இந்தி திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தி திணிப்பு, ஒரே நுழைவுத் தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் அறிவித்தனர்.
அதன்படி இன்று (அக்டோபர் 15) புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி, எழிலரசன் , தயாநிதி மாறன் எம்.பி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து, ஒன்றியம் என்று சொன்னால்தான் அவர்களுக்குக் கோபம் வரும், அதனால் அப்படியே சொல்லுவோம் என்று தனது உரையை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்,
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நினைத்துக் கொண்டிருப்பது போல இது அதிமுக ஆட்சி அல்ல. முதல்வராக எடப்பாடி பழனிசாமியோ, பன்னீர் செல்வமோ இல்லை. தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
இது ஆர்ப்பாட்டம் தான், போராட்டமாக மாறுவது என்பது உங்கள் கையில் இருக்கிறது. இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம் என்பதுதான் திமுகவின் கொள்கைகளில் ஒன்று.
எங்களுடைய மாநில உரிமைகளை எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
நாங்கள் அண்ணா, கலைஞர் வழியில் வந்தவர்கள். இந்தி திணிப்பை எதிர்த்து ஆட்சியில் அமர்ந்தது திமுக.
எந்த வழியில் இந்தி திணிப்பை தமிழகத்துக்குள் கொண்டு வந்தாலும், எங்களிடம் இருந்து வரும் வார்த்தை இந்தி தெரியாது போடா என்பது தான். மூன்று மொழிப்போர்களைச் சந்தித்திருக்கிறது திமுக. மூன்றாவது மொழிப்போரை முன்னின்று நடத்தியது மாணவர் அணி தான்.
இப்போது மாணவர் அணியும், இளைஞர் அணியும் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. மாணவர் அணியும், இளைஞர் அணியும் கடந்த 4 ஆண்டுகளாக நடத்திய அனைத்து போராட்டத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது.
கலைஞர் கட்டிக்கொடுத்த வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டத்தை நடத்தியிருக்கிறோம். மீண்டும் இந்தி திணிப்பைக் கையில் நீங்கள் எடுத்தீர்கள் என்றால் டெல்லிக்கு வந்து போராட்டத்தை நடத்திக் காட்டுவோம். பாஜக அலுவலகம் முன்பு போராட்டத்தை நடத்துவோம்.
இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்திக் காட்டியிருக்கிறோம். டெல்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் நடத்தியிருக்கிறோம்` என்றார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை எடுத்துச் சென்றதையும் தனது கண்டன உரையில் சுட்டிக்காட்டினார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது என்று கூறி தனது பேச்சை நிறைவு செய்தார் உதயநிதி ஸ்டாலின்.
பிரியா
22% ஈரப்பத நெல் கொள்முதல்: தஞ்சையில் மத்தியக்குழு ஆய்வு!
கடுமையான வலை பயிற்சியில் விராட் கோலி