2029 ஆம் ஆண்டு தேர்தலிலும் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் வரிசையில் அமர தயாராகிக் கொள்ளுங்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
சண்டிகரில் 24×7 குடிநீர் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் இன்று (ஆகஸ்ட் 4) கலந்து கொண்ட அமைச்சர் அமித்ஷா, “என்டிஏ கூட்டணி இந்த ஆட்சி காலத்தை நிறைவு செய்வது மட்டுமல்லாமல் 2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், வெற்றி பெறும். இந்திய கூட்டணி கட்சிகள் எதிர்க்கட்சிகள் வரிசையில் மீண்டும் அமர தயாராகிக் கொள்ள வேண்டும் ” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் பேசிய அவர், “அடுத்த தேர்தலிலும் பிரதமர் மோடி வெற்றி பெறுவார் என்று நான் உறுதியளிக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற மொத்த இடங்களை காட்டிலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதெல்லாம் அவர்களுக்கு தெரியாது.
எதிர்க்கட்சிகள் சரியாக செயல்படவில்லை. அவர்கள், எதிர்க்கட்சியில் செயல்படும் முறையை சரியாக கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த அரசு நீடிக்க போவது கிடையாது என்று அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாம் இந்த பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்வோம்” என்று கூறினார்.
சமீபத்தில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த என்டிஏ அரசு நிலையற்றது. தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு நீடிக்காது என்று கூறியிருந்தார்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங், இந்த அரசு ஒரு ஆண்டுக்கு மேல் நீடிக்காது என்று கூறியிருந்தார்.
காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சியை சேர்ந்தவர்களும் இது மைனாரிட்டி அரசு, இந்த ஆட்சி நீடிக்காது என்று கூறிவந்த நிலையில் அமித்ஷா இவ்வாறு கூறியுள்ளார்.
பிரியா
Comments are closed.