முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டு திருமண விழாவில் இன்று (ஜூன் 7) ஒபிஎஸ் உடன் பங்கேற்ற டிடிவி தினகரன், ’இருவரும் சேர்ந்து துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த மாதம் திருச்சியில் மாநாடு நடத்தினார்.
அதனைத்தொடர்ந்து டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார் ஓபிஎஸ்.
இந்நிலையில், வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவிற்கான அழைப்பிதழை சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரிடம் வைத்திலிங்கம் நேரில் கொடுத்து அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் மட்டுமே ஒன்றாக வந்தனர். ஆனால் சசிகலா பங்கேற்கவில்லை.
பின்னர் இருவரும் ஒன்றாக மணமக்களை பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். தொடர்ந்து அங்கிருந்த மேடையில் தினகரன் பேசினார்.

அப்போது அவர், “அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தலைமையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் அமமுக சார்பாக பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் சிலரின் ஆதிக்க மனப்பான்மையால் அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக கட்சியைத் தொடங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இறங்கினோம்.
இந்நிலையில் இந்த திருமணத்தை போன்று அதிமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் இன்று ஒரே நிகழ்ச்சியில் சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குள்ள ஒவ்வொருவரையும் சந்திக்க வாய்ப்பளித்த வைத்திலிங்கத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
மேலும், “கடந்த 30 ஆண்டுகளாக அதிமுகவில் பங்காற்றியவர்கள், சிலரின் சுயநலத்தால் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
நானும், ஓபிஎஸ் அவர்களும் பல்வேறு சூழ்நிலைகளால் பிரிந்து இருந்தாலும் அரசியலைத் தாண்டி எங்களுக்குள் இருக்கும் நட்பு தொடர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சியை கொண்டு வருவதற்காக எங்களது கஷ்டங்களை எல்லாம் மறந்து தற்போது இருவரும் ஒன்றாக கைகோர்த்துள்ளோம்.
அதன் நல்லத் தொடக்கமாக வைத்திலிங்கம் இல்ல திருமண விழா அமைந்துள்ளது. இது இயற்கையாக நடந்த ஒரு இணைப்பு.
இது வருங்காலத்தில் துரோகிகளுக்கு பாடம் புகட்டி, தீய சக்தியான திமுகவை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்றுவதற்கு ஆரம்பமாக அமைந்துள்ளது” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஒரே இன்னிங்ஸில் 903 ரன்கள்… கதிகலங்க வைக்கும் ஓவல் மைதான ரெக்கார்ட்!