அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து சாட்டையடி போராட்டத்தை அண்ணாமலை அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து இன்று (டிசம்பர் 26) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அங்கிருந்த போலீசார் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாகவும், இந்த வழக்கின் எப்.ஐ.ஆர் வெளியானது தொடர்பாகவும் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
“ஒரு துயரமான நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இன்று காலையில் இருந்து நான் அரசியலில் இருக்க வேண்டுமா என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்டுக்கொண்டே இருக்கிறேன். எங்கள் அரசியல் பாதையை தீர்மானிக்ககூடிய ஒரு தருணமாக இந்த நிகழ்வை நான் பார்க்கிறேன்.
தமிழ்நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை. அவர்கள் மீதான குற்றம் அதிகரித்து வருகிறது.
அண்ணா பல்கலை நிகழ்வை பொறுத்தவரை குற்றவாளி சைதை பகுதியில் திமுகவில் ஒரு பொறுப்பில் இருக்கிறார். அவர் அமைச்சர் கூட தொடர்பில் இருக்கிறார்.
திமுக என்ற போர்வை இருந்ததால் தான் அந்த நபர் அப்பெண்ணின் மேல் கை வைத்திருக்கிறார்.
இந்த வழக்கின் எப்.ஐ.ஆர் எப்படி வெளியில் வந்தது. போலீஸ் துறையை தவிர யார் எப்.ஐ.ஆரை வெளியிட முடியும்… ப்ரோட்டோகால் எல்லாம் இருக்கிறது. போலீசார் பயன்படுத்தும் சிசிடிஎன்ஸ் நெட்வோர்க்கில் இருந்து எஃப்ஐஆர் எப்படி வெளியே லீக் ஆனது. அவ்வளவு ஈசியாக சிஸ்டத்தை ஹேக் செய்ய முடியாது.
அது ஒரு எப்.ஐ.ஆரா… படிக்காதவன் எழுதினால் கூட ஒழுக்கமாக எழுதியிருப்பான். குற்றம் செய்தது அந்த பெண்ணா… இல்லை அந்த அயோக்கியனா… அந்த பெண் தவறு செய்தது போல் எழுதியிருக்கிறார்கள்.
காவல்துறை உடையை போட்டுக்கொண்டு இப்படி ஒரு எப்.ஐ.ஆரை எழுத வெட்கமாக இல்லையா? இந்த எப்.ஐ.ஆர்-லாம் கோர்ட்டில் நிற்குமா…
எப்.ஐ.ஆரில் அந்த பெண்ணின் பெயர், போன் நம்பர், அப்பா பெயர், அவரது போன் நம்பர் எல்லாம் இருக்கிறது. ஏழு தலைமுறைக்கும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திவிட்டீர்களே. இதெல்லாம் போட வெட்கமில்லையா….
அமைச்சர் சொல்கிறார்… மூன்று மாதம் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்தது. அண்ணாமலை வந்தார் கலவரம் வெடித்தது என்கிறார். இவரெல்லாம் மினிஸ்டராக இருக்க வெட்கப்பட வேண்டும். கட்சி பொறுப்பில் இருப்பதால் மரியாதையாக பேசுகிறேன்.
வீதிக்கு தனியாக வந்தால் வேறுமாதிரி இருக்கும். எப்.ஐ.ஆரை பார்த்தால் ரத்தம் கொதிக்கிறது.
எதாவது கேட்டால், வடக்கு தெற்கு என ஆரம்பித்துவிடுவார்கள். நாளை காலை டேக்ஸ் கொடுக்கவில்லை என்று ஆரம்பிப்பார்கள். அதற்கும் வேலை இல்லாமல் நான் பதில் சொல்லிக்கொண்டிருப்பேன்.
இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும். எத்தனை ஆர்ப்பாட்டம் செய்வது. போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஆளுநரை நாயை இழுத்து செல்வதுபோல் அழைத்து செல்கிறார்கள்.
இனி எங்களது டீலிங்கே வேறு மாதிரி இருக்கும். இனி ஒவ்வொரு வீட்டுக்கு முன்பும் பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இந்த அண்ணாமலை என்ன செய்ய போகிறேன் என்று தெரியுமா?
நாளை காலை 10 மணிக்கு எனது இல்லத்தின் முன்பு என்னை ஆறு முறை சாட்டையால் அடித்துக்கொள்வேன். திமுக ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன்.. நாளையில் இருந்து 48 நாட்களுக்கு விரதம் இருந்து ஆறுபடை முருகனிடம் முறையிடப் போகிறேன்.
நாளை எனக்கு நானே சவுக்கடி கொடுத்து கொள்வேன். ஆனால் பாஜக நிர்வாகிகள் யாரும் இதை செய்ய வேண்டாம். அவர்கள் வீட்டு வாசலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினால் போதும்.. மக்கள் இதைப் பேச வேண்டும். நமது வீட்டில் ஒரு பெண்ணுக்கு இது நடந்தால் நாம் அமைதியாக இருப்போமா.. எஃப்ஐஆர் லீக் ஆன விவகாரத்தில் காவல் ஆணையர் பதவி விலக வேண்டும். குறைந்தது துணை ஆணையர் பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
பேட்டி முடிந்ததும் செருப்பை கழட்டி கையில் எடுத்துக்கொண்டு வெறும் காலில் சென்றார் அண்ணாமலை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர்… ஸ்டாலின் அறிவிப்பு!
ஆன்ட்ராய்டில் புக் செய்தால் ஒரு கட்டணம்: ஐபோனில் புக் செய்தால் விலை அதிகம்… வாடகை கார் தில்லாலங்கடி?