சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் பனையூர் ஆறாவது அவென்யூவில் இருக்கிறது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குடியிருக்கும் வாடகை வீடு.
இந்த வீட்டுக்கு அண்ணாமலை குடியேறி மாதக் கணக்கில் ஆகிவிட்ட நிலையில், வீட்டு வாசலில் பாஜகவின் கொடியை ஏற்ற வேண்டும் என்று லோக்கல் நிர்வாகிகள் திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதற்காக அண்ணாமலையிடம் பேசி, விஜயதசமி அன்று (அக்டோபர் 24) காலை வீட்டு வாசலில் கொடியேற்றத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக 50 அடி உயர கொடிக் கம்பமும் தயார் செய்திருக்கிறார்கள்.
அக்டோபர் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை கொடிக் கம்பத்தை அங்கே நிறுத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார்கள். அன்று பிற்பகல் கொடிக் கம்பம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கொடிக் கம்பத்தை நிறுத்தும் இடத்தில் அருகே உயர் மின் அழுத்தக் கம்பி செல்வதால்… மின்சார வாரியத்திடம் சொல்லி கொஞ்ச நேரம் மின் இணைப்பை நிறுத்தியுள்ளார்கள் லோக்கல் பாஜக நிர்வாகிகள்.
மின்சாரம் நிறுத்தப்பட்டவுடனே அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள், மசூதியில் இருக்கும் முஸ்லிம் ஊழியர்கள் மின்சார வாரியத்துக்கு போன் போட்டு, ‘என்னாச்சு சார்? கரன்ட் கட் ஆயிருச்சே?” என்று கேட்டிருக்கிறார்கள்.
அப்போது மின்சார வாரியத்தில், ‘அண்ணாமலை வீட்டுக்கு எதிர்ல கொடிக் கம்பம் நட்டுக்கிட்டிருக்காங்க. அதனால கொஞ்ச நேரம் பாதுகாப்புக்காக மின் சாரத்தை நிறுத்தியிருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்துல கொடுத்துடுவோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஏற்கனவே அண்ணாமலை வீட்டுக்கு எதிரில் பாஜக கொடிக் கம்பம் நடுவதற்கு அங்குள்ள இஸ்லாமியர்கள் உள்ளிட்ட குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கே பரபரப்பு தொடங்கியிருக்கிறது.
சற்று நேரத்தில் அதாவது மாலை முதலே அருகே உள்ள பாஜகவினர் அங்கே குவியத் தொடங்கினர். இரவு ஆக ஆக வாகனங்கள் அங்கே அதிகரிப்பதும் மெல்ல மெல்ல பரபரப்பும் அதிகரித்தது.
அப்போது பனையூர் மசூதியில் இருந்து ஒலிபெருக்கியில் அழைப்பு விடுத்ததாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். எதிர்ப்பு தெரிவித்தும் பாஜக கொடிக் கம்பம் அமைக்கும் பணி நடக்கிறது. மாலை மங்கிய பிறகு போலீஸுக்கு தகவல் கிடைத்து உடனடியாக அங்கே செல்கிறார்கள்.
அதற்குப் பிறகுதான் இரவு அப்பகுதி இஸ்லாமியர்கள் ஒருபக்கம் திரள, பாஜக நிர்வாகிகள் இன்னொரு பக்கம் கொடிக் கம்பத்தைச் சுற்றித் திரண்டனர்.
போலீசார் வந்து, ‘இந்த கொடிக் கம்பம் அமைக்க முறையாக அனுமதி வாங்கலை. அதனால் அகற்றணும்’ என்று சொல்ல, பாஜக நிர்வாகிகளோ, ‘வீட்டுக் காம்ப்வுன்ட் சுவரை ஒட்டி கொடியேத்த யார்கிட்ட அனுமதி வாங்கணும்? உயிரே போனாலும் கொடிக் கம்பத்தை அகற்ற அனுமதிக்க மாட்டோம்’ என்று குரல் எழுப்பினர்.
பாஜக நிர்வாகிகள் சூர்யா, அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் ஒவ்வொருவராய் அஙகே வந்தனர், அப்போது போலீசார் ஜேசிபியை கொண்டுவந்து அங்கே வைக்கப்பட்ட கொடிக் கம்பத்தை அகற்ற முயற்சித்தனர். அப்போது பாஜக நிர்வாகிகள் அந்த வாகனத்தின் மீது கல்லெறிந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
இதையடுத்துதான் நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து அருகே உள்ள மண்டபத்தில் வைத்தனர் போலீஸார். அந்த நேரத்தில் அமர் பிரசாத் ரெட்டி அண்ணாமலையின் வீட்டுக்குள் சென்றுவிட்டதாக பாஜகவினரே சொல்கிறார்கள்.
இதன் பிறகு ஜேசிபி வாகனத்தை அடித்து உடைத்தவர்கள் மீது அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
-வேந்தன்
ஜப்பான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்…!
தேசியக் கொடியை குப்பையில் போட முயன்ற எஸ்.ஐ பணியிட மாற்றம்!
அஜித் வீட்டின் சுவரை இடித்த அரசு: காரணம் என்ன?
இது முழுக்க முழுக்க கொடி கம்ப பிரச்சினை இல்லை..ஒரு மத சார்ந்த குழுவை திருப்பி படுத்துவதாக நினைத்து அவர்களை தூண்டி விட்டு அவர்கள் மீது வீன் துவேசம் எழ இந்த அரசு முயன்று உள்ளது..இது மாநிலம் தழுவிய வெறுப்பை விதைத்து உள்ளது போல சூழல் உருவாகி உள்ளதை மாற்றவே முடியாது..மாபெரும் ஓட்டு வங்கியை ஒரு முக படுத்தி புது வித அரசியல் நிலைக்கு அச்சாரம் இட்ட ஆளும் திமுக அரசை எப்படி பாராட்டினாலும் தகும்..