20 யூனிட் ரத்தம்…ஸ்டாலின் கவலை…கணேசமூர்த்திக்கு என்னதான் நடந்தது?

அரசியல்

மதிமுகவின் தூண்களில் ஒருவரான ஈரோடு கணேசமூர்த்தி தற்கொலை முயற்சியில் இறங்கிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

31 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவிலிருந்து வைகோ தலைமையில் 9 மாவட்டச் செயலாளர்கள் வெளியேறினார்கள். அதில் ஒருவர் தான் தற்போது ஈரோடு தொகுதியின் எம்.பி-யாக இருக்கும் 76 வயதான கணேசமூர்த்தி. இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து 1994-ஆம் ஆண்டு மே மாதம் 6-ஆம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை தொடங்கினார்கள்.

தற்போது மதிமுகவின் பொருளாளராக இருக்கும் கணேசமூர்த்தி வைகோவின் வலதுகரமாக பார்க்கப்பட்டவர். 1989 இல் திமுகவில் இருந்தபோதே மொடக்குறிச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கணேசமூர்த்தி. மதிமுக சார்பாக மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

  • 1998 நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக சார்பில் பழனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
  • அதற்கு அடுத்து 2006 சட்டமன்றத் தேர்தலில் வெள்ளக்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
  • அதன்பிறகு 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட வைகோ உட்பட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்த போது கணேசமூர்த்தி மட்டும் ஈரோடு தொகுதியில் வெற்றி பெற்றார்.
  • 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக அல்லாத மூன்றாவது அணியான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக சார்பில் மீண்டும் ஈரோட்டில் போட்டியிட்ட கணேசமூர்த்தி வெற்றி பெறாதபோதும், திமுக வேட்பாளரைக் காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
  • 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவிற்கு ஒரு லோக்சபா, ஒரு ராஜ்யசபா என்று திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட போது, அந்த ஒரு தொகுதி ஈரோடு கணேசமூர்த்திக்கு கொடுக்கப்பட்டது. ஈரோட்டில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார் கணேசமூர்த்தி.

இந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் இரண்டு சீட்டுகள் கிடைத்தால், அதில் ஒரு தொகுதியில் தானும், இன்னொரு தொகுதியில்  துரை வைகோவும் போட்டியிடுவது என வைகோவிடம் ஆலோசனை செய்து வந்தார் கணேசமூர்த்தி.

இதற்கிடையில், தனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க மதிமுக தலைமைக்கு விருப்பம் இல்லை என்ற தகவல் தெரிந்ததும், கணேசமூர்த்தி மார்ச் முதல் வாரத்தில் தனது மகன் கபிலன், ஈரோடு மாவட்டச் செயலாளர் குழந்தை வேல், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் செந்தில் ஆகிய மூவரையும் வைகோவிடம் பேச அனுப்பியிருக்கிறார்.  அப்போது வைகோ துரை வைகோவை சந்திக்குமாறு சொல்லியிருக்கிறார்.

இதனையடுத்து, கபிலன் உள்பட மூவரும்  துரை வைகோவை சந்தித்தனர். அப்போது மதிமுக பொருளாளர் செந்திலதிபன், அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன ராஜ் இருவரும் உடனிருந்திருக்கின்றனர். அவர்களிடம் துரை வைகோ கணேசமூர்த்திக்கு மதிமுகவில் இதுவரை எத்தனை முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என பட்டியலிட்டிருக்கிறார். அத்துடன் “இரண்டு சீட் கிடைத்தால் மற்றவர்களுக்குத் தான் நாம் வாய்ப்பு தரவேண்டும். உங்கள் அப்பாவிற்கே தொடர்ந்து எத்தனை முறை தருவது?” என்று கேட்டிருக்கிறார்.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அமைச்சர் முத்துசாமி கணேசமூர்த்தியைத் தொடர்புகொண்டு ”அண்ணே… இன்னைக்கு செயல்வீரர்கள் கூட்டம். என்னென்ன செய்ய வேண்டும்? ஆலோசனை கொடுங்க… கூட்டத்திற்கு அவசியம் வாங்க” என்று இரண்டு முறை அழைத்துள்ளார்.

ஆனால் ஞாயிறு காலை 10.15 மணியளவில் கணேசமூர்த்தி தென்னை மரத்திற்கு வைக்கப்படும் ‘சல்பாஸ்’ எனப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரைகளை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனால் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார்.

அப்போது வீட்டில் இருந்தவர்கள் என்ன ஆச்சு என்று விசாரித்த போதுதான், பூச்சுக்கொல்லி மாத்திரைகளை எடுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரியவந்திருக்கிறது.

உடனடியாக அருகில் உள்ள சுதா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அமைச்சர் முத்துசாமி, மருத்துவமனைக்குச் சென்று கூடவே இருந்து கவனித்து வந்துள்ளார். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையான KMCH மருத்துவமனைக்கு (கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிட்டல்) மதியம் 2.30 மணியளவில் அழைத்துச் சென்றனர்.

