தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்குப் பின்னர் அண்ணாமலை கடந்த 1ஆம் தேதி டெல்லி புறப்பட்டுச் சென்று நேற்று இரவு சென்னை திரும்பினார்.
அண்ணாமலை டெல்லி சென்றதால் ஏற்கனவே அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற இருந்த பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த கூட்டம் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும் என்றும் அக்டோபர் 6ஆம் தேதி முதல் மீண்டும் கோவையில் என் மண், என் மக்கள் யாத்திரையை அண்ணாமலை தொடங்குவார் என்றும் பாஜக தரப்பு தெரிவித்தது.
இந்தச்சூழலில் அண்ணாமலையின் பாத யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்ப்பட்டதால் யாத்திரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையின் மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பாஜக, “மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயணம் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
நாளை திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். திருத்தப்பட்ட நடைப்பயண பட்டியல் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
டெல்லி சென்று வந்த அண்ணாமலை நேற்று இரவு சென்னையில் உள்ள க்ளெனேகிள்ஸ் குளோபல் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்தான மருத்துவ அறிக்கையில், “இருமல், சுவாசிப்பதில் சிரமம், தொண்டை வலி, உடல் வலி மற்றும் சோர்வு போன்ற பிரச்சினைகளுடன் பாஜக தலைவர் அண்ணாமலை (39) சிகிச்சை பெற வந்தார்.
நுரையீரல் நிபுணரால் அவரை முழுமையாகச் சோதனை செய்தனர். உயர் தெளிவுத்திறன் கொண்ட சிடி ஸ்கேன் உட்பட பிற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
சிடி ஸ்கேன் அறிக்கையில், இடது நுரையீரலின் அடி பகுதியில் சாதாரண நுரையீரல் திசுக்களை விட இறுகிய ஒரு சுற்று பகுதி(nodules) இருப்பது கண்டறியப்பட்டது. அண்ணாமலைக்கு மூச்சு குழாய் தொற்றும் உள்ளது.
இதைத்தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு 5 நாட்கள் மருந்து சாப்பிடப் பரிந்துரைக்கப்பட்டது. 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனைக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவர் குணமடைய இரண்டு வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
– பிரியா