டிஜிட்டல் திண்ணை: மாநிலத் தலைவர் மாற்றம், பிரியங்கா தமிழ்நாட்டுப் பொறுப்பாளர்… சோனியா கூட்டத்தில் நடந்தது என்ன?

Published On:

| By Aara

What happened in the Sonia meeting?

வைஃபை ஆன் செய்ததும் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி கலந்துகொண்ட காங்கிரஸ் கூட்டம் பற்றிய புகைப்படங்களும் ஷார்ட்ஸ் வீடியோக்களும் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று அக்டோபர் 13 இரவு சென்னை வந்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி. அவரோடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தியும் வந்தார்.

இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த சோனியாவையும், பிரியங்காவையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் வரவேற்றனர். காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக வந்து வரவேற்றனர். சென்னையில் இருந்து தொலைவில் உள்ள உள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்னை விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். அவர்கள் யாரும் மறுநாள் நடந்த சென்னை மாநாட்டுக்கு வரவில்லை. அங்கிருந்தபடியே புறப்பட்டனர்.

நேராக தனியார் ஹோட்டலுக்கு சென்று ஓய்வெடுத்த சோனியாவும், பிரியங்காவும் இன்று (அக்டோபர் 14) காலை ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்கள். அவர்களை வரவேற்பதற்கும் நினைவிடத்தில் ஏற்பாடுகளை செய்வதற்கும் ராஜீவ்காந்தி நினைவிட உயர் மட்டக் குழு உறுப்பினரான முன்னாள் எம்.எல்.ஏ. முருகானந்தம் ஸ்ரீபெரும்புதூர் சென்று தங்கினார்.

ஆனால் சென்னையில் இருந்து அவ்வளவு தூரம் செல்லும் அளவுக்கு சோனியாவின் உடல் நலம் இல்லை. அதனால் பிரியங்கா மட்டும் ராஜீவ் காந்தி நினைவிடம் செல்வதற்கு திட்டமிட்டார். ஆனால் சோனியாவை விட்டுவிட்டு அவர் மட்டும் அங்கே செல்ல மனமில்லாததால், அவரும் அங்கே செல்லவில்லை. இதனால் சென்னை ஹோட்டலில் சோனியாவை சந்தித்த முருகானந்தம் ராஜீவ் நினைவிடத்தில் செய்யப்பட இருக்கும் மாற்றங்கள் பற்றிய திட்டங்களுக்கான ஃபைலை கொடுத்தார். டெல்லி சென்று பார்த்துவிட்டு உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன் என்று அவரிடம் கூறினார் சோனியா காந்தி.

What happened in the Sonia meeting?

இன்று (அக்டோபர் 14) காலை 11.45 மணிக்கு தான் தங்கியிருந்த ஹோட்டலிலேயே தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டார் சோனியா. நேற்று இரவுதான் இந்த நிகழ்ச்சி உறுதி செய்யப்பட்டது.  மாநிலத் தலைவர் அழகிரி, சட்டமன்ற  காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில அணி நிர்வாகிகள், முன்னாள் மாநிலத் தலைவர்கள் ஆகியோர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் ஹோட்டலுக்குள் பல்வேறு மாவட்டத் தலைவர்களும் திரண்டுவிட்டனர்.  ஆனால் கூட்ட அரங்கில் மாவட்டத் தலைவர்களுக்கு அனுமதி இல்லை. 11.45 முதல் 12.30 மணி வரைதான் இந்தக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய கே.எஸ். அழகிரி, ‘தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளர்ந்துகொண்டிருக்கிறது. பூத் கமிட்டிகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அடுத்து தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட வாரியாக மாநாடுகள் நடைபெற இருக்கின்றன’ என்று தனது மாநிலத் தலைவர் பதவியை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் பேசினார்.

முன்னாள் தலைவர்களும், அணி நிர்வாகிகளும் பேசுகையில், ‘பிரியங்கா காந்தி அரசியலுக்கு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டபோதும் தமிழ்நாட்டுக்கு அரசியல் ரீதியாக இப்போதுதான் முதல் முறையாக வந்திருக்கிறார். பிரியங்கா காந்தி மீது தமிழ்நாட்டு மக்கள் அன்பு செலுத்துகின்றனர். பார்ப்பதற்கு இந்திரா காந்தி போலவே இருப்பதாக சொல்கின்றனர். பிரியங்கா காந்தி அடிக்கடி தமிழ்நாடு வந்தால்…இங்கே வந்து திட்டமிட்டு பணியாற்றினால் இங்கே காங்கிரஸ் கட்சியை இன்னும் அதிகமாக வளர்க்க முடியும்’ என்று கூறினார்கள்.
சோனியா பேசும்போது, ‘இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க எல்லாரும் பாடுபட வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது’ என்று குறிப்பிட்டார். பிரியங்கா பேசும்போது  தமிழ்நாட்டுக்கு வருமாறு தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டார். ‘இனி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறேன்’ என்றும் அவர் கூறினார்.

What happened in the Sonia meeting?

இந்த ஆலோசனைக் கூட்டத்திலேயே  இலேசான சலசலப்பை ஏற்படுத்தியது கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணிதான் என்கிறார்கள். ‘விரைவில் மக்களவைத் தேர்தல் வரும் நிலையில் தமிழ்நாட்டில் மாநிலத் தலைமையோடு மற்ற தலைவர்கள் ஒத்துழைக்கவில்லை. மாநிலத் தலைமை மாற்றப்பட வேண்டியது பற்றி யோசிக்க வேண்டிய நேரம் இது’ என்று ஜோதிமணி குறிப்பிட்டபோது சோனியா எவ்வித ரியாக்‌ஷனையும் காட்டவில்லை என்கிறார்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள்.

இதன் பின் கூட்டம் முடிந்து ஹோட்டலில் லஞ்ச் முடித்து ஓய்வெடுத்துவிட்டு பிரியங்காவை முன்கூட்டியே மகளிர் உரிமை மாநாட்டுக்கு அனுப்பி வைத்த சோனியா காந்தி… அதன் பின்னர்தான் மாநாட்டுக்குச் சென்றார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

நாம் பெற்ற உரிமைகளை பாஜக அரசு சீரழித்துவிட்டது : சோனியா காந்தி

INDvsPAK: பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா வரலாற்று வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share