அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த மாசெக்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இது அதிமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் சலசலப்புகளை கிளப்பியது,.
துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கும் முனுசாமிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட அதே வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவரும் அமைப்புச் செயலாளருமான சி.வி. சண்முகத்துக்கு எடப்பாடி பழனிசாமி அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தபோது கூட தன்னை அழைத்துச் செல்லாமல் சண்முகத்தை அழைத்துச் சென்றதில் முனுசாமிக்கு வருத்தம் என்றெல்லாம் ஏற்கனவே பேசப்பட்ட நிலையில்… அதிமுகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்துக்கு கேபி முனுசாமி செல்லாதது அதிமுகவிலே பல ஹாஸ்யங்களை ஏற்படுத்தியது.
எடப்பாடியே கூட முனுசாமி வராததால் கொஞ்சம் அதிர்ச்சியில்தான் இருந்தார்.
அதேநேரம் கேபி முனுசாமி உடல் நலக் குறைவு காரணமாக தனது சொந்த ஊரான காவேரிப்பட்டினத்திலேயே இருப்பதாகவும் தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் கே.பி.முனுசாமியின் நெருங்கிய உறவினர்களிடம் மின்னம்பலம் சார்பில் பேசினோம்.
“கே.பி.முனுசாமிக்கு அரசியல் ரீதியாக கட்சிக்குள் சில வருத்தங்கள் சிலர் மீது இருக்கலாம். ஆனால் தலைமைக் கழக கூட்டத்துக்கு செல்லாததன் காரணம் கடந்த ஒரு வாரமாகவே அவர் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டதுதான்.
கடந்த வாரத்துக்கு முந்தைய வாரம் முழுதும் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களின் இறப்பு நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் முனுசாமிக்கு ஏற்பட்டது.
இறப்பு வீடுகளுக்கு சென்று வந்ததால் தொடர்ந்து தலைகுளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மழை வேறு அவ்வப்போது பெய்துகொண்டிருக்கிறது. காலநிலையும் மாறி மாறி வாட்டுகிறது. இதெல்லாம் சேர்ந்து கே.பி.முனுசாமிக்கு வைரல் காய்ச்சலை ஏற்படுத்திவிட்டது. கடுமையான காய்ச்சல் காரணமாக வீட்டை விட்டே வெளியே வர இயலவில்லை.
டெங்கு சோதனையும் செய்யப்பட்டது. ஆனால் டெங்கு இல்லை. வைரல் காய்ச்சல்தான் என்று மருத்துவர்கள் சொன்னதோடு வீட்டிலேயே ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்கள். அதனால்தான் முனுசாமியால் சென்னை வர இயலவில்லை. தனக்கு காய்ச்சல் இருப்பதையும் அதனால் சென்னைக்கு வர இயலாத நிலையில் இருப்பதையும் பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் தெரியப்படுத்திவிட்டார்.
சில நாட்கள் ஓய்வுக்குப் பின் நேற்றுதான் ஒரு விழாவுக்காக வெளியே வந்தார். இந்த நிலையில் தர்மபுரியைச் சேர்ந்த செய்தித் தாள் நிருபர் ஒருவர் கேபி முனுசாமியைத் தொடர்புகொண்டபோது கடுமையாக பேசி தான் ஓபிஎஸ் பக்கம் போவதாக வெளியான தகவல்களை மறுத்திருக்கிறார் முனுசாமி.
இன்னும் இரு தினங்களில் முழுமையாக குணமடைந்து ஞாயிற்றுக் கிழமை சென்னை செல்கிறார் முனுசாமி” என்கிறார்கள் அவரது உறவினர்கள் வட்டாரத்தில்.
ஆனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி அதிமுகவினரோ, “கே.பி.முனுசாமி கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கு வந்து அக்டோபர் 17 ஆம் தேதி அதிமுகவின் நிறுவன தினத்தை எப்படி கொண்டாடுவது என்று ஆலோசனை நடத்தினார்.
அக்டோபர் 4 ஆம் தேதி தனது வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட ராமன் தொட்டி ஊராட்சி பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தடுப்பணை கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டார்.
தனது வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விஜயதசமி ஆயுத பூஜை நிகழ்வில் கலந்துகொண்டு இனிப்புகளும் பரிசுகளும் வழங்கினார்.
அக்டோபர் 7 ஆம் தேதி காவேரிப்பட்டினத்தில் சரவணன் என்பவரது மொபைல் கடையை தனது மனைவி மங்கைக்கரசியோடு சேர்ந்து ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து வாழ்த்தினார்.
அதற்குப் பிறகுதான் கே.பி.முனுசாமிக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. அதேநேரம் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடந்த 10 ஆம் தேதிக்குப் பிறகு 13 ஆம் தேதி உடல் நிலை லேசாக தேறிய நிலையில் கே.பி.முனுசாமி, காவேரிப்பட்டினம் 12-வது வார்டு கிளைச் செயலாளர் சான் பாஷாவின் SR பேரிங்ஸ் என்னும் புதிய கடை துவக்க விழாவில் கலந்து கொண்டு கடையை துவக்கி வைத்தார்.
இப்படி எப்போதுமே தன் தொகுதியில் தனது மாவட்டத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இயல்புடையவர்தான் முனுசாமி. ஆனாலும் 10 ஆம் தேதி சென்னை செல்ல முடியாத அளவுக்கு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம்” என்கிறார்கள்.
–வேந்தன்
இமாச்சல் பிரதேசம்: நவம்பர் 12 சட்டமன்றத் தேர்தல்!
பன்னீர் மகனை கைது செய்ய களமிறங்கிய தங்க தமிழ்ச்செல்வன்