நிலச்சரிவு ஏற்படும் என 7 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்தும் கேரள அரசு என்ன செய்தது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட இதுவரை 200 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இன்னும் 225 பேர் மாயமாகி இருப்பதாகவும், 190 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் மாநிலங்களவையில் வயநாடு நிலச்சரிவு குறித்துப் பேசிய உள் துறை அமைச்சர் அமித்ஷா, “இந்த விஷயத்தில் அரசியல் செய்யாதீர்கள்.
இதுபோன்ற நிகழ்வுகளை முன் கூட்டியே எச்சரிப்பதற்காக முன்னெச்சரிக்கை அமைப்பை உருவாக்க மத்திய அரசு 2,000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 23ஆம் தேதி கேரள மாநிலத்துக்கு நாங்கள் எச்சரிக்கை விடுத்தோம். சம்பவத்திற்கு ஏழு நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை கொடுத்தோம் என்பதைத் தெரியப்படுத்துகிறேன்.
ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் மீண்டும் எச்சரிக்கை கொடுத்தோம்.
ஜூலை 26-ம் தேதி 20 செ.மீ.க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடப்பட்டது.
நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு எனது வழிகாட்டுதலின் படி ஜூலை 23 அன்று 9 என்.டி.ஆர்.எப் குழுக்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டன.
ஆனால் கேரள அரசு என்ன செய்தது? மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டார்களா? அப்படியானால் உயிரிழப்புகள் எப்படி ஏற்பட்டது” எனக் கேள்வி எழுப்பினார்.
எனினும், இந்த நேரத்தில் யாரையும் குறை கூற விரும்பவில்லை என்று தெரிவித்த அமித்ஷா கேரளாவுடன் நிற்க வேண்டிய நேரம் இது என்றும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
234 தொகுதிகளும் என்னுடைய தொகுதிகள் தான்: அடித்துச் சொன்ன ஸ்டாலின்