ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முன்வந்தால் தார்மீக ஆதரவை தருவோம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று கூறிவிட்டு திமுக பிரச்சார வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டது.
ஆனால் அதிமுகவிலோ ஒரே குழப்பம்தான். இரண்டாகப் பிரிந்து கிடந்துள்ள அதிமுகவில் ஓபிஎஸ்ம், ஈபிஎஸ்ம் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் தனித்தனியாக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவும் கேட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலையை சென்னை தியாகராயர் நகரில் உள்ள கமலாலயத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பில், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் இன்று(ஜனவரி 21)சந்தித்துப் பேசினர்.
அவர்கள் சென்ற 10 நிமிடத்துக்குள்ளேயே ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியனுடன் வந்தார். அவர்களை பாஜக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
அண்ணாமலையை சந்தித்த பின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்த என்னுடைய நிலைப்பாட்டை தெளிவாகக் கூறினேன்.
இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து அக்கட்சி தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
எங்களுடை சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. மாநில நலன் பற்றியும், மத்திய அரசின் நலன் பற்றியும் விரிவாக மனம்விட்டு பேசியிருக்கிறோம்.
ஏற்கனவே அதிமுக சார்பில் போட்டியிடுவோம் என்று சொன்னோம், அப்போது நிருபர் ஒருவர் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டால் உங்களுடை நிலை என்ன என்று கேட்டார்கள்.
அதற்கு தேசிய நலன் கருதி பாரதிய ஜனதா கட்சி போட்டியிட முன்வந்தால் உறுதியாக எங்களுடைய தார்மீக ஆதரவை அளிப்பேன் என்று கூறினேன். அதேநிலைதான் இப்போதும் என்றார்.
கலை.ரா
Comments are closed.