மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த டிசம்பர் 18 ஞாயிற்றுக் கிழமை சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
சென்னை ஐஐடியில் தொழில் நுட்ப கருத்தரங்கம், அண்ணாநகரில் மத்திய வருமான வரி, சுங்கத் துறை ஊழியர்களுக்கான குடியிருப்புகள் ‘நந்தவனம்’ துவக்க விழா, சுங்கத்துறை வளாகத்தில் புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜை ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அன்று மாலை திடீரென மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வந்தார். அன்று மதியம்தான் இதற்கான திட்டமிடப்பட்டது.
நிதியமைச்சர் கமலாலயத்துக்கு சென்று பல மாதங்கள் ஆகிறது. அதனால் அவர் வரும்போது சென்னையில் இருக்கும் மாநில நிர்வாகிகளை மாலை அலுவலகத்துக்கு வருமாறு தகவல் அனுப்பப்பட்டது. அதேநேரம் மாநில தலைவர் அண்ணாமலை அன்று கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார். நிர்மலா சீதாராமனுக்கும் இந்த தகவலை தெரிவித்தார். ‘ நான் வர்றது ஒண்ணும் ஷெட்யூல்ட் புரொக்ராம் இல்லையே… நீங்க கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி முடிச்சுட்டு வாங்க’ என்று சொல்லிவிட்டார் மத்திய அமைச்சர்.
அதன்படியே நிர்மலா சீதாராமன் மாலை பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு வருகை தந்தார். அவர் வந்த கொஞ்ச நேரத்தில் அண்ணாமலை கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு கமலாலயம் வந்தார்.
மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், துணைத் தலைவர்கள் நாராயணன் திருப்பதி, கரு. நாகராஜன், ஏஜி சம்பத் உள்ளிட்ட பல மாநில நிர்வாகிகளும், சென்னையில் இருந்த மாநில அணிகளின் அமைப்பாளர்கள் ஆகியோருடன் நிர்மலா சீதாராமன் சாதாரணமான கலந்துரையாடல் நடத்தினார். இது திட்டமிடாத நிகழ்ச்சிதான் என்றாலும் சில நிர்வாகிகள் தங்களது குமுறல்களையும் குறைகளையும் நிதியமைச்சரிடம் நேருக்கு நேராக கொட்டினார்கள். அவர்களில் சிலரிடம் பேசினோம். பெயர் வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசினார்கள்.
“நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிக எளிமையாக எங்களிடம் பழகினார். தமிழக பிஜேபி எப்படி இருக்கு… நான் உங்களுக்கு எந்த வகையில உதவணும்னு ரொம்ப தன்மையா கேட்டாரு. சில பேர் நிதித்துறை சம்பந்தமா சில சந்தேகங்களை கேட்டாங்க. அதுக்கு தெளிவா பதில் சொன்னார்.
அதுக்குப் பின் நிர்வாகிகள்ல பல பேர், ‘மத்திய அரசு கொடுக்கும் திட்டங்கள் மாநில அரசின் வழியாக மக்களை சரியாக போய் சேரலைனு மக்கள் எங்ககிட்ட சொல்றாங்கம்மா. ஜல்ஜீவன் திட்டத்துல கனெக்ஷன் வேணும்னா பத்தாயிரம் ரூபா லஞ்சம், மோடி வீடு கட்டும் திட்டத்துல சுமார் 3 லட்சம் கொடுக்குறாங்கன்னா அதுல 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபா வரை லஞ்சம்னு மத்திய அரசோட பல திட்டங்கள்ல அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் லஞ்சம் கேட்குறாங்க.
அதேபோல பேங்க்ல தேசியமயமாக்கப்பட்ட பேங்க், தனியார் பேங்க்னு இளைஞர்கள் கடன் கேட்கப் போனாலே எடுத்தெறிஞ்சு பேசுறாங்க. அவங்க தொழில் ஆரம்பிக்கலாம்னு கடன் கேட்க போனா அந்த எண்ணத்தையே கைவிட்டுடற மாதிரி பரவலா மேனேஜர்கள் பேசுறாங்க. மத்திய அரசோட ஸ்டார்ட் அப் திட்டங்கள்லையும் இதேபோலத்தான். மீனவர்களுக்கு மத்திய அரசு பண்ற பல நலத்திட்டங்களுக்கும் இதே நிலைமைதான். இதை மீனவர்களே சொல்றாங்க. மோடி என்ற சாமி கொடுக்குறத இங்க இருக்குற பூசாரிகள் கெடுக்குறாங்கம்மா. மத்திய அரசோட திட்டங்கள் மக்களுக்கு எந்த வித தடங்கலும் இல்லாம போய் சேருதான்னு நீங்க கண்காணிக்கணும்மா’ என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தார்கள்.
அதற்கு நிதியமைச்சர், ‘மத்திய அரசு பல திட்டங்களுக்கு நிதி உதவி செய்யுது. நம்ம கவர்ன்மென்ட் சிஸ்டத்தின்படி மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசுகள் மூலமாத்தான் மக்களுக்கு போய் சேரணும். எந்த இடத்துல என்ன தப்பு நடந்தாலும் நீங்க உடனே என் கவனத்துக்குக் கொண்டுவாங்க. இப்ப நீங்க சொன்னதையெல்லாம் ஒரு மெமொரண்டமா எழுதி எனக்கு அனுப்புங்க. கண்டிப்பா நான் ஆக்ஷன் எடுக்குறேன்’ என்று உறுதியளித்தார்” என்றார்கள் அந்த நிர்வாகிகள்.
அதன் பிறகு அனைத்து நிர்வாகிகளிடமும் விடைபெற்றுக் கொண்டு கமலாலயத்தில் இருந்து விமான நிலையத்துக்குப் புறப்பட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதேபோல தமிழகம் வரும் அனைத்து மத்திய அமைச்சர்களும் இனி பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்து பாஜக நிர்வாகிகளை சந்தித்தால், அவர்களிடம் மக்களின் குறைகளை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்கிறார்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்ட நிர்வாகிகள்.
–ஆரா
’போர்கண்ட சிங்கம்’ யார் இந்த கிலியன் எம்பாப்பே
“முதல்வரே என்னை காப்பாத்துங்க” – வீடியோவில் அழுத 9 ஆம் வகுப்பு மாணவி !