We will not let CAA in Tamil Nadu
தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கால்வைக்க விடமாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019ஆம் ஆண்டு பாஜக அரசால் கொண்டு வரப்பட்டது.
இச்சட்டத்துக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘சிஏஏ சட்டம் இன்னும் ஒரு வாரத்தில் அமலுக்கு வரும்’ என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் சாந்தனு தாக்குர் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஜனவரி 30) கொல்கத்தாவில் பேசிய அவர், “அயோத்தியில் ராமர் கோயிலை திறந்துவைக்கும் வரலாற்று நிகழ்வு நிறைவடைந்தது. அதன் தொடர்ச்சியாக, அடுத்த ஒரு வாரத்துக்குள் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர்.
இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான சிஏஏ சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான்.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது திமுக. 2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம்.
தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் சிஏஏ கால்வைக்க விடமாட்டோம்” என்று ஸ்பெய்னில் இருந்தவாறு ட்வீட் செய்துள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இம்ரான் கான், மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறை!
ஜம்மு, காஷ்மீரில் பாதுகாப்பான சூழல்: திரவுபதி முர்மு உறுதி!
We will not let CAA in Tamil Nadu