what did senthil balaji said in ED investigation

டிஜிட்டல் திண்ணை: ‌ED போட்ட கிடுக்கிப் பிடி… என்ன சொன்னார் செந்தில் பாலாஜி?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கஸ்டடிக்கு செல்லும்  காட்சிப் படங்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து ஆகஸ்ட் 7ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற அனுமதியோடு செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை கஸ்டடியில் எடுத்திருக்கிறது அமலாக்கத்துறை.

அன்று இரவே புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையை தொடங்கி விட்டார்கள்.

ஜூன் 13ஆம் தேதி சோதனை முடிந்து ஜூன் 14ஆம் தேதி அதிகாலை 1.35 மணிக்கு செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்து விட்ட போதும்… அவரை கஸ்டடியில் எடுப்பதற்கு சுமார் இரண்டு மாத காலம் போராடி இருக்கிறார்கள். ஏற்கனவே கரூரில் நடந்த ஐடி ரெய்டின் போது அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம், செந்தில் பாலாஜியின் அதிகாரபூர்வ அமைச்சர் இல்லத்தில் நடந்த சோதனையின் போது கைது செய்த நிமிடங்களில் நடந்த சம்பவங்கள் ஆகியவை செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கோபத்தை அதிகப்படுத்தி இருந்தன.

இந்தப் பின்னணியில் தான் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் முறையாக அதிகாரிகளின் கஸ்டடிக்கு சென்றிருக்கிறார் செந்தில் பாலாஜி.

பொதுவாகவே அமலாக்கத்துறை கஸ்டடி என்பது முன்கூட்டியே முழுமையாக தயாரிக்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையிலான விசாரணையாக தான் இருக்கும். செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டுகள் மற்றும் சோதனைகளின் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் தான் பல்வேறு கேள்விகளை தயார் செய்து வைத்திருந்தனர்  அமலாக்க அதிகாரிகள்.

சில அதிகாரிகள் செந்தில் பாலாஜியை சூழ்ந்தபடி அமர்ந்திருக்க அவர்கள் கேட்கும் கேள்விகளையும் அதற்கு செந்தில்பாலாஜி அளிக்கும் பதில்களையும் இன்னொரு அதிகாரி டைப் செய்து கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் ஆங்கிலத்தில் கேள்விகளின் ஆழம் புரியாமல் தமிழில் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார் செந்தில் பாலாஜி. அதன்பிறகு தமிழிலும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

இந்த கஸ்டடியில் இதுவரை செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தபோது நடந்த, வேலை வாங்கித் தருவது தொடர்பான விவகாரம் பற்றி 10% மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்கிறார்கள் அமலாக்கத்துறை வட்டாரத்தில். மீதி 90 சதவீத கேள்விகள் செந்தில் பாலாஜி அமைச்சரான பிறகு நடந்த விவகாரங்களை அடிப்படையாக வைத்து தான் கேட்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக ஏழு சொத்து டாக்குமெண்ட்களை செந்தில் பாலாஜியிடம் காட்டிய அமலாக்கத்துறை அதிகாரிகள்… ‘சார்… இந்த சொத்துகள் உங்கள் பெயரில் இல்லை. உங்கள் குடும்பத்தினர் பெயரில் இல்லை. ஆனால் இந்த சொத்துக்களின் உரிமையாளர்களை உங்களுக்கு நன்றாக தெரியும். இந்த சொத்துக்களை உங்கள் மூலம் அவர்கள் வாங்கியிருக்கிறார்கள். இது பற்றி உங்களுக்கு தெரியுமா?’ என்று கேட்டிருக்கிறார்கள்.

அந்த ஆவணங்களை பார்த்த செந்தில் பாலாஜி, ‘இது பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது’ என்று பதிலளித்துள்ளார். விடாத அமலாக்கத்துறை அதிகாரிகள், ‘இந்த சொத்துக்கள் இருக்கும் இடங்களுக்கு நீங்கள் சென்று வந்திருக்கிறீர்கள். அதாவது உங்களுக்கு நினைவிருக்கிறதா?’ என்று கேட்டிருக்கிறார்கள். அதையும் மறுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

அடுத்ததாக அந்த சொத்துக்கள் அமைந்திருக்கும் இடங்களுக்கு செந்தில் பாலாஜி சென்று வந்த போட்டோக்களை காட்டியிருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். அவற்றைப் பார்த்த செந்தில் பாலாஜி, ‘நான் இங்கெல்லாம் போனதே கிடையாது. இதெல்லாம் மார்ஃபிங்’ என்று பதிலளித்திருக்கிறார்.

அடுத்ததாக அந்த சொத்துக்களின் உரிமையாளர்களோடு செந்தில் பாலாஜி மேற்கொண்ட தகவல் பரிமாற்றங்களையும் காட்டியிருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். இதெல்லாம் எனது மெசேஜே கிடையாது என்று அதையும் மறுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

அடுத்ததாக சினிமா துறையில் ஒரு புள்ளிக்கு அரை மணி நேரத்தில் 15 கோடி ரூபாய் நீங்கள் சொல்லி அரேஞ்ஜ் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று கேட்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் ஒரு சம்பவமும் நடக்கவில்லை என்று எடுத்த எடுப்பிலேயே மறுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி‌.

அதன் பிறகு அந்த சினிமா புள்ளி, செந்தில் பாலாஜி மற்றும் பணம் கொண்டு ஒப்படைத்தவர் ஆகியோருக்கு இடையே நடந்த தகவல் பரிமாற்றங்களை, வாட்ஸ் அப் மெசேஜ்களை காட்டியிருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். அவற்றையும் மறுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

இப்படியாக கிடுக்குப் பிடி கேள்விகள் பல செந்தில்பாலாஜியிடம் கேட்கப்பட்ட நிலையில்… தெரியாது, ஞாபகம் இல்லை, என் தம்பிக்கு தெரிந்திருக்கலாம் போன்ற வகைகளில் பதில் சொல்லியிருக்கிறார் செந்தில் பாலாஜி.

சில குறிப்பிட்ட நபர்கள் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் உடன் இருந்த புகைப்படங்களை காண்பித்து இவர்களை தெரியுமா என்று கேட்டிருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். இவர்களை எனக்கு தெரியாது என் தம்பிக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார் செந்தில் பாலாஜி. அடுத்து அதே நபர்கள் செந்தில் பாலாஜியோடு இருக்கும் புகைப்படங்கள் காட்டி,  ‘இவர்களை நினைவிருக்கிறதா?’ என்று கேட்டிருக்கிறார்கள். ஒரு அமைச்சராக என்னைப் பலரும் சந்தித்திருக்கலாம், புகைப்படங்கள் எடுத்திருக்கலாம். அவர்களை எனக்கு நினைவில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும் கரூர் கம்பெனி மூலமாக தென்னிந்திய மாநிலங்களில் வட்டிக்கு விடும் தொழில் நடப்பதையும் அதன் முதலீட்டுப் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் செந்தில் பாலாஜியிடம் பல்வேறு கேள்விகளை கேட்டிருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். வெளிநாட்டு முதலீடுகள் பற்றியும் பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி அளித்த பதில்கள் மூலம் தங்களுக்கு ஓரளவு எதிர்பார்த்த பலன் கிடைத்திருக்கிறது என்பதுதான் அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரத்திலிருந்து கிடைக்கும் தகவல். ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை கஸ்டடி தொடர இருக்கிறது.

இந்த கஸ்டடி பெரும்பாலும் முதலமைச்சர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினரை குறி வைத்து செந்தில் பாலாஜியிடம் இருந்து முக்கியமான தகவல்களை பெறும் நோக்கமாகவே இருக்கிறது. இதற்கான ஒரு நுழைவுச் சீட்டு போலதான் போக்குவரத்து கழக வேலை வாங்கி தருவதில் முறைகேடு என்ற வழக்கில் ED கஸ்டடி பெற்றுள்ளது என்கிறார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தை குறிவைத்து அமலாக்கத்துறை நடத்தும் இந்த வேட்டையில் வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்பதெல்லாம் அமலாக்கத் துறையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தெரிந்து விடும்.  இருந்தாலும் கஸ்டடியில் செந்தில்பாலாஜி என்னென்ன சொல்கிறாரோ என்ற புதிர் திமுக மேலிடம் வரை விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

மணிப்பூர் விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம்: அமித் ஷா

அதிமுகவை தொட்டார் கெட்டார்… யாரை கூறுகிறார் ஜெயக்குமார்?: கரு நாகராஜன் பதில்!

+1
2
+1
1
+1
0
+1
8
+1
0
+1
2
+1
0