அவருடன் மகன் கபிலன், மருமகன், மதிமுக ஒன்றிய செயலாளர் கோபால் மற்றும் கட்சியினர் சுமார் 20 பேர் சென்றுள்ளனர். மாலை 3.15 மணிக்கு கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஐ.சி.யூவில் கணேசமூர்த்தி எம்.பி-க்கு உயர்ரக சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், 72 மணி நேரம் மருத்துவக் கண்காணிப்பில் வைத்து அதன்பிறகுதான் எதையும் சொல்ல முடியும் என்று நேரம் கொடுத்துள்ளனர். அவரது உடலில் உள்ள ரத்தத்தில் பூச்சுக்கொல்லி மாத்திரையின் நஞ்சு அதிக அளவு கலந்திருப்பதால் அதை சரிசெய்ய, நேற்று அவருக்கு 20 யூனிட் ரத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்றுவரும் கணேசமூர்த்தி எம்.பியின் உடல்நலத்தை விசாரிக்க துரை வைகோ நேற்று மாலை 7:30 மணியளவில் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு டாக்டரிடம் விசாரித்துவிட்டு கணேசமூர்த்தியின் குடும்பத்தினருடன் பேசச் சென்றபோது அவர்கள் அவரிடம் பேச விருப்பம் இல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டனர்.

அதன்பிறகு அவர் சென்றதும் விமானம் மூலமாக கோவை வந்த வைகோ, இரவு 9:15 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தார். அவர் கணேசமூர்த்தியின் குடும்பத்தினரிடம் விசாரித்துவிட்டு, மருத்துவரிடமும் சிகிச்சை பற்றி தெரிந்துகொண்டு அரை மணி நேரம் மருத்துவமனையிலேயே இருந்துவிட்டு வெளியில் வந்தார். அப்போது வெளியில் காத்திருந்த பத்திரிக்கையாளர்களை சந்தித்த வைகோ கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்தும், எம்.பி சீட்டு யாருக்கு என்பது குறித்து மதிமுகவில் என்ன நடந்தது என்றும் விளக்கினார்.

”இம்முறை கட்சியிலே எல்லோரும் சேர்ந்து,  ’துரை வைகோவை வேட்பாளராக்கி நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். கணேசமூர்த்திக்கு அடுத்த சான்ஸ் பார்ப்போம்’ என்றனர். ஆனால் அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஓட்டெடுப்பு எல்லாம் நடந்தது. அதில் 99% பேர் துரை வைகோவை நிறுத்த வேண்டும் என்றனர். இது கணேசமூர்த்தி வேண்டாம் என்று அல்ல. 2 சீட்டுகளை வாங்கி ஒன்றை துரைக்கும் மற்றொன்றை கணேசமூர்த்திக்கும் கொடுக்கலாம் என்று தெரிவித்தனர். அப்படியே செய்யலாம் என சொன்னேன்.

ஒருவேளை அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனாலும், சட்டமன்ற தேர்தல் ஒரு வருடத்தில் வருகிறது. ஒரு நல்ல தொகுதியில் அவரை எம்.எல்.ஏ. ஆக்கி விட்டு, அதன் பிறகு அதைவிட பெரிய பதவி ஏதாவது ஸ்டாலினிடம் சொல்லி வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் காயம் எல்லாம் ஆறிவிடும் என நம்பினேன்.

ஆனால் இந்த வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகெல்லாம் நன்றாகவே பேசினார். அவரது வீட்டில் மகன், மகளிடமும் கொஞ்சம் கூட எதையும் காட்டிக்கொள்ளாமல் நன்றாகத் தான் பேசியிருக்கிறார். நேற்றுகாலை நான்கு முறை மருத்துவரிடம் பேசியுள்ளார். ஆனால், அப்பொழுதெல்லாம் அவரது பேச்சில் எந்தவித பதற்றமும், சோகத்தில் இருப்பதாக அறிகுறியோ தெரிந்து கொள்ள முடியவில்லையாம்.

கணேசமூர்த்தி உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் பேசுகையில், ‘முதலுதவி சரியாக செய்ததால் தான் சிகிச்சை அளிக்க முடிகிறது. 50க்கு 50 சதவிதம் வாய்ப்புள்ளது. இது மாதிரியான நிலையில் ஏற்கனவே பலரை பிழைக்க வைத்திருக்கிறோம். மேலும் 2 நாள் சென்ற பின் தான் எதையும் கூற முடியும். விஷ முறிவுக்கான சிகிச்சையும் எக்மோ சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்ல.ஜி.பழனிசாமியிடம் பேசியிருக்கிறார். கணேசமூர்த்திக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, அவரது உடல்நிலை தற்போது என்னவாக இருக்கிறது என்று கவலையுடன் விசாரித்துள்ளார். மேலும் வேறு ஏதாவது சிறப்பு சிகிச்சையை மேற்கொள்வதற்கு அரசிடமிருந்து ஏதாவது உதவி தேவைப்பட்டால் உடனடியாக தெரியப்படுத்துங்கள், ஏற்பாடு செய்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் மூத்த அரசியல்வாதியும், சிட்டிங் எம்.பியுமான கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றிருக்கும் இந்த சம்பவம் மதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை முயற்சிக்கு சீட் கிடைக்காதது மட்டும் தான் காரணமா? அல்லது வேறு பிரச்சனைகள் உள்ளதா? என்பதை உடல்நலன் தேறி வந்து கணேசமூர்த்தி சொன்னால் தான் தெரியவரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அந்த 2 வேட்பாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவார்கள்? : செல்வப்பெருந்தகை பதில்!

திருமாவுக்கு ஆதரவாக களமிறங்கிய வன்னியர் கட்சி: அரசியல், சமூக மாற்றத்துக்கு வித்திடுமா?

கோவையில் அண்ணாமலை…கொடுக்கப்போவது என்ன விலை?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *