’தமிழக அரசுக்கு எதிராக போராட வேண்டியிருக்கும்’ : திமுகவுக்கு சிபிஎம் தலைவர்கள் எச்சரிக்கை!

Published On:

| By christopher

“தொழிலாளர் உரிமை, அரசு ஊழியர்களின் உரிமைகளுக்கு மாறாக தொடர்ந்து செயல்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக போராட வேண்டி இருக்கும்” என்று சிபிஎம் தலைவர்கள் பேசியது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் நகராட்சி திடலில் நேற்று (ஜனவரி 3) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை செயற்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத், மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி, மத்திய குழு உறுப்பினர் வாசுகி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, மதுரை எம்.பி வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுடன் 3000 பெண்கள் உட்பட 10,000 பேர் பெருந்திரளாக கலந்துகொண்ட இம்மாநாட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் உரையாற்றினார்.

கால் சிலம்புடன் பாஜக ஆளும் மாநிலங்களில் போராடலாமே?

மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி பேசுகையில், “அண்ணா பல்கலைக்கழகத்தில் பெண் ஒருவர் மானபங்கபடுத்தியது கண்டனத்திற்கு உள்ளானது. நாம் தான் முதலில் இச்சம்பவம் தொடர்பாக போராட்டத்தில் இறங்கினோம்.

பாஜகவினர் பல இடங்களில் போராட்டம் நடத்துகின்றனர். பாஜக மகளிர் அணியினர் கால் சிலம்பை கையில் எடுத்துக் கொண்டு நடமாடுகின்றனர். பாஜக ஆளுகின்ற 16 மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறுகின்ற குற்றங்களுக்கு இவர்கள் கால் சிலம்பு கொண்டு போராட வேண்டியதுதானே?” என்று பேசினார்.

திமுகவுடன் கூட்டணி ஏன்?

தொடர்ந்து அரசியல் தலைமை குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேசுகையில், “நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவால் பெரும்பான்மையை அடைய முடியவில்லை. அவர்கள் நாடு முழுவதும் இந்துத்துவா சித்தாந்தம் புகுத்த வேண்டும் என்ற கொள்கையோடு இருக்கிறார்கள். சிறுபான்மை மக்களை இரண்டாம் தர மக்களாக நடத்துகிறது. வகுப்புவாதம், மதவெறி கொண்ட கட்சியாக பிஜேபி விளங்குகிறது.

பாஜக ஆளும் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் பாதையே பின்பற்றப்படுகிறது. தற்போது இஸ்லாமியர்கள் வழிபடக்கூடிய மசூதிகளின் அடியில் கோவில் உள்ளது என்பதை தான் தங்கள் கொள்கையாக பாஜக வைத்திருக்கிறது.

சம்பல் பகுதியில் மசூதி 500 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. அதற்கு அடியில் இந்து கோவில் உள்ளது என கூறி அதில் ஏற்பட்ட மோதலில் ஐந்து இளைஞர்கள் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார்கள்.

பாரதிய ஜனதா கட்சி தனிமைப்படுத்தப்பட வேண்டும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிற அந்த அரசியல் உத்தியை தமிழகத்திலே மார்க்சிஸ்ட் கட்சி நிறைவேற்றி வருகிறது. அந்த நோக்கத்தோடு தான் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பாஜகவை பின்னுக்குத் தள்ளி முறியடிக்க மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளோடு நாம் ஒத்துழைப்பை உருவாக்கிக் கொண்டோம்.

அதனால் தான் 2019ல் நடந்த மக்களவைத் தேர்தல், 2021ல் சட்டப்பேரவைத் தேர்தல், 2024ல் மக்களவைத் தேர்தல் இந்த தேர்தல்களில் எல்லாம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற அணியில் இருக்கக்கூடிய கட்சிகளோடு மார்க்சிஸ்ட் கட்சியும் கரம் கோர்த்தது.

அச்சத்தில் சாம்சங் நிறுவன சங்கத்தை பதிவு செய்யவில்லை!

சமீபத்தில் தமிழகத்தில் சாம்சங் நிறுவன தொழிலாளிகள் தங்களுடைய விருப்பப்படி தொழிற்சங்கத்தை அமைக்க வேண்டும் கூட்டு பேர உரிமை என்பது பாதுகாக்கப்பட வேண்டும் என்று முயற்சித்த போது, அங்கு இருக்கக்கூடிய நிர்வாகத்தால் தடுக்கப்பட்டது. எனவே தொழிலாளிகள் தங்களது அடிப்படை உரிமையான சங்கம் வைக்கும் உரிமைக்காக குரல் கொடுத்து மிக நீண்ட போராட்டத்தை நடத்தினார்கள்.

இந்த போராட்டம் தமிழகத்தில் நடந்தது என்றாலும் கூட நாடு தழுவிய அளவில் இது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கக்கூடிய போராட்டமாக நடந்தது. இந்தப் போராட்டம் என்பது இந்திய தொழிற்சங்க இயக்க வரலாற்றில் முத்திரை பதித்த ஒரு போராட்டம் என்று நான் குறிப்பிட்டு பாராட்ட விரும்புகிறேன்

ஆனால், முதலீடு குறைந்துவிடும் என்று அச்சத்தில், சங்கத்தை பதிவு செய்ய திமுக அரசு இதுவரை மறுத்து வருவது என்பதை ஒரு கவலைக்குரிய விஷயமாக நாம் பார்க்கிறோம்.

பிரச்சனை என்று வந்தால் குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தினுடைய அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகிறது என்கிற நிலைமை வந்தால் அதில் ஒரு அங்குலம் கூட சமரசம் நிச்சயமாக கிடையாது. கடைசிவரை அந்த போராட்டத்திற்கு அனைத்து ஆதரவையும் மார்க்சிஸ்ட் கட்சி வழங்கும் அதைத்தான் இந்த போராட்டத்திலும் செய்தோம்.

ஆனால், இந்த இடத்திலே ஒரு விஷயத்தை திமுக அரசாங்கத்தினுடைய கவனத்திற்கு நான் கொண்டு வர விரும்புகிறேன். நீங்கள் தாராளமாக தொழிற்சாலைகளை அமைக்கலாம், முதலீடுகளை கொண்டு வரலாம் அந்த சுதந்திரம் உரிமை என்பது உங்களுக்கு இருக்கிறது. அதே சமயம் தொழிலாளர் உரிமையை நீங்கள் மறந்து விடக்கூடாது.

நம் போராட்டத்தால் அருந்ததிய உள் ஒதுக்கீடு கிடைத்தது!

நம்மை பொருத்தவரை ஒரு சாதிக்கு கிடைக்கிற எல்லா விதமான உரிமைகளும் பலனும் அதற்குள் இருக்கிற மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதிக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக நாம் முயற்சி செய்கிறோம்.

அந்த அடிப்படையில் தான் அருந்ததிய அமைப்புகளோடு சேர்ந்து தமிழகத்திலே மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய மகத்தான போராட்டத்தின் காரணமாக அருந்ததிய மக்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைத்தது என்பதை இந்த நேரத்திலே நான் நினைவு கூற விரும்புகிறேன்.

பாஜக, ஆர்எஸ்எஸ்ஐ பின்னுக்குத் தள்ள ஒரு பரந்துபட்ட மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து அவர்களோடு ஒத்துழைப்பு நல்குகிற அப்படிப்பட்ட உத்திகளையும் நிச்சயமாக வகுப்போம்.

தமிழகத்தில் முற்போக்கு சக்திகள் மார்க்சிஸ்ட் கட்சி இடதுசாரி சக்திகள் பயணப்பட வேண்டிய திசை வழியை மிகத் தெளிவாக காட்டுகிற மாநாடாக இந்த மாநாடு அமையட்டும்” என்று தெரிவித்தார்.

