What did you do to Dhanushkodi Annamalai question to Stalin

தனுஷ்கோடிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

அரசியல்

பிரதமர் மோடி குறித்த தமிழக முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

மோடி சுட்ட வடை ஊசி போச்சு!

ராமநாதபுரத்தில் நேற்று (ஆகஸ்ட் 17) நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

“2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோடி பேசும்போது மிகப்பெரிய புண்ணியஸ்தலமான ராமேஸ்வரம் உலக சுற்றுலா தலமாக மாற்றப்படும் என்று சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றினாரா?.

2019 மார்ச் 1ஆம் தேதி தனுஷ்கோடி – ராமேஸ்வரம் இடையே 17 கி.மீ புதிய ரயில் பாதைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நாடாளுமன்ற தேர்தலுக்கு மோடி சுட்ட பல வடைகளில் இதுவும் ஒன்று.

தேர்தல் முடிந்தவுடன் ஊசி போய்விட்டது. 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி தமிழக மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்று மோடி சபதம் ஏற்றார். ஆனால் மோடி ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது” என்று கூறினார் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை, “1964 புயலில் சீர்குலைந்த தனுஷ்கோடி நகரை சீரமைக்க, பிரதமர் மோடிதான் முதன்முதலாக முயற்சி எடுக்கிறார் என்பதைத் தெளிவாக ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
1964க்குப் பிறகு பல முறை மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, மருமகனுக்கும், பேரனுக்கும், மகளுக்கும் மத்திய அமைச்சர் பதவியும், எம்பி பதவியும் வாங்கிக் கொடுப்பதில் மட்டுமே குறியாக இருந்ததால், தமிழக மக்களின் பிரச்சினை குறித்துப் பேசவோ செயல்படவோ நேரமில்லை என்பதை வெளிப்படையாகக் கூறியதற்கு நன்றி முதலமைச்சரே” என்று குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி நடிப்பையே விஞ்சிவிட்டீர்கள்!

மேலும்,  “துண்டுச் சீட்டில் எழுதியிருப்பது என்னவென்று தெரியாமல் மேடைக்குப் பேச வந்தால், இப்படித்தான் பல ஒப்புதல் வாக்குமூலங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.
தமிழக மீனவ சகோதரர்கள் மீது அக்கறை உள்ளது போன்ற முதலமைச்சரின் நடிப்பு, அவரது மகன் அமைச்சர் உதயநிதி நடிப்பை விஞ்சிவிட்டது.

2004 – 2014 பத்து ஆண்டுகளில், காங்கிரஸ் கூட்டணியில் பசையான துறைகளை வாங்கிக் கொண்டு, நாள்தோறும் மீனவ சகோதரர்கள் தாக்கப்பட்டபோதும், கொல்லப்பட்டபோதும், அன்றைய வருமானக் கணக்கில் மட்டுமே முழு கவனத்தையும் வைத்திருந்த உங்கள் நீலிக் கண்ணீரை எல்லாம் மக்கள் நம்பிய காலம் முடிந்து போய்விட்டது.

உங்கள் கட்சிக் கூட்டத்தில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். பொதுமக்கள் மத்தியில் அதே துண்டுச் சீட்டு இனியும் எடுபடாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

புயலில் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு, பிரதமர் மோடி ஆட்சியில்தான் சூரிய ஒளி சக்தி மூலம் மின்சார வசதி வந்தது என்பதை மறந்து விடக் கூடாது. ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி ஏற்படுத்தியதும் பிரதமர் மோடிதான்.

1967 ஆம் ஆண்டிலிருந்து ஆறு முறை தமிழகத்தில் ஆட்சியிலிருந்தும், மத்திய அரசில் பல முறை அமைச்சர் பதவி வகித்தும், உங்களால் தனுஷ்கோடிக்கு அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து கொடுக்க முடியவில்லை என்பது உங்களுக்கு வெட்கமாக இல்லையா ஸ்டாலின் அவர்களே?

மத்திய அரசில், தொழில் துறை, கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரவை எல்லாம் கேட்டுப் பெறத் தெரிந்த உங்களுக்கு, 1964ல், புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி ஞாபகம் வராதது அதிசயமே.

பிரதமர் மோடி மீனவ சகோதரர்களுக்காக, தனி துறையை அமைத்து பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். கிஸான் திட்டம், காப்பீடு திட்டங்கள். தமிழக மீனவர் நலன் காக்க 2820 கோடிக்கும் அதிகமான நிதி, மீன்வளத் துறைக்கு செலவிடப்பட்டுள்ளது.

உங்கள் வாக்குறுதி என்னாச்சு?

ஆனால் நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினீர்களா? மீனவ மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுப்போம். மீன்வளக் கல்லூரி அமைப்போம், குளிர்பதனக் கிடங்கு வசதி அமைப்போம். தடைக்கால நிவாரணம் வழங்குவோம் என உங்கள் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினீர்களா?

பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும், உங்கள் கூட்டணியைப் போன்ற மக்கள் விரோத சக்திகளைத் தாண்டி, முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

ராமேஸ்வரமும் காசியைப் போல விரைவில் உலகப் புகழ்பெற்ற தலம் ஆகும். வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்ற அவர் திமுககாரர் அல்ல. அவரை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும்.

மண்டபத்தில் யாரோ என்னவோ எழுதிக் கொடுத்ததை அப்படியே படித்து விட்டுச் செல்வது அந்தத் தகுதி அல்ல, நீங்கள் வகிக்கும் பதவிக்கு அது அழகும் அல்ல. அடுத்த முறையாவது, துண்டுச் சீட்டை அப்படியே ஒப்பிக்கும் முன்பாக, அதில் இருப்பது திமுகவுக்கு எதிரான ஒப்புதல் வாக்குமூலமா என்பதைச் சரிபார்க்கவும்” என்று தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

பிரியா

நினைவு தினத்தில் நெல்லை கண்ணனுக்கு கிடைத்த பெருமை!

“என் 30 வருட ஆதங்கம்” : மாமன்னன் பற்றி ஏ.ஆர்.ரகுமான்

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *