அதிமுக சார்பில் கர்நாடகா தேர்தலில் நாங்கள் வெற்றி வேட்பாளரை நிறுத்த போகிறோம் என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி இன்று காலை பெங்களூருவில் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
எடப்பாடி தரப்பு அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளதே?
பன்னீர்செல்வம்: செயற்குழுவாக இருந்தாலும், பொதுக்குழுவாக இருந்தாலும் அல்லது எந்த கூட்டமாக இருந்தாலும் அவர்கள் (எடப்பாடி தரப்பு) கூட்டுவது சட்ட விரோதமானது தான்.
நீங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடித்தத்திற்கு பதில் வந்துள்ளதா?
பன்னீர்செல்வம்: கடந்த 2021ம் ஆண்டு கழக விதிப்படி நடைபெற்ற தேர்தலின் மூலம் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என பதவியேற்றது தான் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது தான் செல்லும்.
உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்துள்ளதே?
வைத்திலிங்கம்: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது ஒரு தனி நீதிபதியின் தீர்ப்பு. அது இறுதியானதல்ல.
பிரதமரை நாளை சந்திப்பீர்களா?
பன்னீர்செல்வம்: நாளை பிரதமர் தமிழ்நாடு வர உள்ள நிலையில் வாய்ப்பிருந்தால் சந்திப்பேன். இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை.
கட்சி தொடர்பான வழக்குகளில் உங்களுக்கு உரிய நியாயம் கிடைத்துள்ளதாக நீங்கள் நினைத்துள்ளீர்களா?
பன்னீர்செல்வம்: கழக விதிப்படி நாங்கள் நீதிமன்றங்களில் வாதம் எடுத்து வைத்தோம். எனினும் எங்களுக்கு அதில் தீர்வு கிடைக்கவில்லை.
மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்ததாக ஆளுநர் கூறியுள்ளாரே?
பன்னீர்செல்வம்: கருத்து கூற விரும்பவில்லை.
பன்ருட்டி ராமச்சந்திரன்: பழனிசாமிகிட்ட போய் இதை கேளுங்க. அவர் தானே அப்போது முதலமைச்சர்.
கர்நாடக தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பன்னீர்செல்வம்: அதிமுக சார்பில் கர்நாடக தேர்தலில் நாங்கள் வெற்றி வேட்பாளரை நிறுத்த போகிறோம். விரைவில் மற்ற அறிவிப்புகள் வெளியிடுவோம்.
திருச்சி மாநாட்டை எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள்?
பன்னீர்செல்வம்: திருச்சி நடைபெறும் மாநாட்டின் மூலம், எம்ஜிஆர் எந்த நோக்கத்திற்காக அதிமுகவை ஆரம்பத்தார் என்று நிரூபணமாகும்.
சசிகலா, டிடிவி தினகரனை மாநாட்டிற்கு அழைப்பீர்களா?
பன்னீர்செல்வம்: யூகமான கேள்விக்கு பதிலளிக்க முடியாது.
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுசெயாலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்ற்த்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதே.
பன்னீர்செல்வம்: உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு நிலுவையில் உள்ளது. தேர்தல் ஆணையத்தில் அதற்கான அத்தாட்சி இருக்கிறது. அந்த ஆவணத்தை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் வழங்கவில்லை. அதனை தேர்தல் ஆணையம் ஒப்படைக்கும் போது யார் அதிமுகவின் பொறுப்பாளர், உண்மையான ஒருங்கிணைப்பாளர் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.
ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்றும் சொல்கிறீர்கள், அதிமுக பொ.செ. தேர்தல் தொடர்பான வழக்கில் நாங்களும் போட்டியிடுவதற்கு தயார் என்கிறீர்கள். இதில் எது உண்மை?
பன்னீர்செல்வம்: பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என்று சொல்லவில்லை. உச்சபட்ச பதவியான ஒருங்கிணைப்பாளரோ, தலைவரோ அதற்குதான் போட்டியிடுவோம் என்று சொன்னோம். ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர்.
எம்ஜிஆர் போன்று எடப்பாடி கறுப்பு கண்ணாடி, தொப்பி அணிந்த புகைப்படம் பார்த்தீர்களா?
பன்னீர்செல்வம்: அதனை பார்த்து தமிழக மக்கள் மட்டுமின்றி அடிப்படை தொண்டர்கள் கூட மிகுந்த மனவேதனை அடைந்தார்கள்.
பன்ருட்டி ராமச்சந்திரன்: எம்ஜிஆரை அப்படி கேலி செய்திருக்க கூடாது.
எடப்பாடிக்கு எதிராக சசிகலா, டிடிவி தினகரன் போன்றோரை ஒருங்கிணைப்பீர்களா?
பன்னீர்செல்வம்: காலம் தான் பதில் சொல்லும்.
அப்போது குறுக்கிட்ட வைத்திலிங்கம், இப்போது எங்களுடைய நோக்கம் அதிமுகவின் முப்பெரும் விழா கூட்டத்தை சிறப்பாக நடத்துவதே. அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ” என்று தெரிவித்து பேட்டியை முடித்து வைத்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கர்நாடக தேர்தலில் போட்டி?: எடியூரப்பாவை சந்தித்த ஓபிஎஸ் அணி