மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நடந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் மேற்கு வங்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து மேற்கு வங்கத்தில் இன்று (ஜூலை 8) உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
73,887 உள்ளாட்சிப் பதவிகளுக்கான இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
கடந்த மாதம் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.
தேர்தல் பரப்புரைகளின் போது அரசியல் கட்சியினர் இடையே மோதல், வெட்டு குத்து சம்பவங்கள் என பரபரப்பான சூழலில் இன்று காலை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு தொடங்கியது.
பதட்டமான சூழல் காரணமாக மாநிலத் தேர்தல் ஆணையம் கூடுதலாக மத்தியப் படைகளை வரவழைத்திருந்தது.
பாதுகாப்புப் பணியில் 65,000 துணை ராணுவப் படையினர் மற்றும் மாநில காவல்துறை சார்பில் 70 ஆயிரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
கூச்பெஹார் மாவட்டத்தில் ஃபாலிமாரி கிராமப் பஞ்சாயத்தில் பாஜக தேர்தல் முகவர் மாதப் பிஸ்வாஸ் கொலை செய்யப்பட்டார். வாக்குச்சாவடிக்கு வந்த அவரை உள்ளேயே நுழைய விடாமல் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் தடுத்து கொலை செய்ததாக தகவல் வெளியானது.
இந்த தகவல் வெளியான உடனேயே மாநிலம் முழுவதும் பரவலாக வன்முறை வெடிக்க தொடங்கிவிட்டது. நார்த் பர்கானாஸ், முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் வன்முறை மாலை வரை முடிவுக்கு வரவில்லை.
முர்ஷிதாபாத், கூச்பெஹார், கிழக்கு புர்த்வான், மால்டா, 24 சவுத் பர்கானாஸ் போன்ற பகுதிகளில் வன்முறையால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கலவரத்தின் போது வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப் பெட்டிகளை கலவரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தூக்கிச் சென்று உடைத்துள்ளனர். வாக்குச் சீட்டுகளுக்கு தீவைத்தும் எறித்துள்ளனர். சில இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விரட்டியடித்தனர்.
மாலை 5 மணி வரை மேற்கு வங்கத்தில் 66.2 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மேற்கு மிட்னாப்பூரில் 79.1 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்த கலவரம் குறித்து, ”கூடுதல் மத்தியப் படைகளைக் கோரியிருந்தோம். ஆனால், அவர்கள் வந்தபாடில்லை. வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு எதிர்க்கட்சிகளின், குறிப்பாக பாஜகவின் சதியே காரணம்” என்று திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
மோனிஷா
நிதியமைச்சர் பேசும்போதே வெளியேறிய பெண்கள்: கதவைப்பூட்டி தடுத்த பவுன்சர்கள்!
தெலங்கானா மக்களுக்கு ஆபத்து: பிரதமர் மோடி