மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை நேற்று ( பிப்ரவரி 13) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். அதற்கு முன்பே நேற்று முன்தினம் ( பிப்ரவரி 12) அமைச்சர் சேகர்பாபு கமல்ஹாசனை சந்தித்து உரையாடினார். Sekar Babu Udhayanidhi meeting Kamal
திமுக தரப்பிலிருந்து அமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் அடுத்தடுத்து கமல்ஹாசனை சந்தித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் விவாதம் ஆகியுள்ளது. கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா பதவி தருவது பற்றி தான் உதயநிதி அவருடன் உரையாடியிருக்கிறார் என பேச்சுக்கள் கிளம்பின.

இந்த சந்திப்பின் முக்கியத்துவம் பற்றி இருதரப்பு வட்டாரங்களிலும் விசாரித்தோம்.
“பொதுவாகவே கமல்ஹாசனை ஒருவர் சந்திக்கிறார் என்றால், நிறைய நேரம் ஒதுக்கிக் கொண்டு தான் அவரை சந்திக்க வேண்டும். ஏனென்றால் கமல்ஹாசன் சாதாரணமாக பேச ஆரம்பித்து மிக ஆழமான உரையாடல்களை நிகழ்த்துவார். இந்த வகையில் அமைச்சர் சேகர்பாபு உடனும் நீண்ட ஒரு சந்திப்பை மேற்கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். முதலில் சேகர்பாபு தரப்பிலிருந்து கமல்ஹாசனிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்கப்பட்டது.
பொதுவாகவே திமுகவில் நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்துவதில் சேகர்பாபு புகழ் பெற்றவர். ஏற்கனவே கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி சேகர்பாபு நடத்திய நிகழ்ச்சிகள் பெரும் கவனத்தைப் பெற்றன. அந்த வகையில், வருகிற மார்ச் 1 திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகளை சேகர்பாபு நடத்துகிறார்.
ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேச வேண்டும் என்பது அமைச்சர் சேகர்பாபுவின் விருப்பம். இதை கமலிடம் தெரிவித்து அவரது ஒப்புதல் பெறுவதற்குதான் சந்தித்துள்ளார். சேகர்பாபு போன விஷயம் சில நிமிடங்களில் முடிந்துவிட்டது. அதாவது கமல்ஹாசன் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்.
அதே நேரம் அறநிலையத்துறை அமைச்சர் என்ற வகையில் சேகர்பாபுவிடம் வெவ்வேறு வகையான விஷயங்கள் குறித்து ஆழமாக உரையாடியிருக்கிறார் கமல்ஹாசன். குறிப்பாக குலதெய்வ வழிபாடு பற்றி தனக்கு இருக்கும் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் சேகர்பாபுவிடம் சுவாரஸ்யமாக விளக்கியுள்ளார். விருமாண்டி படம் எடுத்ததற்கான காரணங்களில் ஒன்று குலதெய்வ வழிபாட்டின் மீதான ஆர்வம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது ஆசான்களில் ஒருவரான தொ.பரமசிவன் இது குறித்து எழுதியவற்றையும் சேகர்பாபுவிடம் திகட்ட திகட்ட பகிர்ந்து கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். இப்படி ஒரு அறிவுக்களஞ்சியமா என வியந்து போன அமைச்சர் சேகர்பாபு, இந்த சந்திப்பின் முடிவில் கமல்ஹாசனிடம் இருந்து விடை பெற்றிருக்கிறார். இதுதான் அமைச்சர் சேகர்பாபு கமல்ஹாசனை சந்தித்த காரணம்.

இந்த சந்திப்பு பற்றிய தகவல்கள் வெளிவந்ததும் அதை பார்த்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த நாள் கமல்ஹாசனை சந்தித்திருக்கிறார்.
ஏற்கனவே சந்திக்க வேண்டும் என்று உதயநிதியிடம் கமல் சொல்லி இருக்கிறார். சீனியரான கமல்ஹாசனை தானே நேரில் சென்று சந்திப்பது தான் சரியாக இருக்கும் என்று கருதிய உதயநிதி, அதன்பின் கமலிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி அவரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிலும் அரசியல், சமுதாயம். சினிமா என ஏகப்பட்ட விஷயங்கள் அலசப்பட்டுள்ளன.
கமல் சந்திப்பு குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி வெளியிட்ட செய்தியில் ‘மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் – கலைஞானி கமல்ஹாசன் சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்’ என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல கமல்ஹாசனும் துணை முதல்வர் உதயநிதியை சிலாகித்து, ‘நெடுநாள் இனிக்கக்கூடிய சந்திப்பு. துணை முதல்வர் உதயநிதியின் அன்புக்கும் பண்புக்கும் நன்றி’ என்று பதிவு செய்துள்ளார். மற்றபடி உதயநிதி – கமல்ஹாசன் சந்திப்பில் அரசியல் உட்பட அனைத்தும் பேசப்பட்டிருக்கலாம்” என்கிறார்கள். Sekar Babu Udhayanidhi meeting Kamal