இந்தியா கூட்டணியில் இருந்து நிதி அயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரே முதல்வரான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், அக்கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி அயோக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, இமாச்சல பிரதேசம், டெல்லி, பஞ்சாப், ஜார்க்கண்ட் என இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மத்திய பட்ஜெட்டை கண்டித்து கலந்துகொள்ளவில்லை.
ஆனால், ‘நிதி அயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டிப்பேன். இந்த கூட்டத்தில் பங்கேற்பேன்’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று (ஜூலை 27) நடைபெற்று வரும் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
ஆனால் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி பாதியிலேயே வெளியேறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு முன் மற்றவர்கள் 20 நிமிடங்கள் வரை பேசினார்கள்.
சந்திரபாபு நாயுடு 20 நிமிடங்கள் பேசினார். அசாம், சத்தீஸ்கர், கோவா மாநில முதல்வர்கள் 10.12 நிமிடங்கள் வரை பேசினார்கள்.
ஆனால் நான் 5 நிமிடங்கள் வரை பேசிய நிலையில் எனது மைக்கை ஆப் செய்துவிட்டார்கள்.
மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது எனது மைக்கை ஆப் செய்துவிட்டார்கள்.
இதனால் மேற்கு வங்கத்தை மட்டும் அவர்கள் அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்த மாநில கட்சிகளையும் அவமதித்திருக்கிறார்கள். என்.டி.ஏ ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது.
என்னை ஏன் தடுக்கிறீர்கள். ஏன் இந்த பாகுபாடு… எதிர்க்கட்சியில் இருந்து நான் மட்டும் தான் வந்திருக்கிறேன். அப்படி இருந்தும் என்னை பேச விடாமல் ஏன் தடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினேன்.
ஆனால் அவர்களது கட்சிக்கும், ஆட்சியாளர்களுக்கும் மட்டும் அதிக வாய்ப்பை கொடுத்தார்கள்” என்று காட்டமாக தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் என்.டி.ஏ கூட்டணியில் இடம் பெற்ற பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த பிகார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை. அந்த மாநிலத்தின் பிரதிநிதியாக துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“வரி வாங்க தெரியுது, திரும்ப கொடுக்க தெரியாதா” : பட்ஜெட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… எவ்வளவுனு பாருங்க!!!