தொழிலாளர் கொள்கையும் வேண்டும்!

முன்னாள் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பேசுகையில், “மாநில உரிமைகளை பறிக்கும் பொழுதும், மனித உரிமைகளை பறிக்கும் பொழுதும் மாநில அரசுடன் இணைந்து நாங்கள் போராடி உள்ளோம்.

சாம்சங் கம்பெனியில் தொழிலாளர்கள் சங்கம் பதிவு செய்வதற்காக போராட்டம் நடத்திய பொழுது திமுகவின் மூன்று அமைச்சர்கள் மோசடி ஒப்பந்தம் செய்தனர். போராட்டத்தின் போது அமைத்த பந்தல்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

அமைச்சரிடம் இது தொடர்பாக கேட்டபோது, சங்கம் தொடர்பான விஷயம் கோர்ட்டில் உள்ளதால் இதில் நான் பதில் கூற முடியாது, நவம்பர் 6ஆம் தேதி உயர் நீதிமன்றம் போராட்டம் தொடர்பான விளக்கங்களை ஆறு வாரங்களுக்குள் தொழிற்சங்கம் பதிவாளர் முடிவு எடுக்க வேண்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மாநில அரசிடம் கேட்டது. ஆனால், இது நாள் வரை மாநில அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

கல்விக் கொள்கை போல் தொழிலாளர் கொள்கையும் வேண்டும். சாம்சங் கம்பெனியின் தொழிலாளர்கள் சங்கம் ஏன் இன்று வரை பதிவு செய்யவில்லை? இவ்வாறு தொடர்ந்து செயல்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக போராட வேண்டி இருக்கும்” என்று பேசினார்.

நாங்கள் போராட்டங்களை முன்னெடுப்போம்.

மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், “பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொள்கிறார். இனி செருப்பு அணிய மாட்டேன், 48 நாட்கள் ஆறுபடை முருகன் கோவிலுக்கு செல்வதாக கூறுகிறார் அவர் தமிழ்நாட்டை பிஜேபி களமாக மாற்ற பார்க்கிறார். அது ஒருபோதும் நடக்காது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த இடத்தில் ஒரு பெண் பாதிக்கப்பட்டாலும் நாங்கள் ஓடிச் சென்று அந்த பெண்ணிற்காக போராடுகிறோம். அண்ணாமலை ஏன் பொள்ளாச்சியில் நடைபெற்ற கொடுமைக்காக எதுவும் செய்யவில்லை அப்பொழுது அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தார் அதனால் எதுவும் செய்யவில்லை அதைப்பற்றி பேசவும் இல்லை.

தமிழக அரசு ஆட்சியில் செயல்படுத்தப்படாத திட்டங்கள் நிறைய உள்ளன. ஆர்ப்பாட்டம் போராட்டம் எது நடைபெற்றாலும் காவல்துறை வழக்கு பதிவு செய்கிறது தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஏதாவது சட்டம் இயற்றப்பட்டுள்ளதா?

தொழிலாளர்கள் விவசாயிகள் அரசு மற்றும் ஆசிரியர்கள் உரிமைகளை பெற்றெடுக்க நாங்கள் போராட்டங்களை முன்னெடுப்போம். தமிழக அரசு நிறைவேற்றாத திட்டங்கள் நிறைய உள்ளன. அதற்கு தமிழக அரசு தான் பொறுப்பு.

ஏன் இது நாள் வரை சட்டமன்றத்தில் ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் நிறைவேற்ற முடியவில்லை. இந்த மாநாடு தொடர்பான விவாதங்களை நாளை திமுக விவாதிக்க கூடும். மக்கள் பிரச்சனைகளை மையப்படுத்தி பேச நினைத்தால் நாங்கள் வருவோம்” என்று கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

புத்தாண்டில் முதன்முறையாக குறைந்த தங்கம் விலை!

பொங்கல் விடுமுறை : சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே!

கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி : பள்ளித் தாளாளர் உட்பட 3 பேர் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel