மக்களவைத் தேர்தல் வரும் 2024 மே மாதம் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலுக்கான ஆயத்த பணிகளை இப்போதே அரசியல் கட்சியினர் தொடங்கிவிட்டனர். தமிழகத்தை பொறுத்தவரை ’நாற்பதும் நமதே’ என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கூறி வருகிறார்.
இந்திய அளவில் எப்படியாவது பாஜகவை வீட்டுக்கு அனுப்பி, ஆட்சிக் கட்டிலில் அமர எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயன்று வருகின்றன.
மறுபக்கம் ஏற்கனவே இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் பாஜக மூன்றாவது முறையாக ’ஹாட்ரிக்’ வெற்றியை பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து மாநிலங்களிலும் பாஜகவின் 9 ஆண்டுகள் சாதனை பொதுவிளக்க கூட்டத்தை நடத்தி வருகிறது.
இந்தசூழலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த கூட்டம் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தை பாஜக அமைச்சர்களும், எம்.பி.க்களும் விமர்சித்து வருகின்றனர்.
இன்று ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா “எதிர்க்கட்சிகள் இன்று பாட்னாவில் போட்டோ செஷன் நடத்திக் கொண்டிருக்கின்றன.
பிரதமர் மோடியையும் என்.டி.ஏ கூட்டணியையும் எதிர்த்து நிற்க இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். 2024 தேர்தலில் பாஜக 300க்கும் அதிகமான இடங்களில் கண்டிப்பாக வெற்றி பெறும்” என்று கூறினார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, “ராகுல் காந்தியின் பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி லாலு பிரசாத் யாதவையும், நிதிஷ் குமாரையும் சிறையில் அடைத்திருந்தார். ஆனால் இன்று பாட்னாவில் ராகுல் காந்தியை வரவேற்கிறார்கள். அரசியலில் என்ன நடக்கிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
மத்திய பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, “பிரதமர் மோடியை தனியாக தோற்கடிக்க முடியாது என்று சொல்லாமல் சொன்ன காங்கிரஸுக்கு நன்றி” என்று காங்கிரஸை விமர்சித்துள்ளார்.
பாஜக எம்.பி. சுஷில் மோடி, “எதிர்க்கட்சிகள் ஒன்றாக அமர்ந்து டீ குடித்தால் ஒன்றுபட்டது என்று அர்த்தமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவினர் விமர்சித்து வரும் நிலையில் மறுபக்கம் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்து முடிந்தது.
இந்த கூட்டத்தில், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்டிய ஜனதா தளம், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி கட்சி, தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் தளம் என 16 கட்சிகள் கலந்துகொண்டு ஆதரவை தெரிவித்தன.
தெற்கில் இருந்து வடக்கு வரை மேற்குறிப்பிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொண்டு பாஜகவை வீழ்த்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் இந்த ஒருங்கிணைப்பு நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா என நாடே உற்று நோக்கியுள்ளது.
எதிர்கட்சி செல்வாக்கும், பாஜக செல்வாக்கும்
அதன்படி இன்று ஒன்று கூடிய எதிர்க்கட்சிகளுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை பார்ப்போம். மொத்தம் 543 மக்களவை தொகுதிகள் உள்ளன.
2019 தேர்தலில் பெற்ற வெற்றியின் அடிப்படையில், காங்கிரஸ் -49, திமுக -24, திரிணமூல் காங்கிரஸ் -23, ஐக்கிய தனதா தளம்- 19,சிவசேனா (உத்தவ் தாக்ரே) – 12. தேசியவாத காங்கிரஸ் -5, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3, சமாஜ்வாதி கட்சி -3, தேசிய மாநாட்டு கட்சி -3, ஆம் ஆத்மி -1, ஜாக்கண்ட் முக்தி மோர்ச்சா -1, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -1 என 144க்கும் அதிகமான இடங்கள் எதிர்க்கட்சிகளின் கைகளில் உள்ளன.
ஆனால் பாஜக 303 இடங்களில் தனித்து வென்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 351 இடங்களில் வெற்றி பெற்றது. 16க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் பிடித்த இடங்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதலான இடங்களில் பாஜக வெற்றியை பெற்றிருக்கிறது.
மாநிலங்களவையில் 245 எம்.பி.க்களில் மொத்தம் 94 பேர் எதிர்க்கட்சி எம்.பி.க்களாக உள்ளனர். பாஜகவுக்கு 91 எம்.பி.க்களே உள்ளனர்.
மாநில வாரியான செல்வாக்கு!
பாஜக பெரும்பான்மையுடன் உத்தரகாண்ட், உத்தரப் பிரதேஷ், ஹரியானா, மத்தியப் பிரதேஷ், குஜராத், கோவா, அருணாச்சல பிரதேஷ், அசாம், மணிப்பூர், என 9 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. மகாராஷ்டிரா, சிக்கிம், மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஆட்சி செய்யும் கூட்டணியில் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேஷ், கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. பிகாரில் ஐக்கிய ஜனதா தளம், தமிழ்நாட்டில் திமுக என மாநில கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன.
நாடு முழுவதும் 4,033 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்தியா டுடேவின் தகவல்படி, 2012ல் நாடு முழுவதும் காங்கிரஸ் 1,224 இடங்களில் வெற்றி வெற்றிருந்தது . பாஜக 845 இடங்களில் மட்டுமே இருந்தது.
அதுவே, அடுத்த பத்து ஆண்டுகளில் பாஜக பல்வேறு மாநிலங்களில் காலூன்றியது. அதன்படி மே 2023 நிலவரப்படி நாடு முழுவதும் பாஜகவின் எண்ணிக்கை 1329ஆக உயர்ந்திருக்கிறது. காங்கிரஸின் எண்ணிக்கை 735 ஆக குறைந்துள்ளது. மற்றக் கட்சிகள் 1969 இடங்களில் உள்ளன.
இதில் பாஜக வடக்கில் 450, மேற்கில் 390, கிழக்கில் 214, வட கிழக்கில் 180 இடங்களில் உள்ளன. காங்கிரஸ் வடக்கில் 210, மேற்கில் 186, தெற்கில் 177, கிழக்கில் 112, வடகிழக்கில் 50 இடங்களில் மட்டுமே உள்ளன.
தென்னிந்தியாவை பொறுத்தவரை சதவிகித அடிப்படையில் திமுக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகள் 70.5 சதவிகித இடத்திலும் காங்கிரஸ் 19.2 சதவிகித இடத்திலும் பாஜக 14.4 சதவிகித இடத்திலும் உள்ளன.
இந்த கணக்குபடி பார்த்தால் தென்னிந்திய மாநிலங்களை தவிர பாஜகவின் செல்வாக்கு மற்ற மாநிலங்களில் அதிகமாகவே இருக்கிறது. மக்களவையிலும் 303 எம்.பி.க்களை வைத்துள்ளது.
வரும் தேர்தலிலும் 300க்கும் அதிகமான இடங்களில் வெல்ல காய்களை நகர்த்தி வருகிறது. அமித் ஷா, ராஜ் நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா என தென்னிந்திய மாநிலங்களுக்கும் வந்து பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் 10ஆம் தேதி சென்னை வந்த அமித் ஷா என்.டி.ஏ கூட்டணி தமிழகத்தில் 25 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறிவிட்டு சென்றார். அந்தவகையில் தென்மாநிலங்களில் வலுவாக காலூன்றவும் பாஜக திட்டம் தீட்டி வருகிறது.
இந்த சூழலில்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘எதிர்க்கட்சிகளின் கூட்டம் வெறும் போட்டோ செஷன் என்று விமர்சித்திருக்கிறார்.
மறுபக்கம் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, உமர் அப்துல்லா, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 17 கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. இந்த தேர்தலில் பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.
பிகாரில் இருந்து தொடங்கிய எதிர்க்கட்சிகளின் முயற்சி பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? அல்லது பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெறுமா?. தீர்ப்பு மக்கள் கையில். பொறுத்திருந்து பார்ப்போம்.
பிரியா
எதிர்க்கட்சிகள் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் கூறிய 7 ஆலோசனைகள்!
24 மணி நேரத்தில் சாதனை படைத்த ’நா ரெடி பாடல்’!