஜக கூட்டணி உருவாகும் என்று சி.வி. சண்முகம் பேச, இதற்கு  பாஜக சார்பில் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி… ‘திமுகவுக்கு வலிமையான எதிர்க்கட்சியாக பாஜக செயலாற்றி வரும் நிலையில், சி.வி. சண்முகத்துக்கு இதுபற்றி சொல்ல தகுதியில்லை’ என்று கண்டனம் தெரிவித்தார். 

சமீப காலமாகவே பாஜகவினரை தாக்கி அவ்வபோது எடப்பாடி ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர். பன்னீருக்கு பாஜக அங்கீகாரம் கொடுக்கிறதோ இல்லையோ  பன்னீர் போல ஒரு போட்டியாளர் இருப்பதை பாஜக ரசிக்கிறது. இதை உணர்ந்த எடப்பாடி அவ்வப்போது பாஜகவுக்கு எதிராக அரசியல் ரீதியாக கருத்து சொல்ல தனது நிர்வாகிகளுக்கு அனுமதி அளித்துள்ளார்.

ஆனால் சி.வி. சண்முகம் இதை தொடர்ந்து மீறி வருகிறார் என்ற வருத்தம் எடப்பாடிக்கு இருக்கிறது.

இந்த நிலையில்தான் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் விரைவில் திமுக- பாஜக கூட்டணி உருவாகும் என்று பேசினார் சி.வி. சண்முகம். இது தொடர்பாக எடப்பாடியே  சி.வி. சண்முகத்தைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். ‘நாமளா பாஜக கூட்டணியை விரட்டிவிட வேண்டாம்.

பன்னீரை அவங்க ஆதரிக்கிறத நிறுத்தணும். அதுக்காகத்தான் நாம சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில பாஜகவுக்கு கடிவாளம் போடும் வகையில் பேசணுமே தவிர, இப்படி பேசலாமா?’ என்று கேட்டிருக்கிறார் எடப்பாடி. அதற்கு சி.வி. சண்முகம், ‘நீங்க பாஜக கூட்டணி வேணாம்னு ஒரு முடிவெடுங்க. அப்படி எடுத்தாதான் கட்சி உங்ககிட்ட இருக்கும்.

பாஜக கூட்டணியில இருக்கட்டும்னு நினைச்சா கட்சி ஓபிஎஸ்கிட்ட போறதுக்கும் வாய்ப்பிருக்கு. உங்க சேலம் மாவட்டத்துல வன்னியர் கவுண்டர் ஓட்டுகளை வச்சி ஜெயிச்சிடலாம். ஆனா விழுப்புரத்துல  டவுன்ல மட்டும் 18 ஆயிரம் மைனாரிட்டி ஓட்டு இருக்கு. நம்மளுக்கு போன தேர்தல்ல டவுன்ல 16 ஆயிரம் ஓட்டு குறைஞ்சிருக்கு. அப்படின்னா கணக்கு பண்ணி பாருங்க.

மைனாரிட்டி ஓட்டு சுத்தமா நமக்கு விழலை. பாஜகவுக்கு அஞ்சு சீட் கொடுத்து கூட்டணியில வச்சுக்கிட்டா  மீதி 35 தொகுதியிலயும் நமக்கு இதுதான் நிலைமை. அதனாலதான் நான் அப்படி பேசினேன்’னு விளக்கமும் கொடுத்திருக்கிறார் சி.வி. சண்முகம்.

இதுமட்டுமல்ல… நியூஸ் ஜெ. சேனலுக்கான செலவுகள் குறித்தும் அதற்கு சி.வி. சண்முகம் தரப்பில் உரிய பங்களிப்பு வருவதில்லை என்றும் வந்த தகவல்கள் பற்றியும் சண்முகத்திடமே பேசியிருக்கிறார் எடப்பாடி.

அதற்கு சண்முகம், ‘முடிஞ்ச அளவு பண்றேங்க. இனிமேல் முடியலை’ என்று சொல்லியிருக்கிறார். ‘நீங்க மைன்ஸ் மந்திரியா இருக்கும்போது நான்  தலையிட்டதே இல்லையே… காரணம் சேனல் செலவை நீங்களும் பாத்துக்கணும்னுதான்’ என்று மீண்டும் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. இப்படி  கூட்டணி  கோபங்களும், டிவி கணக்கு வழக்குகளும்  எடப்பாடி, சண்முகம் இடையே பேசப்பட்டிருக்கின்றன என்கிறார்கள்.

இதனால் வருத்தமான சி.வி. சண்முகம் திடீரென எடப்பாடிக்கு தனது கோபத்தை தெரிவிக்க ஒரு  சம்பவத்தை அரங்கேற்றினார். விழுப்புரம் மாவட்ட அமமுகவின் இரு மாவட்ட செயலாளர்கள் அதாவது விழுப்புரம்  அமமுக வடக்கு மாசெ பாலசுந்தரம், கிழக்கு மாசெ அய்யனார் ஆகியோர்  அதிமுகவில் சேர முடிவெடுக்கப்பட்டு சண்முகத்திடம் பேசியிருக்கிறார்கள். இதற்காக எடப்பாடி முன்னிலையில் இணைய திட்டமிட்டப்பட்டிருந்தது.

பொதுவாக இன்னொரு கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் என்றால் தலைவர் முன்னிலையில்தான் சேர்வார்கள். ஆனால் இந்த இருவரும் ஒரு காலத்தில் சண்முகத்தின் நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை  நேற்று வரச் சொல்லி தன் முன்னிலையிலேயே  அதிமுகவில் இணைத்துவிட்டார்.

இந்த செய்தி எடப்பாடிக்கே கொஞ்சம் ஷாக் ஆகத்தான் இருந்திருக்கிறது. இதுமட்டுமல்ல டிசம்பர் 27 ஆம் தேதி நடக்கும்  மாசெக்கள் கூட்டத்துக்கும் எம்.ஜி.ஆர். நினைவிடம் போல தாமதமாக வந்துவிடப் போகிறார் என்று  தனக்கு நெருக்கமானவர்களை விட்டு சண்முகத்திடம் பேசச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. மாசெக்கள் கூட்டத்துக்கு சென்று அதிமுக பாஜக கூட்டணி பற்றி காரசாரமாக பேச  திட்டம் இருக்கிறது என்கிறார்கள் சி.வி. சண்முகம் தரப்பில்” என்று மெசேஜ் டைப் செய்தது வாட்ஸ் அப்.

குறுக்கிட்ட மெசஞ்சர்,  “எடப்பாடியும் கிட்டத்தட்ட சி.வி. சண்முகம் எண்ண ஓட்டத்தில்தான் இருக்கிறார். ஆனால் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் அவரால் வெளிப்படுத்த முடியாது.  ஒருபக்கம் பாஜக ஆதரவு  ஒருபக்கம் பாஜக எதிர்ப்பு ஆகியவை  அதிமுகவுக்குள்ளிருந்து தொடர்ந்து வெளிவரும். இது எடப்பாடியின் உத்திகளில் ஒன்று என்றும் சொல்கிறார்கள்” என்று ஒரு பிட்டை போட்டு ஆஃப் லைன் போனது.

எல்லைப் பிரச்சினை: தீர்ப்புக்கு முன்பு தீர்வு சொன்ன உத்தவ் தாக்கரே

தோனி பட நடிகர் கொலை: 2 ஆண்டுக்கு பிறகு பரபரப்பு தகவல்!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *