ministers meet ponmudi after hc order
தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டனர். இருவருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.
இந்த உத்தரவை தொடர்ந்து அமைச்சர்கள் தொடங்கி திமுகவில் இருந்து பலரும் அமைச்சர் பொன்முடியை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து பொன்முடிக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.
அவர்கள் கூறுகையில், “நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை பிறப்பித்த டிசம்பர் 19ஆம் தேதி மதியமே விழுப்புரத்தில் இருந்து பொன்முடி, விசாலாட்சி இருவரும் சென்னை புறப்பட்டனர்.
பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான கவுதம சிகாமணி டெல்லியில் இருந்து சென்னை வந்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்தார்.
மறுநாள் டிசம்பர் 20ஆம் தேதி இரவு 7 மணிக்கு மூத்த அமைச்சர் துரைமுருகன் நேரடியாக சைதப்பேட்டையில் உள்ள பொன்முடி வீட்டுக்கு வந்து ஆறுதல் சொல்லிவிட்டு புறப்பட்டார். அவரைதொடர்ந்து எம்.பி.ஜெகத்ரட்சகன் வந்து பொன்முடியை சந்தித்து ஆறுதல் கூறி சென்றார்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து கட்சிக்காரர்களும் பொன்முடி வீட்டுக்கு வந்தனர். அவர்களிடம், “எதுக்குயா இவ்வளவு தூரம் வந்தீங்க. சாப்டீங்களா? எங்கே தங்கபோறீங்க?” என கேட்ட பொன்முடி, “சரி நேரத்துடன் போய் ரெஸ்ட் எடுங்க. எனக்கு இடுப்பு வலியா இருக்கு. ரெஸ்ட் எடுக்கிறேன்“ என கூறி அனுப்பி வைத்துவிட்டார்.
இன்று(டிசம்பர் 21) தண்டனை விவரம் வழங்கப்படும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்திருந்த நிலையில், வீட்டிலிருந்து பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் நீதிமன்றத்தில் ஆஜராக புறப்பட்டனர்.
வீட்டு பூஜை அறையில் இருக்கும் பாபா மற்றும் பெண் தெய்வங்களுக்கு பூஜை செய்து வணங்கிவிட்டு கிளம்பினார் விசாலாட்சி.
வழக்கறிஞர் கல்பட்டு ராஜா கார் வந்தது. அந்த காரில் இடது பக்கம் முன் சீட்டில் பொன்முடி, பின்னால் இடது பக்கம் விசாலாட்சி, நடுவில் அசோக் சிகாமணி, வலது பக்கத்தில் கல்பட்டு ராஜா ஆகியோர் அமர்ந்தனர்.
கோயிலில் பூஜை செய்யப்பட்ட ரோஜா பூ மாலையை போட்டியிருந்தப்படி காலை 9.10க்கு உயர் நீதிமன்றம் நோக்கி கார் புறப்பட்டது.
நீதிமன்றத்தில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆஜரானதும், தண்டனை விபரங்களை தெரிவித்தார் நீதிபதி.
அந்த நேரத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடி வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த எம்பி கவுதம சிகாமணியை சந்தித்து தற்போது நீதிமன்றம் நிலைமைகளைப் பற்றி சொல்லி ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்.
தீர்ப்புக்கு பின் மதியம் வீட்டுக்கு வந்த பொன்முடியை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் ஜெகத்ரட்சகன் ஆகியோர் வந்து பார்த்து பேசிவிட்டு சென்றனர்.
அப்போது தனது வீட்டுக்கு வந்திருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவாளர் ஒருவரிடம் பொன்முடி, “என்னய்யா காளி கோயில்ல பூஜை செய்தன்னு சொன்ன.. என்னாச்சு பார்த்தியா” என சிரித்துக்கொண்டே பேசி அனுப்பினார்.
வெளி மாவட்டத்திலிருந்து வந்த கட்சியினர்களிடம் ’எதுக்குயா அழுவுரிங்க’ கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது, நீங்கள் தைரியமாக இருங்கள். கட்சி வேலையை பாருங்கள். நானே இரண்டு நாளில் விழுப்புரம் வருகிறேன் என்று சொல்லிவிட்டு லிப்டில் முதல் மாடிக்கு சென்று விட்டார்” என்கிறார்கள்.
பொன்முடியை சந்தித்து பேசிய பலரும் தலைமை மீது அதிருப்தியாகதான் பேசினார்கள் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
-வணங்காமுடி
”இன்னும் 11 அமைச்சர்களுக்கு தீர்ப்பு”: அண்ணாமலை சூசகம்!
ministers meet ponmudi after hc order