தேர்தல் சமயத்தில் அம்பானி, அதானி பற்றி பேசுவதை திடீரென நிறுத்தியது ஏன்? என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், வரும் 13ஆம் தேதி தெலங்கானாவில் தேர்தல் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று (மே 8) தெலங்கானா மாநிலம் கரிம்நகர் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், “மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அம்பானி, அதானியை பற்றி விமர்சிப்பதை ராகுல் காந்தி நிறுத்தியது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர், “காங்கிரஸ் இளவரசர் கடந்த 5 ஆண்டுகாலமாக 5 தொழிலதிபர்களை பற்றி பேசி வந்ததை பார்த்திருப்பீர்கள்…
அவர் எழுப்பிய ரஃபேல் விவகாரம் ஒன்றுமில்லாமல் போனதில் இருந்து அவர் புதிய விவகாரத்தை ஓத தொடங்கினார்.
அதாவது அம்பானி, அதானி என சொல்ல ஆரம்பித்தார். தேர்தல் அறிவித்த பிறகு அம்பானி. அதானி பற்றி விமர்சிப்பதை நிறுத்திவிட்டார்.
இன்று தெலங்கானா தேசத்தில் இருந்து கேட்க விரும்புகிறேன்: இந்த தேர்தலில் அம்பானி, அதானியிடம் இருந்து இளவரசர் பெற்ற தொகை எவ்வளவு?
எத்தனை பைகளில் கருப்புப் பணத்தை வாங்கினீர்கள்…நோட்டுகள் நிரப்பப்பட்ட டெம்போ காங்கிரசுக்கு வந்துவிட்டதா?
அம்பானி, அதானி பற்றி பேசுவதை நிறுத்த என்ன டீல் போடப்பட்டது?
கடந்த 5 ஆண்டுகளாக அம்பானி, அதானி என்று சொல்லிக்கொண்டே இருந்துவிட்டு, ஒரே இரவில் அவர்களை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டீர்கள் என்றால்… அவர்களிடம் இருந்து ஏதோ பெற்றிருக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்.
நீங்கள் இந்த நாட்டு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்” என்று கூறினார்.
ஆனால், நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேசிய ராகுல் காந்தி, “பழங்குடியினரை வனவாசிகள் என்று பாஜக சொல்கிறது. பாஜக பழங்குடியினர் நிலத்தை அதானிக்கு கொடுத்துவிடும்.
மோடி என்ன செய்தாலும் அது கோடீஸ்வரர்களுக்காகத்தான் இருக்கும். அவருக்கு அதானி, அம்பானி என 22-25 நண்பர்கள் உள்ளனர். என்ன செய்தாலும் அவர்களுக்காகவே செய்வார்.
நிலம் அவர்களுக்கானது, காடு அவர்களுக்கானது, ஊடகங்கள் அவர்களுடையது, உள்கட்டமைப்பு அவர்களுக்கானது, மேம்பாலம் அவர்களுக்கானது, பெட்ரோல் அவர்களுக்கானது… எல்லாமே அவர்களுக்கானது…
தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பொதுத்துறையில் இடஒதுக்கீடு பெற்றனர்… இப்போது அனைத்தையும் தனியார்மயமாக்குகிறார்கள்… ரயில்வேயும் தனியார் மயமாக்கப்படும் என்று வெளிப்படையாகச் சொல்கிறார்கள்
ரயில்வே, மேம்பாலங்கள் எல்லாம் உங்களுடையது. ஆனால், இவற்றையெல்லாம் மோடி அதானிக்கு கொடுக்கிறார்.
ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் இங்கே இருக்கிறார்கள்… நீங்கள் எப்போதாவது பழங்குடியினரைப் பற்றி பேசுகிறீர்களா… ஒருபோதும் இல்லை.. அம்பானி வீட்டு திருமணத்தை 24 மணி நேரமும் காட்டுகிறார்கள்” என்று விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் ராகுல் அம்பானி, அதானி பற்றி பேசுவதை நிறுத்திவிட்டதாக மோடி கூறியுள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெறுப்பு பேச்சு: மோடிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் வழக்கு!
குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்: குளிர்விக்க வருகிறது கோடைமழை!