பிகார் மாநிலம் பாட்னாவில் இன்று(ஜூன் 23) அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் எதிர்கட்சிகளின் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் முடிந்த பின்னர், பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய நிதிஷ் குமார், “கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் கரம் கோர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
இரண்டாவது ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற உள்ளது” என்றார்.
பின்னர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், “நாடாளுமன்ற தேர்தலுக்கு பொதுவான செயல்திட்டத்தை வகுத்து வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலுக்கான செயல்திட்டம் அடுத்த கூட்டத்தில் இறுதி செய்யப்படும்.
மதசார்பற்ற கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் இமாச்சல் பிரதேசம் மாநிலம் சிம்லாவில் நடைபெறும். இந்த கூட்டம் ஜூலை 10 அல்லது 12 ஆம் தேதி நடைபெறும்.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய தலைவர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்” என்று கூறினார்.
ராகுல் காந்தி பேசுகையில், “பாஜகவுக்கு எதிராக வியூகம் வகுப்பது குறித்து அடுத்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும். எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும் கொள்கையை காக்க ஒன்றுபடுவோம்.
இந்தியாவின் நிறுவனங்கள், அமைப்புகளின் குரலை பாஜக, ஆர்.எஸ்.எஸ் நெரித்து வருகின்றன. விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறது பாஜக.
இந்தியாவின் அடித்தளமே தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. கார்கே மற்றும் நிதிஷ் கூறியபடி விரைவில் அடுத்த கூட்டம் நடைபெறும்” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நிதிஷ்குமார் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள பாட்னா கூட்டத்தில் முடிவு?
புதிய தேர்வுக்குழு தலைவர்: பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!