வாச்சாத்தி வன்கொடுமை சம்பவத்தின் போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 29) தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை வரவேற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“10 ஆண்டுகள் வரை நடைபெற்ற வழக்கில் தண்டனை உறுதி செய்வதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் தர வேண்டும் என்பது மட்டுமில்லாமல், தர்மபுரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கை தொடர்ந்து 30 ஆண்டுகளாக நடத்திய பெருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்திற்கும் உண்டு.
இந்த வழக்கின் மீது அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில்,
1992 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த நல்லசிவம் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டிருந்தார்.
தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது சிபிஐ விசாரணையின் அடிப்படையில் இன்றைக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்த தீர்ப்பை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்ப்பு கிடைப்பதற்கு நீண்ட காலம் காத்திருந்தாலும் இந்த தீர்ப்பானது வரவேற்கத்தக்கதாக இருக்கிறது.
ஏழை எளிய மக்கள், ஆதிவாசி, பழங்குடியின மக்கள் என்கிற காரணத்தினால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கொடுமைகளைப் புரியலாம் என்பதற்கு இது ஒரு படிப்பினை என்பதை இதனை செய்யக்கூடிய அதிகாரிகளுக்கு நான் சுட்டிக்காட்டுகிறேன்.
யாராக இருந்தாலும் சட்டம் வழங்கியிருக்கிற உரிமைகள் படி நடந்து கொள்ள வேண்டுமே தவிர காவல்துறையோ, வனத்துறையோ அல்லது வருவாய்த்துறையோ, இப்படி ஒரு சாதாரண ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுக்க கூடாது என்பதை கேட்டுக் கொள்கிறோம்.
இந்த தீர்ப்பிற்காக 30 ஆண்டுகள் ஒரு நீண்ட போராட்டத்தை நடத்தி நீதி பெற்று தந்தவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயர்நீதிமன்றத்திற்கும் என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
வாச்சாத்தி வழக்கு: குற்றவாளிகள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்!
தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை!