நாடாளுமன்ற தேர்தலில் கடந்த முறையை விட கூடுதலான இடங்களை ஒதுக்க திமுகவிடம் கோரிக்கை வைத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் சம்பத் இன்று (பிப்ரவரி 4) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி ஆ.ராசா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் மத்திய குழு உறுப்பினர் சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் சம்பத், “தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. இரு தரப்பினரும் மனம் திறந்து தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துகொண்டோம்.
ஒவ்வொரு கட்சிக்கும் கூடுதலான இடங்களில் போட்டியிடுவதற்கு விருப்பம் இருக்கும். நாங்களும் கடந்த முறையை விட கூடுதலான இடங்களில் போட்டியிட எங்களது கோரிக்கையை முன்வைத்தோம்.
இரண்டு தரப்புக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தகுந்த நேரத்தில் போட்டியிடுவதற்கான விருப்ப பட்டியலை கொடுப்போம். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தானால் மிகவும் நல்லது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகத்தில் இன்று பட்டதாரி ஆசிரியர் தேர்வு: விலக்கு அளிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
விளையாட்டு அரங்குகளை மேம்படுத்த ரூ.25 கோடி: எந்தெந்த இடங்களில்?)