வைஃபை ஆன் செய்ததும் அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த ஆய்வுக் கூட்ட போட்டோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
“கடந்த ஒரு வார காலமாக அதிமுக தலைமைக் கழகத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்த ஆய்வுக் கூட்டங்கள் நடந்தன. 19 ஆம் தேதியோடு முதல் கட்ட ஆய்வுக் கூட்டங்கள் முடிந்தன. அடுத்த கட்ட ஆய்வுக் கூட்டங்கள் ஜூலை 24 ஆம் தேதி தொடங்குகின்றன.
இந்த ஆய்வுக் கூட்டங்கள் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பே, ஒரு தகவல் தீயாக பரவி அதிமுகவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது சேலத்தில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் வேலுமணி, தங்கமணி, நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட ஆறு முன்னாள் அமைச்சர்கள், ‘அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் 2026 தேர்தலில் வெற்றியடைய முடியும்’ என்றும் வலியுறுத்தினார்கள் என்பதுதான் அந்த தகவல். கிட்டத்தட்ட அனைத்து செய்தி ஊடகங்களிலும் இது விவாதமானது.
ஆனால் இதை அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறுத்தார். சசிகலாவின் சுற்றுப் பயணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் உதயகுமார். ஜானகி போல சசிகலா ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
இதற்கிடையே கடந்த ஒரு வார காலமாக அதிமுகவில் நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்தான ஆய்வுக் கூட்டங்களில் இதுகுறித்த விளக்கங்கள் அதிமுக நிர்வாகிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த ஆய்வுக் கூட்டங்களில் முதலில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிமுக உரையாற்றினார். அதன் பின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி வரவேற்புரையாற்றினார். தலைமைக் கழகச் செயலாளர் வேலுமணி, அவரையடுத்து துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன், அவருக்குப் பின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பேசினார்கள்.
நிர்வாகளின் கருத்துகளுக்குப் பின் கடைசியாய் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். இதுதான் ஒவ்வொரு ஆய்வுக் கூட்டத்திலும் பின்பற்றப்பட்ட நடைமுறை.
இந்த ஆய்வுக் கூட்டங்களில் தோல்விக்கான காரணங்கள் பற்றி மட்டுமல்லாமல்… எடப்பாடி வீட்டில் ஆறு பேர் அதிரடி கோரிக்கை எழுப்பினார்களா என்பது பற்றிய விவாதமும் நடைபெற்றுள்ளது.
தலைமைக் கழகச் செயலாளர் வேலுமணி பேசும்போது, ‘நான் எடப்பாடியாருக்கு எதிராக செயல்படுகிறேன் என்றும் திட்டம் போடுகிறேன் என்றும் செய்திகளை பரப்புகிறார்கள். அண்ணன் எடப்பாடியார் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் இந்த வேலுமணி பேசுவேன். அவரது அனுமதி பெற்றுத்தான் என் ஒவ்வொரு வார்த்தையும் வரும்’ என்றார்,
துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன் பேசுகையில், ‘ஓபிஎஸ் சை கட்சியிலேர்ந்து நீக்கும் தீர்மானத்தை பொதுக் குழுவில் முன் மொழிந்ததே நான் தான். நானாகவே கேட்டு அதைச் செய்தேன். ஓபிஎஸ்சின் முகத்திரையை அன்றே நான் கிழித்துவிட்டேன். ஆனால் அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்க்கவேண்டும் என்று நான் பேசுவதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
கட்சி தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால் நிர்வாக அடிப்படையில் இப்போதுதான் அதிமுக சுதந்திரமாக இயங்குகிறது. அம்மா இருக்கும்போது அம்மாவிடம் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்று நாம் நினைக்கும்போது சில சமயம் முடியாது. அம்மாவிடம் சொல்லவேண்டியதை இவரிடம் (சசிகலா) சொல்வதா… இவரிடம் சொன்னால் அம்மாவுக்கு போய்ச் சேருமா…என்றெல்லாம் குழப்பம் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னால் இரட்டைத் தலைமையிலும் இந்த குழப்பம் இருந்தது.
ஆனால் இப்போது எந்த குழப்பமும் இல்லாமல் எந்த நிர்வாகியும் எப்போதும் எந்த விஷயத்தையும் பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமியிடம் விவாதிக்க முடிகிறது. இப்போதுதான் கட்சி நிர்வாகம் ஆரோக்கியமாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறது. இதை விரும்பாத சிலர் ஏதேதோ கிளப்பி விடுகிறார்கள்’ என்று பேசினார்.
கே.பி. முனுசாமி பேசும்போது, ‘எடப்பாடி பழனிசாமி இல்லையென்றால் இன்று அதிமுக என்ற ஒரு கட்சியே இருக்காது. பாஜக நம்மை தின்று தீர்த்திருக்கும். ஆனால் பாஜக கூட்டணி வேண்டாம் என்ற உறுதியான முடிவெடுத்து, கட்சிக்கு எதிரானவர்களை களையெடுத்து இன்று அதிமுகவை அதிமுகவாக காப்பாற்றி வைத்திருப்பவர் எடப்பாடிதான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பொருளாளார் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘எடப்பாடியை கொங்கு மண்டலத்துக்கு மட்டுமே உரியவர் என்று சிலர் சிறுமைப்படுத்தப் பார்க்கிறார்கள். அவர் தமிழ்நாட்டுக்கே உரியவர்’ என்றெல்லாம் பேசினார்.
இவர்கள் பேசிய பின் நிர்வாகிகள் கருத்தைக் கேட்டறிந்த பின் இறுதியாக பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘நான் எந்த முடிவையும் நானாக தனிப்பட்ட முறையில் எடுப்பதில்லை. பாஜக கூட்டணியை விட்டு விலகலாம் என்ற முடிவு கூட மாசெக்கள் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களின் முழுமனதான கோரிக்கை அடிப்படையில் எடுக்கப்பட்டதே. அதேபோலத்தான் பொதுக்குழுவிலும் முடிவுகளை எடுத்தோம். இதே வழியில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவோம்’ என பேசினார் எடப்பாடி” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
2026 தேர்தல் பணியை தொடங்கிய ஸ்டாலின் : ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு!